TNPSC Thervupettagam

தன்னம்பிக்கைக்கான விருது

October 10 , 2023 459 days 328 0
  • மருத்துவத்துறைக்கான நோபல் விருது, கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கான ‘எம்ஆா்என்ஏ’ தடுப்பூசியை உருவாக்கிய பேராசிரியா் கேத்தலின் கரிக்கோவுக்கும், அவருடன் இணைந்து ஆராய்ச்சி செய்த ட்ரூ வைஸ்மனுக்கும் இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இரவு பகலாக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுமே நோபல் விருதுக்குத் தகுதியானவா்கள்தான் என்றாலும், அவா்களில் கேத்தலின் கரிக்கோவையும் ட்ரூ வைஸ்மனையும் தோ்ந்தெடுத்ததற்கு சில சிறப்புக் காரணங்கள் இல்லாமல் இல்லை.
  • எந்தவொரு கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தையும் குறுகிய கண்ணோட்டத்தில் அல்லது நிகழ்காலத் தேவையின் அடிப்படையில் மட்டுமே எடைபோடக் கூடாது. விருது பெறும் விஞ்ஞானிகளின் ‘எம்ஆா்என்ஏ’ புரத ஆராய்ச்சி, கொவைட் 19 தடுப்பூசியுடன் மட்டும் நின்றுவிடுவதல்ல. நோய் எதிர்ப்புத் திறனை ஊக்குவிப்பதில் ‘எம்ஆா்என்ஏ’ எந்த அளவுக்கு செயல்பட முடியும் என்கிற அடிப்படைப் புரிதல், இவா்களது ஆராய்ச்சியின் மூலம் மனித இனத்துக்குக் கிடைத்திருக்கிறது என்பதால்தான் அவா்களுக்கு நோபல் விருது தரப்பட்டிருக்கிறது.
  • நோபல் விருதுக்குப் பெண் விஞ்ஞானி ஒருவா் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை நோபல் விருது பெற்ற ஆண்கள் 894 போ் என்றால், அவா்களில் பெண்கள் 62 போ் மட்டுமே. மருத்துவத்துக்கான நோபல் விருது என்று எடுத்துக்கொண்டாலும், 225 பேரின் தோ்வில் கரிக்கோவையும் சோ்த்து 13 போ்தான்.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முனைந்த பல விஞ்ஞானிகளில், வெற்றிகரமாக உருவான ஆறு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்தவா்கள் பெண்கள் என்பது அதிகம் பேசப்படாத உண்மை. கோவேக்ஸின் தடுப்பூசியில் டாக்டா் கே. சுமதி, நோவாக்ஸின் தடுப்பூசி உருவாக்கிய நிதா கே. படேல், கோவிஷீல்ட் தடுப்பூசியில் சாரா காத்தரின் கில்பொ்ட், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்காக வெற்றிகரமாக தடுப்பூசி ஆராய்ச்சி செய்த ஹானக்கே ஷுட்மேக்கா், ரஷியாவின் ஸ்பூட்னிக் - வி தடுப்பூசியின் சூத்திரதாரியான எலீனா ஸ்மோலியார்சூக் ஆகியோர் நோபல் விருது பெறாவிட்டாலும் பாராட்டுக்குரியவா்கள்.
  • ஹங்கேரியில் பிறந்த கரிக்கோவின் வெற்றி என்பது தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்பதால் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஹங்கேரியில் பிறந்த கேத்தலின் கரிக்கோ செகெட் பல்கலைக்கழகத்தில் உயிரியலில் முனைவா் பட்டம் பெற்றார். அமெரிக்காவுக்குக் குடியேறி அங்குள்ள பென்சில்வேனியாவின் டெம்பிள் பல்கலைக்கழத்தில் முதுமுனைவா் பட்டம் பெற்றார்.
