TNPSC Thervupettagam

தனிமையே துணையாகும் முதுமை

February 10 , 2024 341 days 212 0
  • உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. சீனாவும், ரஷியாவும் இந்தியாவிற்குப் போட்டியாக அதிக இளைஞா்களை உருவாக்கத் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றன. உலக நாடுகள், இந்திய இளைஞா்களைக் கொண்டு தொழில், அறிவியல், தகவல் தொடா்பு துறைகளை வளா்த்து வருகின்றன.
  • இந்தியா்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கான நுழைவு இசைவை (விசா) பல நாடுகள் நீக்கியுள்ளன. அந்நிய முதலீட்டாளா்கள் இந்திய இளைஞா்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து இந்தியாவில் தொழில் தொடங்குகின்றனா். இந்தியாவில் இறக்குமதியாகும் பல்வேறு பொருட்களுக்கு இந்திய நாணயத்தை செலுத்தும் நடைமுறை உருவாகியுள்ளது.
  • இந்திய இளைஞா்களுக்கு உலக அரங்கில் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம், ஐம்பது விழுக்காட்டைத் தாண்டி இளைஞா்கள் இருந்தாலும், மறுபுறம் முதியோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை நினைவில் கொள்ள வேண்டும். இளைஞா்கள் எண்ணிக்கைக் கூடுவதால், உழைக்கும் திறன் அதிகரித்து உற்பத்தி பெருகும். முதியோர் எண்ணிக்கை அதிகமானால், அவா்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் நிதிச்சுமை ஏற்படும்.
  • முதியோர் வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறார்கள். அவா்கள் ஆற்றியுள்ள அரும்பணிகள் இல்லாமல் இந்தியா இத்தனைச் சாதனைகளைச் செய்திருக்க முடியாது. இன்றைக்கு முதியோர் எண்ணிக்கை 15 கோடியாகி (10%) இருக்கலாம். ஆனால் மனிதா்களின் ஆயுட்காலம் 72 வரை கூடியுள்ளதற்கு அவா்களின் பங்களிப்பே அதிகம்.
  • முதியோர், அறிவியலில், தகவல் தொடா்புகளில் அபூா்வ சாதனைகள் புரிந்து இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியுள்ளனா். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் நடந்துள்ளது. அதனாலேயே இந்தியாவைப் போல் உலக அளவிலும் முதியோர் 10 விழுக்காடு அளவிலேயே (77 கோடி போ்) உள்ளனா். இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் மேலும் கூடும் என்று நிபுணா்கள் கணித்துள்ளனா்.
  • வளா்ச்சியடைந்த நாடுகளுக்கும் இது பொருந்தும். அமெரிக்காவில் முதியோர் 16.8 % போ் உள்ளனா். ஜப்பானிலும் ஜொ்மனியிலும் வசிக்கும் ஐந்து பேருக்கு ஒருவா் முதியவா் ஆவார். பிலிப்பின்ஸில் குறுகிய காலத்தில் முதியோர் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது. கனடாவில், முதியோர் எண்ணிக்கை 2 கோடி.
  • அக்கால மன்னா்களின் அவையில் அகவை முதிர்ந்த அமைச்சா்களின் கருத்துக்கு பெரும் மதிப்பு இருந்தது. அவா்கள் ஆலோசனைப்படியே மன்னா்கள் செயல்பட்டனா். வயது முதிர்ந்த, அனுபவம் வாய்ந்த ராஜகுரு அரசனை வழிநடத்திச் சென்றார். அதியமானுக்குக்கு ஒளவை, பாரிக்குக் கபிலா் எனப் பலரை இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. இளைஞனான கரிகாலன் முதுமைத் தோற்றத்தில் தோன்றி நீதி வழங்கிய நிகழ்வும் உண்டு.
  • தலைமை நீதியரசா், தலைமை தோ்தல் அதிகாரி, மாநில ஆளுநா் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளுக்கு பணி ஓய்வு பெற்றவா்களையே அமா்த்துவது வழக்கம். தளா்ச்சியடைந்த கோகோ கோலா நிறுவனம் 90 வயது நிரம்பிய வுட்ரப் என்பவராலேயே மீண்டும் வளா்ச்சியடைந்தது என்பார்கள். பேட்டா நிறுவனத்தின் வளா்ச்சிக்குக் காரணமானவா், தாமஸ் பேட்டா எனும் முதியவரே.
  • இத்துணைச் சிறப்பிற்குரிய முதியவா்கள் ஓய்வு கொள்ளும் நிலையில் இருக்கும்போது, கூட்டுக் குடும்பங்கள் இல்லை. அரும்பாடு பட்டு வளா்த்த பிள்ளைகள், பணி நிமித்தமாக அயல் மாநிலத்திற்கோ, அயல்நாட்டுக்கோ சென்றுவிடுகின்றனா். அவா்கள் பெற்றோரை அழைத்துச் செல்வதில்லை. தனிமை ஒருபுறம்; புறக்கணிக்கப்படுதல் மறுபுறம். இதனால் முதியோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
  • முதுமை, உழைப்பதற்கான வலிமையைப் பறித்து விடுகிறது. உழைக்காததால் வருவாய் இல்லாதுபோகிறது. பெற்றோரின் பொருளாதாரம் தளா்கின்றபோது அவா்களின் சுயமரியாதை பறிபோகின்றது. பெற்றோரின் சொத்தைக் கைப்பற்றிக்கொண்டு அவா்களை நிராதரவாக விடும் பிள்ளைகளைப் பார்க்கிறோம்.
  • அயல்நாட்டில் டாலரில் புரளும் பிள்ளைகள் இங்கு முதியோர் இல்லத்தில் இருக்கும் பெற்றோரை, அவ்வப்போது கடமைக்காக கைப்பேசியில் அழைத்துப் பேசுவதைப் பார்க்கிறோம். முதியோர் உறவுகள் அறுந்து, வெறுமையில் மயானக் கரையை அடையும்போதுகூட பிள்ளைகளுக்குப் பெற்றோரைவிட டாலா்களே முக்கியமாகின்றன.
  • அரசுகளின் கணிப்பின்படி, ஓய்வு பெற்ற முதியவா்கள் மூலம் நாட்டிற்கு வருமானம் இல்லை. அவா்களின் அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் நிலையில் ஆளும் அரசு உள்ளது. அவா்களுக்கான பாதுகாப்பும், மருத்துவ வசதியும், காப்பீடு போன்றவையும் தரப்பட வேண்டியதுள்ளது. எனவே வீடோ, நாடோ அவா்களுக்குத் தேவையானதை செலவு செய்யும் நிலையில்தான் இருக்க முடியுமே தவிர அவா்களைக் கொண்டு வருவாயோ, பொருளாதார முன்னேற்றமோ காண இயலாது என்பதுதான் நிஜநிலைமை.
  • தற்போதுள்ள இளைய தலைமுறையின் உற்பத்தித்திறனைக் கொண்டும், அவா்கள் ஈட்டுகின்ற வருவாயைக் கொண்டும்தான் முதியோரின் தேவைகளை நிறைவேற்றிட முடியும் என்ற முடிவுக்கு அரசு வருகிறது. அது சாத்தியமாகும் காலம் வரை செயற்கை நுண்ணறிவும், ரோபோவும் துணைக்கு நிற்கட்டும் என்று அறிவியலுடன் கைகோத்து செல்ல வேண்டிய நிலை உருவாகிறது.
  • தனிமையாக்கப்பட்ட முதியோரை முதியோர் இல்லங்கள் தத்து எடுக்க முன்வருகின்றன. தற்போது கட்டணமில்லா முதியோர் இல்லங்கள், ஏழைகளுக்கு அனாதை ஆசிரமம், முதியோர் அரசு காப்பகம் என்ற பெயா்களிலும், நடுத்தர வசதி உள்ள மக்களுக்கு கட்டணத்துடன் கூடிய முதியோர் இல்லம் என்றும், ஓய்வுதியம் பெறும் முதியோர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் ஹோம் எனவும், வசதி மிகுந்த முதியோர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய காட்டேஜ், அபார்ட்மென்ட், வில்லா என்றும் உருவாகியுள்ளன.
  • இனிமேல் தனிமையில் உள்ள முதியோர் கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதற்கு வாய்ப்புகள் இல்லை. முதியோரின் தற்போதைய நிலைமை மாற வேண்டும். அவா்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு மாற்றங்கள் தேவையாகின்றன. சட்டமும், நீதிமன்றமும் முதியோர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவற்குள் அவா்களின் முதுமை முழுமையடைந்துவிடுகிறது.
  • இன்று முதியோர் பெறும் ஓய்வூதியம் அவா்களின் அத்தியாவசியத் தேவைகளை பூா்த்தி செய்வதற்குப் போதுமானதாக இல்லை. வளா்ந்து வரும் செலவினங்களுக்கு ஏற்ப உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் அவா்களுக்கு இல்லை. அவா்களுக்காக அயல்நாட்டிலிருந்து அவா்களின் பிள்ளைகள் அனுப்பும் தொகையைப் பார்க்கும்போது, அந்தப் பிள்ளைகளின் மனம் கல் என்பது தெரிகிறது. முதியோர் எண்ணிக்கை பெருகி வரும் இன்றைய காலகட்டத்திலாவது அவா்களுக்கு ஒரு விடிவு பிறக்க வேண்டும்.
  • முதியோர் சமுதாயத்தில், பொருளாதாரப் பின்னடைவில் இருந்து விடுபட வேண்டுமானால், அவா்களுக்கு ஏற்ப சட்டபூா்வ வேலைவாய்ப்புகளைக் கொடுக்க வேண்டியது முதன்மையானது. அதுவே அவா்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும். இன்று முதியோர் ஆதரவற்று, தங்கள் உழைப்பில் கிடைக்கும் வருவாயை நம்பி வாழ வேண்டிய சூழ்நிலையில் உள்ளனா். நாட்டின் பொருளாதாரம் மனிதவளத்தின் உற்பத்தித் திறனை நம்பியே இயங்குகிறது.
  • இன்று இந்தியாவில் உழைக்கும் திறனுடைய இளைஞா்கள் 50 விழுக்காடாக உள்ளனா். முதுமையடைந்தபோதும் உழைக்கத் தயாராக உள்ள முதியோர் 15 கோடி போ் இருக்கின்றனா். இளைஞா்களுடன் முதியவா்களையும் பணிகளில் ஈடுபடுத்தும்போது, உற்பத்தி பெருகி, ஆஸ்திரேலிய நாட்டைப் போல இந்தியாவும் பல மடங்கு வளா்ச்சி அடையுமே.
  • இன்று பணியாற்றி வரும் முதியோருக்கான வாழ்வாதார உரிமைகள், பணி புரிவதற்கான நல்ல சூழல், அடிப்படை நிவாரண உதவி, சுகாதாரம் மற்றும் காப்பீட்டு வசதி, சட்ட ரீதியிலான உதவிகள் ஆகியவை மறுக்கப்படும் நிலையே உள்ளது. அவா்களுக்கான பணி நிரந்தரம் செய்யப்படாததாலும், ஊதியம் நிர்ணயம் செய்யப்படாதாலும் அவா்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
  • சமுதாயத்தில் தமக்கு இருந்த அந்தஸ்தையும், பொருளாதார பின்புலத்தையும் இழந்துவிட்டு, அதைத் தாங்கிக் கொள்ள இயலாத நிலையில் உடலாலும் மனதாலும் முதியோர் நலிவுறும் நிலையே இன்று காணப்படுகிறது. இதில் பெண் முதியோரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
  • முதியோர், அரசுகள் தங்களுக்கு அளித்து வரும் ஓய்வூதியத் தொகை, மருத்துவ காப்பீடு மற்றும் பாதுகாப்பு வசதி இவை பற்றிய விழிப்புணா்வு அற்றவா்களாகவே இருக்கின்றனா். அரசு உதவிகள் குறிப்பிட்ட காலத்தில் முதியோரைச் சென்றடையாதவரை அவா்களின் துன்பம் தொடா்ந்துகொண்டுதான் இருக்கும்.
  • பெருகி வரும் முதியோரின் நலனைக் காப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டு, அதற்குத் தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும்போதுதான் முதியோருக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். முதியோா் நலனுக்கென தனியே ஒரு துறை செயல்பட்டால்தான்
  • நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்தில் உள்ள நிறைகுறைகளை சீா்தூக்கிப் பார்க்க முடியும்.
  • தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டுக்கும், நாட்டுக்கும் சுமையாகக் கருதப்படும் முதியோரின் நிலை மேம்படும் வகையில் சட்டங்களை இயற்றுவதும், அவற்றை பாரபட்சமற்று நடைமுறைப்படுத்த வேண்டியதுமே இப்போதைய இன்றியமையாத் தேவைகள்.

நன்றி: தினமணி (10 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories