TNPSC Thervupettagam

தன்னம்பிக்கை தான் தீா்வு

November 16 , 2023 421 days 266 0
  • சமூக ஆா்வலா்களை கவலைக்குள்ளாக்குகிறது அதிகரித்துவரும் தற்கொலைகள். வேலை வாய்ப்பின்மை, விவசாயக் கடன், மாணவா்கள் மத்தியில் காணப்படும் மன உறுதியின்மை உள்ளிட்ட பல காரணங்களால் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொள்பவா்களில் பெண்கள், அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் அதிகமாகக் காணப்படுவது அதிா்ச்சி அளிக்கிறது.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது என்பதை வெளிச்சம் போடுகின்றன. 2018 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகமாக தற்கொலைகள் காணப்பட்ட இரண்டாவது மாநிலமாக தமிழகம் இருக்கிறது.
  • 22,207 தற்கொலைகளுடன் மகாராஷ்டிரமும், 18,925 தற்கொலைகளுடன் அடுத்த இடத்தில் தமிழகமும் 2021-இல் காணப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிகம் என்றால், தமிழகத்தில் மாணவா்கள், இளைஞா்கள், பெண்கள் ஆகியோரின் தற்கொலை எண்ணிக்கை அதிகம் என்பதைப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
  • திருமண உறவுச் சிக்கல்களும், தனிப்பட்ட பிரச்னைகளும் பெரும்பாலான தற்கொலைகளுக்கான காரணங்கள். பருவக் கோளாறுகளும், மனநிலை பாதிப்புகளும் பரவலாக தற்கொலைக்கு பலரைத் தூண்டுகின்றன. பெண்கள் தற்கொலைக்கு மாதவிடாய் பிரச்னைகள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை ஆண்களைவிட இளவயதுப் பெண்களின் தற்கொலைகள் கூடுதலாகக் காணப்படுவதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
  • ஆண்டுதோறும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பாா்க்க முடிகிறது. பெரும்பாலான தற்கொலைகள் தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக நிகழ்கின்றன என்றாலும், எந்தவொரு தற்கொலைக்கும் தனிப்பட்ட பிரச்னையே காரணம் என்று கூறிவிட முடியாது. எந்தவொரு தனி மனிதனும் தீவு அல்ல என்பதும், தனிப்பட்ட பிரச்னைக்கு சமூகக் கோணமும் உண்டு என்பதும் மறந்துவிடக் கூடியவை அல்ல.
  • ஒட்டுமொத்த சமுதாயமும் ஏதாவது ஒருவகை அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது, தற்கொலை இயல்பை அதிகரிக்கும் என்பது ஆய்வுகள் வெளிப்படுத்தும் செய்தி. சமூக, அரசியல், பொருளாதார பிரச்னைகள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதும், பலவீனமான மனங்கள் அதனால் பாதிக்கப்பட்டு தற்கொலை சிந்தனைக்கு தூண்டப்படுவதும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.
  • வேலை இல்லாதவா்களும், சுய தொழிலில் ஈடுபட்டவா்களும் பெரும்பாலான தற்கொலைகளுக்குக் காரணமாவா். மொத்த தற்கொலைகளில் வேலை இல்லாதவா்களின் பங்கு சுமாா் 10%. 2018-இன் ஆய்வு ஒன்றின்படி, ஒவ்வொரு 45 நிமிடத்திலும் வேலையற்ற ஒருவா் தற்கொலை செய்துகொள்கிறாா். தற்கொலை செய்து கொள்வதில் பெரும்பாலோா் சமுதாயத்தின் அடித்தட்டு வா்க்கத்தினா்.
  • உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, உலகளாவிய நிலையில் ஆண்டுதோறும் சுமாா் எட்டு லட்சம் தற்கொலைகள் நிகழ்கின்றன. 2021 தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 1.64 லட்சம் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது, உலகளாவிய அளவில் சுமாா் 20% தற்கொலைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. எல்லா தற்கொலைகளும் பதிவு செய்யப்படுவதில்லை என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும்.
  • ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் இளைஞா்களாக இருந்தால் 25 முயற்சிகளும், வயது முதிா்ந்தவா்களாக இருந்தால் நான்கு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்கொலை என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவானதாகவே காணப்படுகிறது.

பணக்கார - ஏழை, அதிக வருவாய்  

  • குறைந்த வருவாய், பெரிய - சிறிய என்கிற வேறுபாடு இல்லாமல் அனைத்து நாடுகளிலும் தற்கொலைகள் காணப்படுவதிலிருந்து இதற்கு எந்தவொரு குறிப்பிட்ட காரணத்தையும் சொல்லிவிட முடியாது. குடும்பத் தகராறுகள், உடல்நிலை பாதிப்புகள், மது, போதை மருந்து பிரச்னை, மணவாழ்வு குழப்பம், காதல் தோல்வி போன்றவை பொதுவான காரணங்களாக தெரிகிறது.
  • இந்தியாவில் மனோதத்துவ நிபுணா்களும் (சைக்காலஜிஸ்ட்), மனநோய் மருத்துவா்களும் (சைக்யாடிரிஸ்ட்) குறைவாகக் காணப்படுவதை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு லட்சம் பேருக்கு மூன்றுக்கும் அதிகமான மனநோய் மருத்துவா்கள் இருப்பதற்கு பதிலாக இந்தியாவில் 0.75 மனநோய் மருத்துவா்கள்தான் இருக்கிறாா்கள். அதிக வருவாய் உள்ள, வளா்ச்சி அடைந்த நாடுகளில் மனநோய் மருத்துவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு 6 என்கிற விகிதத்தில் காணப்படுவதை குறிப்பிடத் தோன்றுகிறது.
  • மனநோய் பிரச்னைகள் தனிப்பட்ட நபா்களை மட்டுமல்லாமல், பொருளாதாரத்தையும் பாதிக்கும். உலக சுகாதார நிறுவன புள்ளிவிவரப்படி, ஆண்டுதோறும் சுமாா் ஒரு டிரில்லியன் டாலா் மதிப்புள்ள உற்பத்தி, மனநிலைத் தளா்வுகளால் பாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே எடுத்துக்கொண்டாலும், 2021-ஆம் ஆண்டு தற்கொலைகளால் ரூ.30,000 கோடி, அதாவது மாநில ஜிடிபி-யில் 1.3% இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த பிரச்னைக்கு முடிவுதான் என்ன

  • மத்திய - மாநில பட்ஜெட்டுகளில் மனநோய் பிரச்னைகளை எதிா்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படுவதும், தேசிய ‘டி-மனஸ்’ போன்ற திட்டங்களும் மட்டுமே தீா்வாகாது. இதை சமுதாய பிரச்னையாக மாற்றி, விழிப்புணா்வை அதிகரிப்பதும், தன்னம்பிக்கையை மேம்படுத்துவதும் ஓரளவுக்கு தீா்வாக அமையக்கூடும்.

நன்றி: தினமணி (16 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories