- சென்ற வாரம் என் அண்ணன் மகன் சென்னையிலிருந்து ராஜபாளையம் வந்திருந்தபோது, சென்னை மக்கள் தண்ணீர் இல்லாமல் படும் அவஸ்தைகளைக் கண்ணீர்விடாத குறையாகக் கூறினான். குடிதண்ணீர் தேவைக்கு மாநகராட்சியிலும், தனியாரிடமும் பதிந்துவைத்தாலும் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்றும், அப்படியே வந்தாலும் அந்தத் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதாகவும், அருவருப்பான ருசியும் வாசனையும் குடலைப் புரட்டுவதாகவும், இதனால் உடலுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அச்சப்படுவதாகவும் சொன்னான். இப்படிப்பட்ட அச்சமே சென்னைவாசிகள் அநேகரையும் படுத்தியெடுத்துவிடும். இதை எப்படி எதிர்கொள்வது?
- இங்குமட்டுமல்ல, உலகெங்கிலும் சுமார் 300 கோடி மக்கள், வருடத்தில் குறைந்தது ஒரு மாதமாவது தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 210 கோடி மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அசுத்தமான தண்ணீர் குடித்து பலதரப்பட்ட நோய்கள் வந்து, சுமார் 80 லட்சம் பேர் வருடந்தோறும் இறக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள்தான் இதற்கு அதிகம் பலியாகின்றனர். சென்னையிலும் இந்தச் சோக நிகழ்வுகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. ஆனால், அரசின் கணக்குக்கு அவை தப்பிவிடும்.
தண்ணீரின் சுத்தம் காக்கப்படுமா?
- தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது, பயனாளிகளுக்குத் தண்ணீரின் சுத்தம் பற்றி யோசிக்கத் தோன்றுவதில்லை; தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கும் அவர்களால், அதன் தரம் குறித்துப் பேச முடிவதில்லை. அதேநேரத்தில், வணிக நோக்கத்தில் தண்ணீர் வழங்கும் நிறுவனங்களோ அறம் காப்பதில்லை. பயனாளிக்குச் சுத்தமான தண்ணீரை வழங்குகிறோமா, அது குடிக்கத் தகுந்ததா என்றெல்லாம் அவர்கள் தரம் பார்ப்பதில்லை. இம்மாதிரியான அலட்சியங்கள் தரும் விளைவுகள்தான் அந்த மரணங்கள்.
- தினமும் தண்ணீர் தேடி அலைபவர்களுக்கு உடல், மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவது ஒருபுறமிருக்க, மாசடைந்த குடிநீரைப் பயன்படுத்துவோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, இரைப்பைப் புண், காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, சீதபேதி, குடல்புழுத் தொல்லை, எலிக் காய்ச்சல் எனப் பல்வேறு நோய்கள் வரிசைகட்டி வருவதும் உண்டு. இவை எல்லாமே தொற்றுநோய்கள். அடுத்தவர்களுக்கு எளிதில் பரவக்கூடியவை. இவற்றைத் தவிர்ப்பதற்கு மாநகராட்சி மூலமும் தனியாராலும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மிகவும் சுத்தமாக இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், நடைமுறையில் அது இல்லை. ஆகவே, நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வகைசெய்ய வேண்டும்.
- தண்ணீர் வண்டிகளில் வரும் தண்ணீரை அப்படியே குடிக்கப் பயன்படுத்தாதீர்கள். குடிக்கப் பயன்படுத்தும் எந்த ஒரு தண்ணீரையும் அது புட்டியில் அல்லது கேனில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் சுத்தமான பருத்தித் துணியில் வடிகட்டி, குறைந்தது 10 நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் குடிப்பதுதான் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பு. தண்ணீரை மைக்ரோ ஓவனில் கொதிக்கவைப்பது இன்னும் நல்லது; விரைவாகவும் கொதிக்க வைத்துவிடலாம். தண்ணீரைக் கொதிக்க வைப்பதால் அதிலுள்ள பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிக் கிருமிகள் போன்றவை இறந்துவிடும்; தண்ணீர் சுத்தமாகும்.
கழிப்பறைப் பிரச்சினை
- தண்ணீரைக் கொதிக்கவைக்க நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு அடுத்த வழி இது. தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்கு குளோரின் மாத்திரையும் அயோடின் மாத்திரையும் இருக்கின்றன. அரை கிராம் குளோரின் மாத்திரை 20 லிட்டர் தண்ணீரைச் சுத்தப்படுத்தும். அயோடின் மாத்திரையை அது தயாரிக்கும் நிறுவனத்தைப் பொறுத்துப் பயன்படுத்த வேண்டும். இந்த மாத்திரையைத் தண்ணீரில் கலந்து அரை மணி நேரம் கழித்துப் பயன்படுத்தலாம். வண்டியில் வாங்கிய தண்ணீர் முழுவதையும் இப்படிச் சுத்தப்படுத்திக்கொண்டால் பாதுகாப்பான தண்ணீருக்கு உத்தரவாதம் கிடைக்கும்.
- தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரிக்கும்போது பொதுமக்களுக்குப் பிரதான பிரச்சினையாக உருவெடுப்பது கழிப்பறை வசதி இல்லாதது. பொதுக் கழிப்பறைகள், வாடகைக் கழிப்பறைகள், மின் கழிப்பறைகள் என்று ஆங்காங்கே இருந்தாலும், அவை எல்லாமே தண்ணீர்த் தட்டுப்பாட்டில் சுத்தமில்லாமலும் சரியாகப் பராமரிக்கப்படாமலும்தான் இருக்கும். ஆண்களாவது சாலை ஓரங்களைக் கழிப்பறை களாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். பகலில் பெண்கள் பாடுதான் திண்டாட்டம். அரசுப் பள்ளி/ கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களின் நிலைமை இன்னும் பரிதாபம். வீட்டில் முதியோரின் நிலைமையைச் சொல்லவே வேண்டாம்.
- இவர்கள் எல்லோருமே இயற்கை உபாதைகளைக் காலத்தோடு கழிக்க முடியாதபோது, அவற்றை அடக்கிக்கொள்வார்கள்; தண்ணீர் குடித்தால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்காகத் தேவையான அளவுக்குத் தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள். இதனால், உடலில் நீரிழப்பு, சிறுநீர்த் தடத் தொற்று, மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினைகள், வாய்வு சேருதல், வாய் நாற்றம், சிறுநீரகப் பிரச்சினைகள் எனப் பல்வேறு சங்கடங்கள் உடலை வருத்தும். இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்க இவர்கள் தர்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, நெல்லி, பலாப்பழம், அன்னாசி, கிருணிப்பழம், நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடலாம். காபி, தேநீர் மற்றும் செயற்கை பானங்கள் அருந்துவதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், பதநீர், பானகம் ஆகியவற்றை அருந்தலாம். திட உணவுகளையும் துரித உணவுகளையும் குறைத்துக்கொண்டு, திரவ உணவுகளை அதிகப்படுத்தலாம். கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயம், தக்காளி முதலிய நீர்ச்சத்து நிறைந்த காய்களைச் சமைத்துச் சாப்பிடலாம். இதன் பலனால், உடலில் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். இந்த உணவு மாற்றத்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியது வராது.
அரசின் கடமை
- சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் சுகாதாரம் இல்லாத கழிப்பறைகள் மூலம் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற நகரங்களிலும் வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா போன்ற தொற்றுநோய்கள் கொள்ளைநோய்களாக உருவெடுத்துப் பேரிழப்புகளைச் சந்திப்பதற்கு முன்னால், அரசு இயந்திரங்கள் விழித்துக்கொள்ள வேண்டும். தற்போது அவசரகதியாகவும் மக்களின் அத்தியாவசியத் தேவையாகவும் இருக்கும் பாதுகாப்பான குடிநீர் வசதிக்கும், சரியான பராமரிப்பில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்படுத்த வேண்டிய கழிப்பறை வசதிகளுக்கும் உத்தரவாதம் தர வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுக்கு உள்ள கடமைகள்தானே!
நன்றி: இந்து தமிழ் திசை (01-07-2019)