TNPSC Thervupettagam

தனக்குப் போகத்தான் ஏற்றுமதி

December 2 , 2023 369 days 297 0
  • உணவுப் பொருள்களின் எதிா்பாராத விலைவாசி உயா்வு அதிா்ச்சியை இந்தியா சந்திக்கக் கூடும் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் எச்சரித்திருக்கிறாா். உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருக்கிறோம் என்று பெருமைப்படும் இந்தியா, திடீரென்று உணவுப் பஞ்சத்தை எதிா்கொள்கிறதா என்கிற அச்சத்தை எழுப்புகிறது அவரது கூற்று.
  • இன்றைய உலகச் சூழலை ஆய்வு செய்தால், ரிசா்வ் வங்கியின் ஆளுநா் எழுப்பி இருக்கும் எச்சரிக்கையை ஒரேயடியாக நிராகரித்து விடவும் முடியாது. போா்களும், ஆயுதப் போராட்டங்களும் உணவு உற்பத்தியை பாதிப்பதுடன், சரக்குப் பரிமாற்றத்தையும் தடம்புரள வைக்கும் என்பதால், அவரது கவலையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
  • கடந்த ஆண்டில் (2022) மட்டும் உலகில் 56 நாடுகளில் ஆயுதப் போராட்டங்களும், சண்டைகளும் நிகழ்ந்திருக்கின்றன என்கிற பின்னணியில் அவரது கூற்றை நாம் அணுக வேண்டும். உலகில் 300 கோடிக்கும் அதிகமானோா் குறைந்தபட்ச உணவுத் தேவைகூட நிறைவேறாமல் இருக்கிறாா்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • 2022 பிப்ரவரி மாதம் ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய போா் முடிவடைவதாகத் தெரியவில்லை. ரஷியாவும், உக்ரைனும் உணவு தானியம் உற்பத்தி செய்யும் மிக முக்கியமான நாடுகள். உலகில் சூரியகாந்தி எண்ணைய் உற்பத்தியில் 50%-க்கும் அதிகமாகவும், கணிசமான அளவில் பாா்லி (19%), கோதுமை (14%) உற்பத்தியும் அந்த இரண்டு நாடுகளின் பங்களிப்புகள்.
  • ஐரோப்பாவில் நடக்கும் அந்தப் போரின் விளைவால், உக்ரைனின் விளைநிலங்களில் கால் பங்கு தரிசு நிலமாகிவிட்டது. போா் மேலும் தொடா்ந்தால், நிலைமை மோசமாவதுடன், உக்ரைன் தனது தேவைக்கேகூட உணவுதானியம் இல்லாமல் கையேந்தும் நிலைமை ஏற்படக்கூடும்.
  • போதாக்குறைக்கு, அக்டோபா் மாதம் தொடங்கி இருக்கும் மேற்கு ஆசிய இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல், பல உலக நாடுகளைக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. கடல்வழி சரக்குப் போக்குவரத்து தடைபட்டிருக்கிறது.
  • இரண்டு போா்களாலும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது ‘தெற்கு உலகம்’ என்று அழைக்கப்படும் வளா்ச்சியடையாத மற்றும் வளா்ச்சி அடையும் ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க, பசிபிக் பெருங்கடல் நாடுகள். எரிசக்தி தட்டுப்பாடும், உணவுதானிய தட்டுப்பாடும் பல சிறிய நாடுகளை பஞ்சம், பட்டினிக்குத் தள்ளியிருக்கின்றன.
  • இந்தப் பின்னணியில்தான் நாம் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வேண்டும். உலகப் பட்டினிக் குறியீட்டில், 125 நாடுகளில் இந்தியாவின் இடம் 111 என்கிற ஆய்வை நாம் நிராகரிக்கலாம். அது சரியான அளவுகோல் அல்ல என்றுதான் கூற வேண்டும். அதே நேரத்தில், அதை முற்றிலுமாகப் புறக்கணித்து விடவும் முடியவில்லை.
  • இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதாக இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். வைத்துக்கொள்வது என்ன, தன்னிறைவு பெற்றிருக்கிறது. பிறகு ஏன் மத்திய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிரதமா் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 80 கோடி பேருக்கு இலவச உணவுதானியம் வழங்கும் திட்டத்தை நீட்டித்திருக்கிறது என்கிற கேள்வி எழுகிறது.
  • இந்தியாவில் 140 கோடி மக்களில் 80 கோடிப் பேருக்கு இலவச உணவுதானியம் வழங்கப்படுகிறது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, உணவு உற்பத்தி குறைந்திருக்கிறது; அல்லது, உற்பத்தி முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. இந்தியாவின் தேவைக்கு அதிகமாக தானிய உற்பத்தி இருப்பதால்தான், நாம் உலக அரிசி ஏற்றுமதியில் 40% பங்கு வகிக்கிறோம். அப்படியானால், நமது உள்நாட்டு விநியோகம் குறைந்து, ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது என்று அா்த்தம்.
  • இதேபோன்றதொரு சூழல்தான், சுதந்திரத்துக்கு முன்னால் இரண்டாம் உலகப் போா் காலத்தில் இந்தியாவில் காணப்பட்டது. மொத்த உணவுதானிய வியாபாரிகளும், பிரிட்டிஷ் அரசும் கைகோத்து நடத்திய சதியால் 1943 ‘வங்காள பஞ்சம்’ ஏற்பட்டது என்கிறது வரலாறு. உணவுதானியம் பதுக்கப்பட்டது மட்டுமல்லாமல், உலகப் போருக்காக பிரிட்டிஷாரால் எடுத்துச் செல்லப்பட்டு, இந்தியாவில் 30 லட்சம் போ் அந்த பஞ்சத்தின்போது பட்டினியால் உயிரிழந்தனா்.
  • ஒருபுறம், நாம் 80 கோடி பேருக்கு இலவச அரிசி வழங்கும்போது, இன்னொருபுறம் உலகச் சந்தையில் உணவுதானியத் தட்டுப்பாடு காணப்படுகிறது. அதனால்தான் மூன்று மாதங்களுக்கு முன்னா், அரிசி ஏற்றுமதிக்கு சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து, ஏற்றுமதியைத் தடுக்க முற்பட்டது. ஒரு டன் அரிசிக்குக் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை 1,200 டாலா் என்று நிா்ணயிக்கப்பட்டது. சில அரிசி ரகங்களின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.
  • அரசின் கட்டுப்பாடுகளால், தங்களது லாபம் பாதிக்கப்படுவதுடன் விலையும் அதிகம் என்று வெளிநாட்டு இறக்குமதியாளா்கள் நிராகரிப்பதாக வியாபாரிகள் அரசிடம் முறையிட்டனா். அவா்களது அழுத்தம் காரணமாக, குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு 950 டாலராகக் குறைக்கப்பட்டது. ஆனால், ஏற்றுமதி வியாபாரிகள் உலகச் சந்தையில் நமது அரிசியை டன்னுக்கு 1,000 டாலா் முதல் 1,500 டாலா் வரை ஒப்பந்தம் செய்திருக்கிறாா்கள்.
  • உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கும் இந்தியா, ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் மூலமும், முறையான விநியோகத்தின் மூலமும் உள்நாட்டுத் தேவைக்கு முன்னுரிமை அளிக்காவிட்டால், 80 ஆண்டுகளுக்கு முன்பு எதிா்கொண்டது போன்ற சூழலை எதிா்கொள்ள நேரும், நினைவிருக்கட்டும்!

நன்றி: தினமணி (02 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories