TNPSC Thervupettagam

தன்னாட்சியை இழக்கும் பல்கலைக்கழகங்கள்: தவறு யாரிடம்

June 13 , 2023 562 days 378 0
  • தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களோடு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை அண்மையில் நடத்தினார். எல்லா பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் துணைவேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மொழிக்கும் மாநில அளவிலான ஒரு குழு பாடத்திட்டத்தை வகுத்துத் தரும். பல்கலைக்கழகங்கள் அந்தப் பாடத்திட்டத்தை அப்படியே பயிற்றுவிக்க வேண்டும். அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு வகுக்கப்படும் பாடத்திட்டங்களை முக்கால் பங்கு அவற்றில் உள்ளவாறும், தேவைப்பட்டால் கால் பங்கு மாற்றங்களைச் செய்தும் பயிற்றுவிக்கலாம்.

அறிவுக் கலாச்சாரம்:

  • இதைப் பார்த்ததும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியும் கல்விப் புலச் சுதந்திரமும் என்னவாயின என்று கேட்கத் தோன்றியது. உயர் கல்வியின் முன்னேற்றத்துக்குத் தன்னாட்சி பரவலாவதுதான் வழி என்ற சிந்தனையில் கல்லூரிகளுக்கே தன்னாட்சி வழங்கிவந்ததும் இன்றைய கட்டத்தில் நகைமுரணாகத் தொனித்தது.
  • முக்கால் நூற்றாண்டுக்கு முன், வெளி அமைப்பு ஒன்று - அது ஜனநாயகத் தேர்தல்வழி வந்த அரசு என்றாலும் - எந்த நூல்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டிருக்குமானால், அன்றைக்கு இருந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் சீற்றமடைந்திருக்கக்கூடும். அதை நாம் இப்போது எதிர்பார்க்க முடியுமா? அன்றைய அரசு இப்படி ஒன்றைச் செய்ய முனைந்திருக்காது என்பதையும் நியாயமாக இங்கே சொல்ல வேண்டும்.
  • மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்று முடிவுசெய்யும் பல்கலைக்கழகத்தின் உரிமைகளையும் நிர்வாக அரசின் அதிகாரத்தையும் எதிரெதிராக வைத்துப் பேசும் குறுகிய விவாதக் களத்தில் நின்றுகொண்டு நான் இதைச் சொல்லவில்லை. ஐரோப்பிய அறிவுக் கலாச்சாரத்தின் மேன்மைக்கு அங்கிருந்த பல்கலைக்கழகங்களின் மூர்க்கமான சுதந்திரப் பற்று காரணம் என்பதை நீங்கள் ஏற்பீர்கள். அறிவுக் கலாச்சாரத்தில் அக்கறை உள்ளவர்கள் தமிழக அரசின் இந்த முடிவு குறித்துக் கவலைப்படுவார்கள்.

சுதந்திரம் கால் பங்கு:

  • மொழிப் பாடங்களுக்கு இல்லாத சுதந்திரத்தில் கால் பங்காவது அறிவியல், சமூகவியல் பாடங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது என்பது ஆறுதல் அல்ல. இந்தப் பாடங்களின் கருத்தாக்கங்கள், கோட்பாடுகள், சூத்திரங்கள், விளக்கங்கள் எல்லாம் உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரியானவை. குறிப்பிட்ட நூல் என்று இல்லாமல் தெளிவாக இருக்கும் எந்த நூலும் பயனுள்ளதுதான். அரசு அனுமதிக்கும் சுதந்திரத்தைக் கொண்டு பல்கலைக்கழகங்கள் இவற்றைப் பொறுத்தவரை தங்களுக்குள் உருவாக்கிக்கொள்ளும் வேறுபாடுகள் பெரிதாக இருக்கச் சாத்தியமில்லை.
  • மொழிப் பாடங்களின் நிலைமை வேறு. அவை குறிப்பிட்ட நூல்கள் என்ற பனுவல்களின் அடிப்படையிலானவை. சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர், வாக்கியத்துக்கு வாக்கியம் பொருள் இழைத்துக் காட்ட வேண்டியவை. கற்பதன் இலக்கு மொழிப் பயிற்சியும் இலக்கிய ரசனையும், மனித வாழ்வின் நுட்பமான அனுபவங்களும். கல்லூரிக்குக் கல்லூரி இதற்கான பாடநூல்கள் வேறுபடலாம். நியாயமாக அவை வேறுபட வேண்டும். ஆசிரியர்கள் சொல்லும் விளக்கங்களும் வேறுபடலாம், மாணவர்களின் புரிதலும் வெவ்வேறாகலாம். மாணவர்கள் திறன் ஒரு தரத்தை எட்டியதா என்பதுதான் நாம் சோதிக்க வேண்டியது. பாடத்தின் இந்தத் தன்மை வேறுபாடு காரணமாகப் பல்கலைக்கழகங்களுக்கு மொழிப் பாடங்களைத் தேர்ந்துகொள்வதில் முழுச் சுதந்திரம் அவசியமாகிறது. ஆனால், இங்கேதான் அந்தச் சுதந்திரம் முற்றாக மறுக்கப்படுகிறது.

