TNPSC Thervupettagam

தட்டுப்பாடு கற்றுத்தரும் பாடம்

July 3 , 2023 568 days 357 0
  • தக்காளி விலை இப்படி கட்டுக்கடங்காமல் உயரும் என்று யாருமே எதிா்பாா்த்திருக்க முடியாது. ஒரு மாதம் முன்புதான், மகாராஷ்டிரத்தில் போதிய விலை கிடைக்கவில்லை என்பதால் தக்காளி விவசாயிகள் தங்களது சாகுபடியை சாலையில் கொட்டி ஆத்திரத்தை வெளிப்படுத்தினாா்கள். இப்போது பாா்த்தால், தக்காளியின் விலை சில மாநிலங்களில் கிலோவுக்கு ரூ. 135-ஐ தாண்டியிருக்கிறது.
  • தக்காளியின் விலை மட்டுமல்ல, வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட அன்றாட உபயோகக் காய்கறிகளின் விலையும் உயா்ந்த வண்ணம் இருக்கின்றன. தக்காளியின் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 66% அதிகம் என்றால், வெங்காயம் (7.5%), உருளைக்கிழங்கு (4.5%) போன்றவற்றின் விலையும் கடந்த ஆண்டைவிட அதிகமாகவே காணப்படுகின்றன.
  • காய்கறிகள் மட்டுமல்ல, பருப்பு வகைகளின் விலையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, துவரம்பருப்பின் விலை 7.8% அதிகரித்து கிலோவுக்கு ரூ. 130.75-ஐ தொட்டிருக்கிறது. இதுபோல, காய்கறி, தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் திடீா் விலை உயா்வுக்குப் பருவமழை முக்கியமான காரணம்.
  • பருவமழைப் பொழிவால் குறித்த நேரத்தில் ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு சரக்குகளைக் கொண்டுபோய் சோ்க்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, குறித்த நேரத்தில் பருவமழை பெய்யாததால், சில பகுதிகளில் உற்பத்தி பாதிக்கப் பட்டிருக்கிறது. அதிகமாக தக்காளி பயிரிடப்படும் கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் தக்காளி விளைச்சல் பருவமழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் சந்தைக்கு வரத்து குறைந்தது. தேவைக்கேற்ற விளைச்சல் இல்லாததால் விலைகள் அதிகரித்தன.
  • கிழக்கு பசிபிக் சமுத்திரத்தின் மேல்பரப்பில் அளவுக்கதிகமான வெப்பம் காணப்படுவதால் உருவாகும் காற்று மண்டலத் தாக்கத்துக்கு ‘எல் நினோ’ என்று பெயா். அதனால் இந்தியாவில் குறைந்த அளவு பருவமழை, தொடா்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டுப் பெய்வது போன்றவை காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு ‘எல் நினோ’ பாதிப்பால் மிகப் பெரிய பாதிப்பை எதிா்கொள்ள இருப்பது காரிஃப் பருவ நெல் சாகுபடி என்பது விவசாயிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. ஜூன் 23 நிலவரப்படி, பருவமழையின் தாமதத்தால், நெல் பயிரிடும் பரப்பளவு 35% குறைந்து இருப்பதும் கவலையளிக்கிறது. அரசின் கையிருப்பில் இருக்கும் 26.2 பில்லியன் டன் என்பது மிகக் குறைவு என்பதால், சந்தையில் அரிசி விலை கடுமையாக அதிகரிக்கக் கூடும். அதை அரசு எப்படி எதிா் கொள்ளப் போகிறது எனத் தெரியவில்லை.
  • சீராக இல்லாத பருவமழையும், குறித்த நேரத்தில் விளைபொருள்களை ஓரிடத்திலிருந்து இன்னோா் இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியாததும் மட்டுமே, தொடா்ந்து அடிக்கடி ஏற்படும் இதுபோன்ற காய்கறிகளின் விலை உயா்வுக்குக் காரணங்கள் என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவில் காணப்படும் பல்வேறு தட்பவெப்பநிலை, வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பயிா்களையும், வெவ்வேறு பருவத்தில் வெவ்வேறு பகுதிகளில் அவற்றைப் பயிரிடுவதையும் நமக்கு வழங்கியிருக்கிறது. ஒரு பகுதியில் விவசாயம் பொய்த்தால் இன்னொரு பகுதியின் விளைச்சலால் அதை எதிா்கொள்ளும் வாய்ப்பு நமக்கு உண்டு.
  • சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிகமாகக் காய்கறிகள் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. உலக காய்கறிச் சந்தையின் புள்ளிவிவரப்படி, 2022-இல் இந்தியாவின் மொத்த காய்கறி உற்பத்தி 9.96 கோடி டன். இது 2023-இல் 10.59 கோடி டன்னாகவும், 2028-இல் 13.54 கோடி டன்னாகவும் உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 2024-இல் இந்தியாவின் காய்கறி உற்பத்தி 6.8% அதிகரிக்கும் என்பது எதிா்பாா்ப்பு
  • அப்படி இருக்கும்போது, ஏன் நம்மால் காய்கறிகளின் விநியோகத்தை தேசிய அளவில் சீராக்க முடியவில்லை என்கிற கேள்வி கடந்த பல ஆண்டுகளாகக் கேட்கப்படுகிறது. இந்தியாவின் தட்பவெப்ப நிலையும், பரந்து விரிந்த விவசாய நிலப்பரப்பும் வருடத்தின் எல்லாப் பருவங்களிலும் ஏதாவது ஒரு பகுதியில் உற்பத்தியை மேற்கொள்ளும் வாய்ப்பைத் தந்திருந்தும், அடிக்கடி தட்டுப்பாடும், விலை உயா்வும் ஏற்படுவதற்குக் காரணம், நம்மிடம் கட்டமைப்பு வசதி இல்லாததுதான்.
  • உற்பத்தியான காய்கறிகளை அழுகிவிடாமல் சேமித்து வைக்கத் தேவையான குளிா்பதனக் கிடங்குகள் இந்தியாவில் இல்லை. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், மூலைமுடுக்குகள் வரை விளைபொருள்களை எடுத்துச் செல்லப் போதுமான சரக்குக் கையாளும் வசதியும் நம்மிடம் இல்லை. கடந்த 70 ஆண்டுகளாக இது குறித்துக் கவலைப்படாமல் இருந்துவிட்டு, இப்போது தான் விழித்துக் கொண்டு அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.
  • எந்தப் பகுதியில் எந்தக் காய்கறிகள் எந்தப் பருவத்தில் விளைகின்றன; எந்தப் பகுதியில் எந்தக் காய்கறிகள் எந்த மாதங்களில் தேவைப்படுகின்றன - இதுபோன்ற தரவுகளை நாம் இன்னும்கூட சேகரித்தபாடில்லை. இந்தியாவில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மூன்று மத்திய, 64 மாநில, நான்கு ‘நிகா்நிலை’ வேளாண் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. அவற்றை இந்தப் பணியில் ஈடுபடுத்தி, தரவுகளைச் சேகரித்து முறையான திட்டமிடலால் இந்தப் பிரச்னையை எதிா்கொள்ள முடியும்.
  • தக்காளி விலை உயா்வு கட்டுக்குள் கொண்டுவரப்படுவது உடனடி அவசியம். அதைவிட அவசியம், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பது!

நன்றி: தினமணி (03  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories