TNPSC Thervupettagam

தடுப்பூசி: தயக்கம் ஏன்?

February 17 , 2021 1431 days 732 0
  • ஒட்டுமொத்த உலகத்தையே ஓராண்டாக அச்சுறுத்தி வரும் கரோனா தீநுண்மி பெருந்தொற்றுக்கான தடுப்பூசி எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பு உலக மக்கள் அனைவரிடத்திலும் நாள்தோறும் இருந்து வந்தது.
  • இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் ஒவ்வொருவரும் அந்தத் தடுப்பூசிக்கான நேரத்துக்காகக் காத்துக் கிடந்தார்கள். ஆனால், இன்று நடப்பது என்ன? என்பதை அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றின் முடிவு சொல்கிறது. கிட்டத்தட்ட 69சதவிகித மக்கள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் என்று.
  •  கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பமா? என்று நாடு முழுவதும் உள்ள 242 மாவட்டங்களில் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்களில் 66 சதவிகிதம் பேர் ஆண்கள், 33சதவிகிதம் பேர் பெண்கள்.
  • இதில் அக்டோபர் 15-22ஆம் தேதி வரை முதற்கட்ட கருத்துக்கணிப்பும், டிசம்பர் 10-15ஆம் தேதி வரை இரண்டாவதுகட்ட கருத்துக்கணிப்புமாக இரு பகுதிகளாக கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டது. இந்த இரண்டு கருத்துக்கணிப்புகளின் முடிவிலும் கிட்டத்தட்ட 69சதவிகித மக்களுக்கு தயக்கம் இருப்பதாகவே தெரிய வருகிறது.
  •  முதல்முறையாக ஸ்புட்னிக்-வி கோவிட் 19 தடுப்பூசியைக் கண்டுபிடித்ததாக ரஷியா அறிவித்தது. இத்தகைய அறிவிப்பு மருத்துவத்துறையிலும் மிகப்பெரிய வெற்றியாக இந்த நாடுகள் கொண்டாடிய போதும் கூட உலக நாடுகளில் இருந்து பெரிய வரவேற்பு எதுவும் எழவில்லை.
  • அந்தத் தடுப்பு மருந்தை வெற்றிகரமாகக் கருத முடியாது என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. உலகின் இரண்டாவது கொவைட் - 19 தடுப்பு மருந்து மார்டனா அமெரிக்காவில் உள்ள மசாசுùஸட்ஸ் மாகாணத்தில் உள்ள மார்டன் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
  •  இந்தியாவைப் பொறுத்தமாத்திரத்தில் கொவைட் 19 தடுப்பூசி புணேவில் உள்ள சீரம் நிறுவனம் கண்டறிந்தது. அதன் விலை சுமார் 220 ரூபாய் அளவுக்கு விற்பனை செய்ய உத்தேசித்துள்ளதை தெரிவித்தது. ஐரோப்பாவில் கொவைட் 19 தடுப்பூசி 2.5 யூரோக்களுக்கு விற்பனையாகலாம் என்று செய்திகள் சொல்கின்றன.
  • ஹைதராபாத் நகரில் கோவேக்ஸின் என்ற பெயரில் பாரத் பயோடெக் நிறுவனமும், டாக்டர் ரெட்டிஸ் லேபரெட்டரி என்கிற தனியார் நிறுவனமும் கண்டறிந்தது. இத்தடுப்பூசி தயாரிப்பதற்கான வேகத்தை இந்த நிறுவனங்கள் அதிகப்படுத்தின.
  •  ஆனாலும், தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள ஒருவித தயக்கம் நிலவியது. எனவே, இந்தத் தடுப்பூசி பயன்படுத்தினால் உருவாகும் பக்கவிளைவு குறித்து மக்களிடத்திலே நம்பிக்கைகளை விதைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகக் கருதப்பட்டது.
  • இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கும் என்பது குறித்து சந்தேகம் தங்களுக்கு தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் இந்தத் தயக்கத்திற்கான மிக முக்கியக் காரணம் என்று கருத்துக்கணிப்பில் பொதுமக்கள் சொல்லியிருக்கிறார்கள்.
  •  இவை எல்லாவற்றையும் தாண்டி நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாக இருந்தால் தங்களைக் கரோனா தீநுண்மி தாக்காது என்கிற மக்களின் நம்பிக்கையினால் கூட அவர்கள் தடுப்பூசி போடுவதற்கு தயங்குகிறார்கள் என்று தெரிகிறது.
  • இந்நிலையில், சுகாதாரப்பணியாளர்களும், மருத்துவர்களும், முன்களப் பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். தடுப்பூசி போடும் பணி அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்தும் வருகிறது. தடுப்பூசி என்பது நமது ஐயத்துக்கு அப்பாற்பட்டு அறிவியலின் ஒரு தயாரிப்பு.
  •  தரவு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட செயல்முறைகளைக் கொண்டே இந்தத் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தபோதிலும், மக்களுக்கு இன்னும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.
  • தடுப்பூசி என்பது நோயெதிர்ப்பு நினைவகத்தை செயற்கையாகத் தூண்டும் ஒரு முறையாகும். மோசமான நோய்க்கிருமியின் ஆன்டிஜென்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடன் நோயெதிர்ப்பு மண்டலம் ஜோடி ஆன்டிபையாட்டிக்கள் மற்றும் நோயெதிர்ப்பு நினைவகத்தை உருவாக்குவதற்கு தூண்டப்படுகிறது. தடுப்பூசி போடப்படுவதால் நோய்த்தொற்று பாதிப்பு விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து சொல்கிறார்கள்.
  •  குறிப்பாக பெரியம்மை, போலியோ போன்ற கொடிய நோய்கள் பல்வேறுபட்ட தடுப்பூசிகள் மூலமே கட்டுப்படுத்தப்பட்டன. சுமார் 20-க்கும் மேற்பட்ட கொடிய நோய்களை தடுப்பூசிகள் கட்டுப்படுத்தி நோய்களை முற்றாக நீக்கி மனித சமுதாயத்தைப் பாதுகாத்திருக்கின்றன என்பது நினைவில் நிறுத்திப் பார்க்க வேண்டிய ஒன்று.
  •  ஆண்டுதோறும் இரண்டில் இருந்து மூன்று மில்லியன் அளவிற்கு மனிதர்களுடைய இறப்புகளை தடுப்பூசிகள் பாதுகாத்து வருகின்றன என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  •  இந்தியாவினுடைய சர்வதேச நோய் எதிர்ப்பு சக்தி திட்டம் என்பது மிக முக்கியமான ஒரு கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 26 மில்லியன் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்தை வழங்கி குழந்தைகளின் பாதுகாப்பில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்கிறது.
  • இவ்வாறான கடந்தகால வரலாறுகள் மருத்துவத்துறைக்கு இருந்தபோதிலும் கூட குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சி ஆய்வகங்களின் கருத்துருக்களை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும் சந்தேகம் எவ்வாறு எழுந்துள்ளது என்பது வியப்பாக இருக்கிறது.
  •  தன்னார்வலர்களிடம் இருந்து தடுப்பு செலுத்தப்பட்டும் பக்கவிளைவுகளைக் கண்டறிவதற்கு பல்வேறுபட்ட ஆய்வுகளை நடத்தியும், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தியும் இருக்கின்றன இந்தத் தடுப்பூசி மருந்து குறித்தான ஆய்வகங்கள். தற்போது கரோனா நோய்க்கான தடுப்பு மருந்து என்பது ஒரு வருடத்திற்குள் தயாராகி உள்ளது.
  • உலகில் உள்ள 68 தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுதான் வெளிவருகின்றன. இவற்றில் 8 தடுப்பு மருந்துகளுக்கே அவசரகாலப்பயன்பாட்டுக்கு உலகம் முழுவதும் ஒப்புதல் தரப்பட்டது. இவற்றில் இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளன.
  •  சார்ஸ், மெர்ஸ் வகை வைரஸ் பாதிப்புகளுக்கு ஏற்கெனவே அதற்கான மருந்துகள் பல்வேறுபட்ட பணிகள் நடத்தப்பட்ட வேளையில் கரோனா தீநுண்மியின் மரபணு வரிசை கிடைத்த உடனேயே பல்வேறுபட்ட ஆக்கப்பூர்வமான தடுப்பூசிப் பணிகளில் உலக நாடுகள் இறங்கின. தீநுண்மி (வைரஸ்) புரதத்தை உற்பத்தி செய்யும் மூலக்கூறுகளைக் கொண்ட எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி உருவாக்கப்பட்டது. இவையே நோய்க்கான எதிர்ப்பு சக்தியாக உருவாக்கப்பட்டது.
  • இந்தத் தொழில்நுட்பம் புற்றுநோய் சிகிச்சையில் நூறாண்டுகளாகப் பின்பற்றி வந்த ஓர் ஆராய்ச்சிதான். அதைப்போல, ரெப்ளிகேட்டிங் வைரஸ் திசையன்கள் பல ஆண்டுகளாக வளர்ச்சியில் இருந்தன.
  •  2014-2016ஆம் ஆண்டு காலங்களில் எபோலோ தொற்று காலத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் சுமார் 60ஆயிரம் பேருக்கு அடினோ வகையிலான அடிப்படை தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது முந்தைய கட்டங்களில் சிம்பன்சி அடினோ வைரஸ் அடிப்படையிலான பல தடுப்பூசிகளை முயற்சித்து வந்தன. கொவைட் 19 தடுப்பூசியை உருவாக்க இந்தத் தளம் மறுபயன்பாடு செய்யப்பட்டது.
  •  கொவைட் 19 தடுப்பூசிகளை கட்டுப்பாட்டுடன் கூடிய அவசரகாலப்பயன்பாட்டுக்கு அனுமதிப்பது குறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாடு ஆணையம் விடுத்த செய்திக்குறிப்பில் அஸ்ட்ராஜெனிகா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியின் அறிக்கையை இந்திய சீரம் மையம் தாக்கல் செய்தது.
  • வெளிநாட்டு மருந்தக ஆய்வுகளில் இருந்து 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 23,745 பங்கேற்பாளர்களிடம் இருந்து உருவாக்கப்பட்ட பாதுகாப்பு நோய் எதிர்ப்பு திறன் மற்றும் செயல்திறன் தரவை சீரம் மையம் சமர்ப்பித்தது. ஒட்டுமொத்த தடுப்பூசி செயல்திறன் 70.42 சதவிகிதம் என கண்டறியப்பட்டது.
  •  மேலும் நம் நாட்டில் 1,600 பங்கேற்பாளர்களிடம் 2 மற்றும் 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனை நடத்த இந்திய சீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆகவே, இவற்றை விரிவாக ஆய்வு செய்த பின் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு பரிந்துரைத்தது.
  • பாரத் பயோ டெக் நிறுவனம் கோவேக்ஸின் என்ற தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் புணேவில் உள்ள தேசிய வைராலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கியது. இந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் இந்திய அளவிலும் மற்றும் உலக அளவிலும் சிறப்பாக இருந்தது.
  •  கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசியை முதலில் 3 கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள ஊழியர்களுக்குப் போடுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், சுமார் ஒன்றரை லட்சம் பேர் இறந்தும் இருக்கிறார்கள்.
  • இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் இரண்டுமே இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பு தடுப்பூசியாகும். கோவிஷீல்டு இந்தியாவில் உள்ள சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. கோவிஷீல்டு தடுப்பூசிகளை அரசு கொள்முதல் செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  •  நிலைமை இவ்வாறாக இருக்க நாள்தோறும் தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதை அதிகப்படுத்தி பயன்பாட்டை அடைய வேண்டியது மக்களின் பொறுப்பல்லவா! என்கிற நிலையில் அவர்கள் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்பதைக் கண்டறிந்து, அதற்கான போதிய விளக்கத்தை வழங்க வேண்டியது சுகாதாரத்துறையின் தலையாய பணியாக இருக்க வேண்டும்.
  •  மேலும், இதற்கு பெருவகையில் விழிப்புணர்வு இல்லாததன் காரணமாகவும், சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளே காரணமாகவும், சின்னச்சின்ன பக்க விளைவுகள் ஏற்பட்டால் கூட, அதை ஊதிப் பெரிதாக்குவதனாலும் பொதுமக்களிடத்திலே தயக்கம் ஏற்படுவதாகத் தெரிய வருகிறது.
  • நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்க உடலைத்தூண்டுவதில்தான் தடுப்பு மருந்தின் வெற்றி இருக்கிறது. அதற்கு அவகாசம் தேவைப்படும் என்றும் சொல்கிறார்கள்.
  •  ஆக, தயக்கமின்றி கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ஒரு பாதை தெரிகிறது என்றே நம்புவோம்.

நன்றி: தினமணி  (17-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories