TNPSC Thervupettagam

தனியார்மயமாகும் காட்டுயிர்ப் பாதுகாப்பு

January 6 , 2025 4 days 40 0

தனியார்மயமாகும் காட்டுயிர்ப் பாதுகாப்பு

  • உலக அளவில் உயிர்ப்பன்மைக்கு எதிரான முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகக் காட்டுயிர்க் குற்றங்கள் அறியப்படுகின்றன. சட்டத்துக்குப் புறம்பான ஆயுதங்கள், போதைப் பொருள்கள், மனிதர்கள் கடத்தப்படுவது போன்ற குற்றங்களுக்கு அடுத்த இடத்தில் காட்டுயிர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களே இருக்கின்றன. அந்த வகையில் உயிர்ப்பன்மை அதிகம் கொண்ட நம் நாட்டின் காட்டுயிர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.
  • தமிழ்​நாட்டின் மேற்கு - கிழக்கு மலைத் தொடர்ப் பகுதிகள், மன்னார் வளைகுடா கடல் பகுதி ஆகியவை அவ்வாறான பல்லுயிர் முக்கி​யத்துவம் பெற்ற பகுதிகள். வனத் துறையில் அரசு ஊழியர்​களாகப் பணியாற்றும் வனக் காவலர்கள், உயர் வன அலுவலர்​களால் மட்டுமே காட்டுயிர்க் குற்றங்​களைத் தடுத்திட இயலாது.
  • எனவே, காடு - கடல் சார்ந்த மரபறிவைக் கொண்ட பழங்குடி - கடலோடி இளைஞர்களே பெரும்​பாலும் வேட்டைத் தடுப்புக் காவலர்களாக நியமிக்​கப்​பட்டு, நம் காட்டுயிர் வளங்கள் பாதுகாக்​கப்​பட்டு வருகின்றன. இந்நிலை​யில், தற்காலிகப் பணியில் இருக்கும் வேட்டைத் தடுப்புக் காவலர்​களின் பணியைத் தனியார் வெளி முகமையின் மூலமாக நியமித்​துக்​கொள்ளத் தமிழ்நாடு வனத் துறை திட்ட​மிட்​டுள்ளது.

வேட்டைத் தடுப்புக் காவலர்​களின் பணி:

  • வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தற்காலிகப் பணியாளர்களாக இருந்​தா​லும், 10 வருடத் தொடர் பணியை நிறைவு செய்யும்​பட்​சத்​தில், வனக் காவலராக நியமிக்​கப்​படு​வார்கள். ஒரு புலிகள் காப்பகத்தைக் கொண்டு விளக்​கி​னால், இவர்களின் பணி எவ்வளவு அளப்பரியது; அதே வேளையில் எவ்வளவு கடினமானது என்பதை நாம் புரிந்​து​கொள்ள இயலும். உதாரணத்​துக்கு, முதுமலைப் புலிகள் காப்பகத்தில் எட்டு வனச்சரகங்கள் உண்டு.
  • ஒவ்வொரு வனச்சரகத்​திலும் நான்கு முதல் ஐந்து வேட்டைத் தடுப்பு முகாம்கள் இருக்​கும். இந்த முகாம்கள் அடர் வனத்துக்​குள், எளிதில் சென்றுவர முடியாத பகுதி​களில் அமைந்​திருக்​கும். ஒவ்வொரு முகாமிலும் 4-5 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணியில் இருப்​பார்கள்.
  • ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய குறைந்​த​பட்சம் 10 முதல் 20 கி.மீ. தூரம் காட்டுப் பகுதிக்குள் கால்நடையாக ரோந்துப் பணி மேற்கொள்வதே இவர்களின் முதன்மைப் பணி. வனத்துக்குள் மனித நடமாட்டம் இருக்​கிறதா, காட்டு​யிர்கள் ஏதேனும் இறந்திருக்​கின்​றனவா, மரங்கள் வெட்டப்​பட்​டிருக்​கின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். மேலும், ரோந்தின்போது என்னென்ன விலங்​குகளை அவர்கள் காண்கிறார்கள் என்பதைக் குறிப்​பெடுத்து, அதற்கான பிரத்​யேகச் செயலியில் பதிவேற்ற வேண்டும்.
  • ரோந்துப் பணியைத் தவிர யானை, புலி, கரடி போன்ற காட்டு​யிர்கள் ஊருக்குள் வராமல் தடுப்பது, அப்படியே வந்தாலும் வனத்துக்குள் திருப்பி அனுப்புவது, காட்டு​யிர்​களைக் கணக்கெடுப்பது, மழைக்​காலத்தில் சாலைகளில் விழும் மரங்கள், பாறைகளை அகற்றுவது, களைச்​செடிகளை அழிப்பது, கோடைக்​காலத்தில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பது - காட்டுத்தீ ஏற்பட்டால் அதனை அணைத்துக் கட்டுப்​படுத்துவது போன்ற பல்வேறு பணிகளையும் அவர்கள் மேற்கொள்​கிறார்கள்.

கடினமான பணி:

  • இவ்வளவு பணிகளை அவர்கள் செய்து​வந்​தா​லும், நம்மைப் போல வாரத்​துக்கு 1-2 நாள்கள் விடுமுறை எல்லாம் அவர்களுக்குக் கிடையாது. தேவையின் அடிப்​படை​யில், சுழற்சி முறையில் மட்டுமே அவர்கள் விடுப்பு எடுக்க முடியும். எனவே, காட்டு​யிரைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தில் தங்கள் குடும்​பங்​களைப் பிரிந்து, ராணுவ வீரர்​களைப் போலப் பணியாற்றும் இவர்களுக்கு 2017ஆம் ஆண்டு வரை மாதச் சம்பளம் ரூ.6,500 ஆக இருந்தது.
  • அதுவே 2019ஆம் ஆண்டு ரூ.10,500 ஆகவும், அதே ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இன்று வரை ரூ.12,500 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத்தான் காட்டுக்குள் சென்று வருகிறார்கள். பணியின்போது யானை, புலி அல்லது கரடியால் தாக்கப்​பட்​டாலோ, வேறு காரணங்​களால் காயம் ஏற்பட்​டாலோ, அரசு சார்பில் அவர்களுக்கு எவ்விதப் பணப்பலனும் கிடையாது. விபத்துக் காப்பீடு கூட அவர்களுக்கு இல்லை. இவ்வளவு கடினமான பணியை மேற்கொள்ளும் அவர்களின் குறைந்​தபட்ச சம்பள எதிர்​பார்ப்பு ரூ.20,000 மட்டும்​தான். இத்தகைய சூழலில் இவர்களைப் புறக்​கணிப்பது அறமாகாது!

என்ன காரணம்?

  • பொதுவாகவே, தற்காலிகப் பணியில் இருக்கும் ஊழியர்கள், சில நிர்வாகக் குறைபாடு​களைச் சுட்டிக்​காட்டி நீதிமன்​றங்களை நாடி நிரந்தரப் பணியைப் பெற்று​விடு​கிறார்கள். இது அரசுக்கு நிர்வாகச் சிக்கலை ஏற்படுத்து​வ​ தால், அதனைத் தவிர்க்கவே தற்காலிகப் பணிகளைத் தனியார் வெளிமுகமை வசம் ஒப்படைக்க வேண்டும் என முடிவெடுக்​கப்​பட்​டுள்ள​தாகச் சுற்றறிக்கையில் தெரிவிக்​கப்​பட்​டிருக்​கிறது.
  • இது வேட்டைத் தடுப்புக் காவலர்​களின் பணிப் பாதுகாப்பைக் கேள்விக்​குள்​ளாக்கும் ஒரு செயல் என்றே கருத வேண்டி​யிருக்​கிறது. என்னதான் ஏற்கெனவே வேட்டைத் தடுப்புக் காவலர்​களின் பணி மூப்புப் பட்டியலில் இருப்​பவர்​களுக்குப் பாதிப்​பில்லை எனக் குறிப்​பிட்​டிருந்​தா​லும், அண்மையில் பணியில் சேர்ந்​தவர்​களின் பணிப் பாதுகாப்​புக்கு உத்தர​வாதம் இல்லை.
  • வனக் காவலராக​வும், வனக் காப்பாள​ராகவும் நியமிக்​கப்​படு​வதற்குக் குறைந்​த​பட்சக் கல்வித் தகுதியாக முறையே 10, 12ஆம் வகுப்பு என இருக்​கும்​பட்​சத்​தில், பழங்குடி இனத்தைச் சார்ந்த பலர் 8-9 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை முடித்​துக்​கொள்​வ​தால், 10 வருடக் கால வேட்டைத் தடுப்புக் காவலர் பணி வனக் காவலராக, அதாவது அரசு ஊழியராக ஆகக்கூடிய வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது. ஆனால், தனியார் வெளி முகமையை ஈடுபடுத்து​வதால் இவ்வாய்ப்பு பறிக்​கப்​படும் ஆபத்து இருக்​கிறது.

புலியைப் பிடித்​ததில் பங்களிப்பு:

  • 2021ஆம் ஆண்டு எம்டிடி23 (MDT23) புலியின் தாக்குதலால் உயிரிழப்பு ஏற்பட்​ட​தால், அதனைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் வனத் துறைக்கு ஏற்பட்டது. இதற்காக 22 நாள்கள் தேடுதல் பணி மேற்கொள்​ளப்​பட்டது. முடிவில் அந்தப் புலி வெற்றிகர​மாகப் பிடிக்​கப்​பட்டு, மைசூர் உயிரியல் பூங்கா​வுக்கு அனுப்​பிவைக்​கப்​பட்டது.
  • இந்தப் பணியில் வனத் துறை உயர் அலுவலர் முதல் வனக்காப்​பாளர்கள் வரை ஈடுபட்​டிருந்​தா​லும், வேட்டைத் தடுப்புக் காவலர்​களின் பங்களிப்பு முக்கிய​மானது. எனவேதான் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்தப் பணியில் முக்கியப் பங்காற்றிய மூன்று வேட்டைத் தடுப்புக் காவலர்​களுக்கு 2022ஆம் ஆண்டு உலகப் புலிகள் நாளான ஜூலை 29ஆம் தேதி விருது கொடுத்து அங்கீகரித்தது.
  • தமிழ்​நாட்டைப் போலவே உயிர்ப்​பன்மை அதிகம் கொண்ட கேரள, கர்நாடக மாநிலங்​களிலும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணி அமர்த்​தப்​பட்​டிருக்​கிறார்கள். ஆனால், அந்த மாநில அரசுகள் அப்பணியைத் தனியார் வெளி முகமை வசம் ஒப்படைக்கும் எந்த முடிவையும் இதுவரை எடுக்க​வில்லை. அப்படி​யிருக்க, சமூக நீதி பேசும் தமிழ்நாடு அரசு இப்படியான ஒரு திட்டத்தை முன்னெடுப்பது முரணாக உள்ளது.
  • இம்முடிவு வேட்டைத் தடுப்புக் காவலர்​களின் மத்தியில் மனச் சோர்வை​யும், காட்டு​யிர்​களைப் பாதுகாப்​பதில் அவர்களுக்கு இருக்கும் ஊக்கத்​தையும் குறைக்கும் வாய்ப்​பிருக்​கிறது. எனவே, அரசு உடனடி​யாகத் தலையிட்டு, இம்முடிவைத் ​திரும்பப் பெற வேண்டும் என்பதே களத்தில் பணிபுரியும் பெரும்​பாலான வனத் துறை அலு​வலர்​கள், இயற்கை ஆர்​வலர்​களின் கருத்​து.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories