- இன்றைய தலையாய பிரச்னையாக உருவெடுத்துள்ளது தண்ணீர்த் தட்டுப்பாடு. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்தப் பிரச்னை தீவிரமாகி போராடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தண்ணீர் என்னும் இயற்கை ஆதாரம் உலகின் எல்லா உயிர் ஜீவன்களையும் காப்பாற்ற தேவையானது. தரமான உணவுப் பொருள்களை உருவாக்கவும், வாழ்க்கைக்குத் தேவையான பசுமைச் சூழ்நிலைகளை உருவாக்கி பராமரிக்கவும், சமூக-பொருளாதார வளர்ச்சியை உருவாக்கி தொடரவும் தண்ணீர்தான் அடிப்படை.
- உலகின் அனைத்து இடங்களிலும் ஆறு பேரில், இரண்டு பேர் தண்ணீர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.
உலகின் சுற்றுச்சூழல்
- உலகின் சுற்றுச்சூழல் மாசுபட்ட காரணங்களினால் தரமான குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மலைச் சிகரங்களில் உருவாகி பல இடங்களுக்கு வரும் நீர், பூமியின் சமவெளிகளில் உள்ள ஆறுகள், குளங்கள், குட்டைகள், நன்செய் நிலங்கள் ஆகியன வெகுவாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 2030-ஆம் ஆண்டில் உலக மக்களில் பாதி பேர் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள் என 2009-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலக நீர் வளர்ச்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார முன்னேற்றத்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து அவர்களது உணவுப் பழக்கவழக்கங்களும் தரமான நிலையை எட்டியுள்ளது.
- இன்றைய உணவுத் தேவை 2030-ஆம் ஆண்டில் 50 சதவீதமும், 2050-ஆம் ஆண்டில் 70 சதவீதமும் உயர்ந்துவிடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வருமானம் அதிகம் உள்ள மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது; இதனால் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறிவிடும். குறிப்பாக, அசைவ உணவுகளை உண்பவர்களுக்கு உணவுகளைச் சமைப்பதற்கும் உண்பதற்கும் மிக அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது.
- நீராதாரங்களிலிருந்து வரும் தண்ணீரை மிக அதிக அளவில் எடுத்து மக்கள் உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், அந்த நீராதாரங்களுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகமாகவில்லை. எனவே, தண்ணீர்த் தட்டுப்பாடு உருவாகிறது. நிலத்தடி நீர் மிக அதிக அளவில் எடுக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது.
2006-ஆம் ஆண்டில், உலகின் 43 நாடுகளில் சுமார் 70 கோடி பேர் தண்ணீர் தட்டுப்பாடுள்ள இடங்களில் வசிப்பதால் கஷ்டப்பட்டனர் எனக் கணக்கெடுக்கப்பட்டது.
- அந்த நிலைமை இந்தியா, சீனா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இந்தியாவில், 1951-ஆம் ஆண்டில், தனி மனிதனின் ஓராண்டு தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய 9,000 கன அடி தேவைப்பட்டு அது தாராளமாகக் கிடைத்தது. ஆனால், 2011-ஆம் ஆண்டில் தனி மனிதனுக்கு 4,635 கன அடி நீர்தான் கிடைத்தது என்பது கணக்கீட்டில் தெரிய வந்துள்ளது.
- முந்தைய காலங்களில், இயற்கையில் உருவாகும் நீரைப் பகிர்ந்துகொள்ள பல நாடுகளுக்கு இடையில் யுத்தம் நடந்தது. தற்போது ஹரியாணா-பஞ்சாபுக்கு இடையிலும், ஆந்திரம்-அஸ்ஸாம் மற்றும் தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு இடையிலும் தண்ணீர் தொடர்பான மோதல்கள் உள்ளன.
- தண்ணீர்த் தட்டுப்பாடு, சரியான முறையில் அனைத்து இடங்களுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்படாமல் இருப்பது போன்ற விவாதங்களை முன்வைப்பதற்கும் முன்னால், நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டியது, உலகிலேயே மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு உருவாகி, ஒரு நகரத்தின் மக்கள் எல்லோரும் வரிசையில் நின்று தண்ணீர் பெற்று வாழ்ந்த நிலையைத்தான்.
- இதை உலகெங்கிலும் கண்டு வியந்து, டே ஜீரோ எனப் பெயரிடப்பட்டது. இந்த பூஜ்ய நாள் நிகழ்ந்தது தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில்தான்.
1995-ஆம் ஆண்டில் கேப்டவுன் நகரில் மக்கள்தொகை 24 லட்சம்; 20 ஆண்டுகள் கழித்து 2015-ஆம் ஆண்டில் அந்த நகரின் மக்கள்தொகை 41 லட்சமாக அதிகரித்தது. ஆனால், அந்த நகரின் நிர்வாகம் அதற்குத் தேவையான நீராதாரத்தைக் கணக்கிடாமல் இருந்த காரணத்தால் தண்ணீர்த் தட்டுப்பாடு உருவாகியது. 2014-ஆம் ஆண்டில் கேப்டவுன் நகரின் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் நிரம்பி வழிந்தது.
தென்னாப்பிரிக்காவில்
- அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தென்னாப்பிரிக்காவில் கடுமையான வறட்சி நிலவியது. கேப்டவுன் நகரின் முதன்மையான நீராதாரமான திவாட்டர்ஸ்க்ளூஃப் அணையின் நீர் இருப்பு 13 சதவீதமாகக் குறைந்தது.
கேப்டவுன் நகரின் நீர் இருப்பு குறைந்த பின், அந்த நகரின் எல்லா நீர்க் குழாய்களும் அடைக்கப்பட்டுவிட்டன. பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு மட்டும் நீர்க் குழாய்கள் திறந்துவிடப்பட்டன. 2017-ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கி, 2018-ஆம் ஆண்டின் மத்தி வரை தினமும் ஒரு குடும்பத்தில் ஒரு தனி நபருக்கு 100 லிட்டர் தண்ணீர் எனக் கணக்கிட்டு வழங்கப்பட்டது; அதாவது, நீண்ட வரிசையில் மக்கள் நின்று அடையாள அட்டையைக் காட்டி தண்ணீரைப் பெற்றனர். இதுபோன்ற நடைமுறை உலகின் எந்த நாட்டிலும் இதுவரை நடந்தது இல்லை என்பதால், கேப்டவுன் ஜீரோ டே மிகப் பெரிய சரித்திர நிகழ்வானது.
- இந்த படிப்பினையுடன் தமிழக நிலையை ஆராய்ந்தால், பொறுப்பற்ற நிர்வாகச் சீர்கேடுகளால் பூஜ்ய நாளை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர முடியும். மழைப் பொழிவு இல்லை என்பதால், நிலத்தடி நீரை எடுக்க பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுகின்றன. இப்படிச் செய்யலாமா என்று நிர்வாகம் யோசித்துப் பார்த்ததே இல்லை. இதனால், 150 முதல் 200 அடியில் இருந்த நிலத்தடி நீர் அளவு, தற்போது 700 அடி ஆழத்துக்குச் சென்றுள்ளது.
- சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்துக்கு ஒரு முறை பொதுமக்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என குடிநீர் வழங்கல் வாரியம் கூறியது. பலர் நீர் எடுத்த காரணத்தால் சென்னை புறநகர்ப் பகுதிகளின் நீராதாரமாக விளங்கிய பெரும்பாலான கிணறுகள் வற்றிவிட்டன. தொடர்ந்து ஆழ்துளைக் கிணறுகளை பெரும்பாலானோர் தோண்டி நிலைமை மேலும் மோசமானது; குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள், உணவு விடுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீரை தனியார் விற்பனை செய்வதால், வியாபாரம் பெருகி நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது.
ஆழ்துளைக் கிணறு
- ஆழ்துளைக் கிணறுகளை தோண்ட யாரிடமும் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இல்லை என்ற அளவுக்கு நிர்வாகம் சென்று விட்டதால், நினைத்த இடத்தில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுகின்றன. கடற்கரை ஓரத்தில் ஆழ்துளைக் கிணறுகளை 700 அடி ஆழத்தில் அமைக்கப்படும்போது, கடல்நீர் புகுந்து நிலத்தடி நீரில் உப்பு கலந்துவிடுகிறது. இது குறித்துக் கேட்டால், குடியிருப்புப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதைத் தடுப்பது ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது என அரசு நிர்வாகத்தினர் கூறுகின்றனர்; ஏனெனில் தங்களால் தண்ணீர் அளிக்க முடியவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
- சென்னை மக்களுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீரை கடந்த 2006-ஆம் ஆண்டு வரை குடிநீர் வாரியம் வழங்கியது. தமிழகத்துக்கு ஆந்திர மாநிலம் வழங்க வேண்டிய கிருஷ்ணா நதி நீர் ஆண்டுக்கு 12 டி.எம்.சி.; ஆனால், 2018-19-ஆம் ஆண்டில், 1.98 டி.எம்.சி. குடிநீர்தான் கிடைத்தது. இதனால், 83 கோடி லிட்டருக்கு பதிலாக 53 கோடி லிட்டர் குடிநீரையே குடிநீர் வாரியம் விநியோகிக்க முடிந்தது. கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து 18 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இது தவிர விவசாயக் கிணறுகளை வாடகைக்கு அமர்த்தியும் கல்குவாரிகளில் உள்ள நீரை எடுத்தும் 53 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
- சென்னையின் 15 மண்டலங்களில் 34,173 தெருக்கள் உள்ளன; இவற்றில் 28,484 தெருக்களில் தண்ணீர் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இவற்றின் குடிநீர்த் தேவை, பெரிய நீர்த் தொட்டிகள், லாரிகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. வரும் காலங்களில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய ஏரி, குளங்களை தூர்வாரி, நீர்ப் படுகைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிய நீர்வரவுப் பகுதிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
- ]யார் ஆட்சியில் இருந்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு இயற்கையில் உருவாகும் என்பதை மறந்துவிடக் கூடாது. நமது சிரத்தையின்மையாலும் தவறான நிர்வாகத்தாலும், மழைநீர் வங்காள விரிகுடாவிலும், அரேபியக் கடலிலும் கலந்துவிடுகிறது என்றார் மகாத்மா காந்தி. தண்ணீர் பிரச்னை உருவான பிறகு, அது குறித்து விவாதிப்பதைவிட, அது உருவாகாமல் தடுப்பது எப்படி என்பது குறித்துச் சிந்தித்து நடவடிக்கை எடுப்பதுதான் சிறந்த நிர்வாகத்தின் அடையாளம்.
- இதில் அரசியல்வாதிகள் மற்றும் எதிர்க்கட்சியினரையும் விட அதிகாரிகளுக்கே அதிக கடமை உள்ளது. செயல்திறன் உள்ள உயர் அதிகாரிகள் கூறும் யோசனைகளை துறையின் தொடர்புடைய அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டு, அவற்றை நிறைவேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும்.
நன்றி: தினமணி (20-06-2019)