வெகுளியின் புரிதல்:

  • பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஒரே மொழிப் பாடம் என்பது அதன் தன்மை வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமையின் விளைவு என்றே நாம் வெகுளியாக வைத்துக் கொள்வோம். ‘இந்த நாவல்களை, நாடகங்களை, கட்டுரைகளை, கவிதைகளைத் தவிர வேறெதுவும் பாடமாக இருக்கக் கூடாது’ என்பதுதான் நிலைமை என்றால், இன்னொரு ஊகமும் சாத்தியம். குறிப்பிட்ட சித்தாந்த நிலைப்பாட்டுக்குப் பல்கலைக்கழகங்களைப் பிரச்சாரக் களங்களாக்கும் ஆர்வமுள்ளவர்கள் அப்படிச் செய்வார்கள் என்றும் ஊகிக்கலாம். நம் உயர் கல்வித் துறைக்கு இந்த வகையிலான அரசியல் முனைப்பு உள்ளதென்று நான் நம்பவில்லை!
  • தமிழகம் முழுமைக்கும் ஒரே மொழிப் பாடம் என்பது கல்விப்புலச் சிந்தனை என்ற அளவில் சிக்கலானது. ஒரு தலைமுறையின் உணர்வுகளை, ரசனையை வளப்படுத்த வல்லது என்று சில நூல்களை மட்டும் அடையாளப்படுத்துவது கல்விப்புலம் செய்யும் ஒன்றல்ல. இலக்கியம் என்றால் இவைதான் என்று காலம் காலமாகக் கட்டமைக்கப்பட்ட நூல் வரிசைகளை (Canon) குலைத்துக் காட்டுவதுதான் பல்கலைக்கழகங்களின் பணி. ஓர் அந்தஸ்து நூல் வரிசை நிலைபெற்றிருக்கும். அதற்குப் பதிலாக இன்னொரு அந்தஸ்து வரிசையை உருவாக்குவது கல்வியல்ல. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் வெவ்வேறு மொழிப்பாடங்களைத் தேர்வு செய்தன. அந்தச் சுதந்திரம் இப்படி அந்தஸ்து நூல் வரிசை ஒன்று உருவாகி மற்ற நூல்களை வெளியே நிறுத்தாமலும், ஏற்கெனவே உருவான வரிசைகள்அப்படியே தங்கிப்போகாமலும் கவனித்துக்கொண்டது. இது தொடர்ந்து நடைபெறும் மறைமுக இலக்கியத் திறனாய்வு.

பல்கலைக்கழகங்களுக்குப் பதிலி:

  • பல்கலைக்கழகங்களின் பாடங்களை முடிவுசெய்யும் அதிகாரம் புற அமைப்புகளுக்கு ஏது? பல்கலைக்கழகங்கள் அப்போதைக்கு அப்போது வரும் நிர்வாக அரசின் அதிகார வீச்சுக்கு அப்பால், அதனதன் சட்டங்கள் பாதுகாக்கும் சுதந்திர வெளியில் வைக்கப்பட்டவை. உயர் கல்விகவுன்சில் என்பது பல்கலைக்கழகங்களின் திட்டங்களைஒருங்கிணைப்பது மட்டுமே. பல்கலைக்கழகங்களின் இடத்தில், பாடங்களைத் தீர்மானிக்கும் பல்கலைக்கழகக் கல்விக் குழுக்களின் இடத்தில், பதிலியாக அமர்ந்து அவற்றின் வேலையைத் தானே செய்யும் அதிகாரம் பெற்றதல்ல. அரசு அமைக்கும் குழுவும் பல்கலைக்கழகங்களுக்குப் பதிலியாக முடியாது. பாடங்களைத் தேர்வுசெய்வது பயிற்றுவிக்கும் பணியின் மையம். அந்த உரிமையைப் பறித்து ஆசிரியர்களை ஏன் முடக்க வேண்டும்?
  • மொழிப்பாடம் பற்றிய உயர் கல்வித் துறையின் தற்போதைய முடிவு பல்கலைக்கழகம் என்ற கருத்தாக்கத்தில் அரசுக்கு நம்பிக்கை இல்லை என்பதன் அடையாளம். இந்த நிலைமையை அரசு நேர்மையாக எதிர்கொள்ளும் வழி என்ன? பல்கலைக்கழகம் புராதனமாகிப்போன கருத்தாக்கம் என்றால், தன் சிந்தனையின் புது ஒளியில் அதை மறுகட்டமைப்புச் செய்வதுதானே வழி!

நன்றி: தி இந்து (13 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories