- தன்பாலின ஈர்ப்பாளர்களின் அடையாளத்தை உளவியல் ஆலோசனை மூலம் மாற்றும் முயற்சிக்குத் துணைபோகக் கூடாது என்று நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தன்பாலின இணையரைத் தேடி ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
- பெற்றோருடன் வசித்துவந்த மனுதாரரின் இணையருக்கு, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண், மனுதாரருடன் வாழ விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.
- இதற்கு எதிரான மேல்முறையீட்டில், உச்ச நீதிமன்றம் மனுதாரருடைய முன்னாள் இணையரின் முடிவில் தலையிட மறுத்துவிட்டது. ஆனால், இந்த வழக்கில் மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீராம் பறக்காட், நீதிமன்றங்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களை இப்படிப்பட்ட ஆலோசனைகளுக்கு உட்படுத்துவது ஆபத்தானது என்று அச்சம் தெரிவித்தார்.
- இதையடுத்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ஆள்கொணர்வு மனுக்களை விசாரிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றங்களுக்குச் சில முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
- ‘நீதிபதிகள் ஒரு நபரின் உண்மையான விருப்பத்தைத் தெரிந்துகொள்வது அவசியம்தான். ஆனால், உளவியல் ஆலோசனை என்னும் பெயரில், ஒரு நபரின் அடையாளத்தையும் பாலியல் தெரிவையும் கைவிட வைக்க முயல்வது ஏற்கத்தக்கதல்ல’ என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
- மேலும், ‘தன்பாலின ஈர்ப்பாளர்கள் அல்லது திருநர்கள் மீதான வெறுப்பு, பிறப்பின் அடிப்படையிலான குடும்ப அமைப்பின் மீதான அக்கறை ஆகியவற்றின் அடிப்படையிலான பார்வைகளை முற்றிலும் விலக்கி வைத்து இத்தகைய வழக்குகளை அணுக வேண்டும்; அரசமைப்புச் சட்ட விழுமியங்களைக் காட்டிலும் தமது தனிப்பட்ட விழுமியங்களைப் பதிலீடு செய்யும் போக்கைக் கைவிட வேண்டும்’ என்று நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ‘குடும்பம் என்பது ஒரு நபர் பிறப்பால் அடைவது மட்டுமல்ல... அவர் தேர்ந் தெடுக்கும் குடும்பத்தையும் உள்ளடக்குகிறது. இது அனைவருக்கும் பொது வானது என்றாலும், பால்புதுமையர் பிறப்பு வழி அமைந்த குடும்பத்தினரின் வன்முறையையும் பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்கிறார்கள் என்பதால், அவர்கள் தேர்ந்தெடுக்கும் (இணையருடனான) குடும்பத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது’ என்று நீதிபதி சந்திரசூட் கூறியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதைப் பால்புதுமையருக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகையான காதல் திருமணங்களுக்கும் நீட்டிக்க முடியும்.
- தன்பாலின இணையர்களின் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்று 2023 அக்டோபரில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு தீர்ப்பளித்திருந்தது. ஆனால், அந்தத் தீர்ப்பிலும் தன்பாலின ஈர்ப்பு இயற்கையானது, தன்பாலின ஈர்ப்பாளர்களை எந்த விதத்திலும் பாகுபாட்டுக்கு உட்படுத்தக் கூடாது என்று ஐந்து நீதிபதிகளும் கூறியிருந்தனர்.
- அதை நிலைநாட்டும் விதமாக நீதிபதிகள் மட்டுமல்லாமல் வழக்கறிஞர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட அமைப்பின் அனைத்துத் தரப்பினருக்கும் இத்தகைய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும். தன்பால் ஈர்ப்பைக் குணப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பரிந்துரைக்கும் உளவியல் ஆலோசகர்களும் மருத்துவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.
- தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு என்னென்ன உரிமைகளை வழங்கலாம் என்பது குறித்துப் பரிசீலிப்பதற்குக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அந்த வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 03 – 2024)