தபேதார்... மொகலாயர் ஆட்சியில் இருந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது!
- கிராமங்களில் வெற்றுச் சவடால் பேசி திரிவோரை, ‘ஆமாம் இவரு பெரிய தபேதாரு’ என கேலி பேசுவதுண்டு. கடந்தாண்டு, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட லிப்ஸ்டிக் சர்ச்சையால் ‘தபேதார்’ என்ற சொல் மேலும் பலருக்கு பரிச்சயமாகி, பேசு பொருளானது. மாவட்ட ஆட்சியர்கள், நீதிபதிகள், மேயர்கள் உள்ளிட்டவர்களின் அருகில் வெள்ளை உடையில், தலையில் டர்பன் அணிந்து நிற்பவர்தான் இந்த ‘தபேதார்’.
- இவர்கள்தான் தலைமை உதவியாளர்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக 4 உதவியாளர்கள் இருப்பர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், உயர் அதிகாரிகளுக்கு பணிவிடை செய்வதற்கும், அந்த அதிகாரிகள் தங்களை எஜமானர்களாக கருதுவதற்கும் இந்த தபேதார்கள் நியமிக்கப்பட்டனர். பொது இடங்களில் அதிகாரிகள் இருப்பதை தெரிவிப்பதும், பொதுமக்களை அமைதிப்படுத்துவதும் இவர்களின் பணியாகும்.
- எத்தகைய கூட்டத்திலும் உயர் அதிகாரிகள் தனித்து தெரிவதற்கு ஏதுவாக இவர்களுக்கான தனித்த சீருடை வழங்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆட்சியர் அறை முன் டர்பனோடு, உடலில் சிவப்புப் பட்டை அணிந்து நிற்கும் நபரைப் பார்த்ததும், ‘தபேதார் இருக்கிறார்; அப்படியானால் ஆட்சியரும் இருக்கிறார்’ என்ற சமிக்ஞையை பிரதிபலிக்கும் இவர்களது பணிப் பெயர் தற்போது கோப்புகளில் ‘ஆட்சியரின் உதவியாளர்’ என்று உள்ளது.
- தமிழ் கோப்புகளில் இவ்வாறு மாற்றப்பட்டாலும், ‘தபேதார்’ என்ற வார்த்தையே அலுவலக ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் தொடர்ந்து வருகிறது. இதே போல், தமிழக வருவாய்த் துறை ஊழியர்களிடையே அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தைகள் ‘ஹெச்எஸ் - எம்ஹெச்எஸ்’.
- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கச் செயலாளர் காதர்அலியிடம் இதுபற்றி கேட்டபோது, “மொகலாயர் ஆட்சிக் காலத்தில் நிலவரித் திட்டத்தின் கீழ் தாசில்தார், அதன் பின் ‘ஹெச்எஸ்’ எனும் ‘ஹொஸூர் சிரஸ்ததார்’, ‘எம்ஹெச்எஸ்’ எனும் ‘மாஜிஸ்திரேட் ஹொஸூர் சிரஸ்ததார்’ என்ற பதவிகள் தோற்றுவிக்கப்பட்டு நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது.
- ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உள்ள இந்த நடைமுறை தற்போது வரை தொடர்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீதித் துறையிலும் இதுபோன்ற துறைகள் இருந்தன. ஆட்சியர் தலைமை உதவியாளர் தான் ‘தபேதார்’. அவருக்கு அடுத்தப் படியாகத்தான் மற்ற உதவியாளர்கள்” என்றார்.
- “முன்பெல்லாம் தாலுகா போர்டு ஆபிஸ் இருக்கும். அங்கு தாசில்தார் அதிகாரமிக்கவராக இருப்பார். அதேபோன்று கலெக்டர் ஆபிஸில் சிரஸ்ததார் இருப்பார். அவரைக் கண்டால் அதிகாரிகளுக்கும் அச்சம் இருக்கும். தாசில்தார், ‘ஹெச்எஸ்’ எனும் ‘ஹொஸூர் சிரஸ்ததார்’, ‘எம்ஹெச்எஸ்’ எனும் ‘மாஜிஸ்திரேட் ஹொஸூர் சிரஸ்ததார்’, தபேதார் போன்ற பதவிப் பெயர்கள் பெரிஷியஸ் மொழியில் உருவானவை.
- ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இப்பணிப் பெயர்கள் தொடர்ந்து வந்தபோதிலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பின், தமிழ்நாடு அரசு, ‘தாசில்தார்’ பதவிக்கு ‘வட்டாட்சியர்’ என்றும், ‘ஹொஸூர் சிரஸ்ததார்’ என்ற பதவிக்கு ‘அலுவலக மேலாளர்’ (பொது) என்றும், ‘மாஜிஸ்திரேட் ஹொஸூர் சிரஸ்ததார்’ பதவிக்கு ‘அலுவலக மேலாளர் (குற்றவியல்)’ என்றும் ‘தபேதார்’ பணிக்கு ‘அலுவலக உதவியாளர்கள்’ என்றும் தமிழ் வழி அலுவலகக் கோப்புகளில் பெயர்கள் மாற்றப்பட்டன. ஆனால், ஆங்கில கோப்புகளில் இன்றும் பெரிஷியஸ் மொழியில் தான் இடம் பெறுகிறது” என்கிறார் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் அனந்தகிருஷ்ணன்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 02 – 2025)