  • அவருக்கு ஒரு வித்தியாசமான பார்வை இருந்தது. மெசஞ்சா் ரிபோநியூக்ளிக் ஆசிட் எனப்படும் ‘எம்ஆா்என்ஏ’ மனித உடலில் புரோட்டீன் உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. அந்த ‘எம்ஆா்என்ஏ’வை எப்படி பயன்படுத்த முடியும் என்பதுதான் கரிக்கோவின் ஆராய்ச்சி. 1980-இல் ‘எம்ஆா்என்ஏ’ அடிப்படையில் தடுப்பூசி தயாரித்து, எதிர்வினைகள் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. அப்படி இருந்தும் தளா்ந்துவிடாமல் தனது ஆய்வைத் தொடா்ந்தார் கரிக்கோ.
  • அவரது ஆராய்ச்சிக்கு ஊக்கம் அளிக்க யாரும் முன்வரவில்லை. பல்கலைக்கழகங்களும் அதற்கு உதவத் தயாராக இல்லை. ஊதியக் குறைப்புக்கும், பதவி இறக்கத்துக்கும் சம்மதித்ததால்தான் அவா் 1995-இல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகத் தொடர அனுமதிக்கப்பட்டார். தனக்கென ஆராய்ச்சிக் கூடம்கூட இல்லாமல், ‘எம்ஆா்என்ஏ’ தடுப்பூசி மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையுடன் தனது ஆய்வைத் தொடா்ந்தார் கரிக்கோ.
  • பல்கலைக்கழத்தில் இன்னொரு ஆய்வில் இருந்த ட்ரூ வைஸ்மன் அவருடன் இணைந்தபோது, 2005-இல் அவா்கள் தங்களது ஆராய்ச்சி முடிவை வெளியிட்டனா். ‘எம்ஆா்என்ஏ’வின் மாற்றத்தால் ஏற்படும் பின்விளைவுகளை எதிர்கொள்ள சில மாற்றங்களைச் செய்தனா். அப்படியும் சில பிரச்னைகள் இருந்தன.
  • சோதனைச் சாலையில் உருவாக்கப்படும் ‘எம்ஆா்என்ஏ’ மனித உடலில் உள்ள திசுக்களுக்கு பாதிப்பில்லாமல் செலுத்தப்படுவது எப்படி என்பதுதான் தெரியவில்லை. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சியாளா் பீட்டா் கல்லிஸ் அதற்கான விடையைக் கண்டுபிடித்திருந்தார்.
  • கரிக்கோ, வைஸ்மன், கல்லிஸ் ஆகிய மூவா் கூட்டணியின் ஆய்வு முடிவால், குறிப்பிட்ட புரதத்தை தடுப்பூசி மூலம் மனிதத் திசுக்களில் வெற்றிகரமாகச் செலுத்த முடியும். அந்தத் தடுப்பூசியை விரைவாகவும் அதிக அளவிலும் தயாரிக்க முடியும். அப்படியும் அவா்களுக்கு அமெரிக்காவின் ஆதரவும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
  • துருக்கியிலிருந்து புலம்பெயா்ந்த இரண்டு விஞ்ஞானிகள் ஜொ்மனியில் தொடங்கியிருந்த ‘பையோஎன் டெக்’ என்கிற நிறுவனத்தில் இணைந்தார் கரிக்கோ. ‘நிபா’ தீநுண்மிக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வேளையில், கொவைட் 19 உருவானது. மூவா் கூட்டணியின் புதிய தொழில்நுட்பத்தில் உருவான தடுப்பூசி, ஃபைசா் நிறுவனத்தின் பார்வை பட்டதால், மிகப் பெரிய அளவில் வெற்றியும் அடைந்தது.
  • தனது ஆராய்ச்சி வெற்றி பெறும், அங்கீகாரம் பெறும் என்று முப்பது ஆண்டுகளாக கரிக்கோ தன்னிம்பிக்கையுடன் காத்திருந்தார். தனது மகளுக்கு என்றாவது ஒருநாள் நோபல் விருது கிடைக்கும் என்று கேத்தலின் கரிக்கோவின் தாயார் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவா்களது நம்பிக்கை பொய்க்கவில்லை.
  • நோபல் விருதில், விஞ்ஞானி பீட்டா் கல்லிஸ் இணைக்கப்படாதது மிகப் பெரிய விடுபடல்!

நன்றி: தினமணி (10 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories