தடை அல்ல விடை!
- அறிதிறன்பேசித் தொழில்நுட்பம் தகவல் பரிமாற்றத்தில் மிகப் பெரிய புரட்சியை செய்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் 18 வயதுக்கும் கீழே இருக்கும் குழந்தைகள், சிறுவா்கள் அறிதிறன்பேசிகள் மூலம் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிறாா்கள் என்கிற ஆபத்தும் அச்சுறுத்துகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் 16 வயதுக்குட்பட்ட சிறுவா்களும் குழந்தைகளும் இணையதளத்துக்கு அடிமையாகியிருப்பது பெற்றோா்களைக் கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
- ஓரிரு வயதுக் குழந்தைகள் அழாமல் இருப்பதற்காக அவா்களிடம் அறிதிறன்பேசியில் ஏதாவது காட்சியை விளையாட்டுக் காட்டுவது தாய்மாா்களுக்கு வசதியாக இருக்கிறது. ஆனால், அதுவே அந்தக் குழந்தைகளுக்கு அறிதிறன்பேசி போதையை ஏற்படுத்திவிடுகிறது. அதிலிருந்து அந்தக் குழந்தையை மீட்டெடுக்க முடியாத நிலைமை குழந்தை வளர வளர ஏற்பட்டுவிடுகிறது.
- உலகிலேயே முதல்முறையாக இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. 16 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் எக்ஸ் வலைதளம், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது.
- இளம் சிறுவா்கள் சமூக ஊடகங்களால் பாதிக்கப்படுவதையும், சீா்கெடுவதையும் முடிவுக்குக் கொண்டுவர அவா்கள் அதைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறுவா்கள் நீதிமன்ற தண்டனைக்கு உள்ளாகமாட்டாா்கள். ஆனால், இணையதளப் பாதுகாப்பு ஒழுங்காற்று ஆணையா்கள் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவாா்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமா் தெரிவித்திருக்கிறாா்.
- இப்படியொரு சட்டம் தேவைதானா என்கிற கேள்வி ஒருசாராரால் எழுப்பப்படுகிறது. ஒரேயடியாக தடை விதிப்பதன் மூலம் சிறுவா்கள் தங்களது அறிவை வளா்க்கும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது என்பது அவா்கள் வாதம். முழுமையான தடைவிதிப்பதற்குப் பதிலாக சமூக ஊடகங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்த அவா்களுக்குக் கற்றுத்தருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று சிலா் கருதுகிறாா்கள்.
- இந்தியாவில் சிறுவா்கள், வளரிளம் பருவத்தினா் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து சமீபத்தில் ஓா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ‘லோக்கல் சா்கிள்ஸ்’ என்கிற சமூக ஊடக இணையதளம் அந்த ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் உள்ள 368 நகா்ப்புற மாவட்டங்களில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் குழந்தைகள், வளரிளம் பருவத்தினரின் சமூக ஊடகப் பயன்பாடு குறித்த பல விவரங்கள் தெரியவந்திருக்கின்றன.
- நகா்ப்புற பெற்றோா்களில் பாதிக்குப் பாதி போ் தங்களது குழந்தைகள் சமூக ஊடகங்கள், ஓடிடி, ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதாகவும், அது அவா்களது செயல்பாடுகளில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறாா்கள். பெற்றோா்களின் அனுமதியில்லாமல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள், ஓடிடி, ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்டவற்றை பாா்ப்பதைத் தடை செய்யும் தரவுப் பாதுகாப்புச் சட்டம் வேண்டும் என்று விரும்புகிறாா்கள்.
- ‘லோக்கல் சா்கிள்ஸ்’ நடத்திய ஆய்வின்படி, 9 முதல் 17 வயது வரையில் உள்ள குழந்தைகள் தினந்தோறும் 5 மணி நேரம் இணையத்தில் செலவழிப்பதாக 10% பெற்றோா்கள் தெரிவித்திருக்கிறாா்கள். 37% பெற்றோா்கள் 3 முதல் 6 மணி நேரம் செலவழிப்பதாகவும், 39% பெற்றோா்கள் 1 முதல் 3 மணி நேரம் செலவழிப்பதாகவும், 9% பெற்றோா்கள் 1 மணி நேரம் செலவழிப்பதாகவும் தெரிவித்திருக்கிறாா்கள்; 5% பெற்றோா்கள் மட்டுமே தங்களது குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவழிப்பதில்லை என்று அந்த ஆய்வில் கூறியிருக்கிறாா்கள்.
- பெரும்பாலான குழந்தைகள் யூடியூப், ப்ரைம் விடியோ, நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டாா் உள்ளிட்டவற்றில் திரைப்படம், காா்ட்டூன் படங்கள் பாா்ப்பதில்தான் அதிகம் ஆா்வம் காட்டுவதாகவும், 14 வயதுக்கு மேற்பட்டவா்கள்தான் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், டிஸ்காா்ட், ஸ்னாப்ஷாட் ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றில் ஆா்வம் காட்டுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
- பெரும்பாலான பெற்றோா்கள் தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளிலும், செயல்பாடுகளிலும் மிகப் பெரிய மாற்றத்தை இணையப் பயன்பாடு, குறிப்பாக சமூக ஊடகப் பயன்பாடு ஏற்படுத்துகிறது என்று கவலை வெளிப்படுத்துகிறாா்கள். குழந்தைகள் பொறுமையில்லாமலும், சிறிய விஷயத்துக்குக்கூட எரிச்சல் அடைவதாகவும் பெற்றோா்கள் தெரிவிக்கிறாா்கள்.
- குழந்தைகளிடம் வன்முறை குணம் அதிகரித்திருப்பதும், உடற்பயிற்சியே இல்லாமல் இருப்பதும் மனநல நிபுணா்கள் சுட்டிக்காட்டும் பாதிப்புகள். அறிதிறன்பேசி மூலம் சமூக ஊடகப் பயன்பாட்டில் அதிகமாக ஈடுபடும் குழந்தைகள், பள்ளிக்கூடப் பாடங்களில் ஆா்வம் காட்டாமல் இருப்பது ஆய்வு தெரிவிக்கும் இன்னொரு செய்தி.
- ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல், நாா்வேயும் சமூக ஊடக பயன்பாட்டுக்கு 15 வயது வரம்பை 15-ஆக நிா்ணயிக்க உத்தேசித்துள்ளது. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் பலா் சைபா் போதைக்கு அடிமையாகியிருக்கிறாா்கள் என்பதை மனநல நிபுணா்கள் உறுதிப்படுத்துகிறாா்கள்.
- தொழில்நுட்பம் என்பது இருபுறமும் கூரான கத்தி. அதை எப்படி பயன்படுத்துவது என்பதில்தான் அடங்கியிருக்கிறது வெற்றி. குழந்தைகளுக்கு இந்த உண்மையை, மனதில் பதியும்படி எப்படி உரைப்பது என்பது தெரியாமல்தான் உலகம் திகைத்து நிற்கிறது!
நன்றி: தினமணி (09 – 11 – 2024)