ஜனவரி
- 19:: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- 27:: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 5 நிறுவனங்களுக்கு ரூ.7.50 கோடி முதலீடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
பிப்ரவரி
- 6:: அரசு நிதியுதவியுடன் முதுநிலை மருத்துவக் கல்வி பயில்வோர் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 14:: மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாநில திருத்தப்பட்ட மின் வாகனக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன்மூலம் ரூ.50,000 கோடி முதலீட்டை ஈர்த்து 1.5 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 23:: அதிமுக இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
- 26:: இந்தியாவில் முதல் முறையாக 150 ஆண்டுகள் பழைமையான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஒலி மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் ஒலிபெருக்கி அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு "அமைதியான ரயில் நிலையம்' என அறிவிக்கப்பட்டது.
- 28:: ஏற்றமிகு ஏழு சிறப்புத் திட்டங்கள் எனும் பெயரில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்குவது, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு உள்ளிட்ட ஏழு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மார்ச்
- 2:: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- 5:: சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள்களை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் கீழடியில் ரூ.18.43 கோடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- 17:: தமிழ்நாடு மகளிர் காவல் துறையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு "அவள்' திட்டத்தை முதல்வர் மு.க.
- ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் பெண் காவலர்களின் சூழ்நிலைக்கேற்ப விடுப்பு வழங்குவது உள்ளிட்ட 9 திட்டங்களை அறிவித்தார்.
- 23:: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய "தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதா' சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
- 27:: தமிழகத்தில் ஒரு கோடி மகளிருக்கு ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- 28: சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தன்னைப் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுத்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் அவர் நன்றி கூறினார்.
ஏப்ரல்
- 8:: சென்னையில் ரூ.5,200 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கிவைக்கும் விழாவில் "இந்தியாவின் வளர்ச்சி இயந்திரம் தமிழகம்' என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
- 21:: பல்வேறு கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளிடையே தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்யும் தொழிற்சாலை சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
- 29:: இந்திய ராணுவ வரலாற்றில் முதல் முறையாக, சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் பயிற்சியை நிறைவு செய்த 5 பெண் அதிகாரிகள் பீரங்கி படையில் இணைந்தனர். அவர்களுக்கு சீன, பாகிஸ்தான் எல்லையோரப் பிரிவுகளில் பணி வழங்கப்பட்டுள்ளது.
மே
- 5:: கேரள இளம்பெண்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்பட்டு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக கதைப் பின்னணி கொண்ட "தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை சென்னை உள்பட தமிழகத்தில் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டது.
- 11: தமிழகத்தில் நவீன வகை கார்களை தயாரித்தல், மின்சார வாகனத்துக்கான மின்கலன் தொகுப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்காக ஹூண்டாய் நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீடு செய்கிறது. சென்னையில் வியாழக்கிழமை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசுக்கும், அந்த நிறுவனத்துக்கும் இடையே கையொப்பமானது.
- 14: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 70 வயது மூதாட்டி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இதில் 6 பேர் மரக்காணத்திலும், 4 பேர் மதுராந்தகத்திலும் உயிரிழந்தனர்.
- 24:: சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஜூன்
- 2:: சேலத்தில் 2015-ஆம் ஆண்டு கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜுக்கு 3 ஆயுள் சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
- 6:: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.125 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 500 நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களை தமிழக முதல்வர் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒவ்வொரு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு மருத்துவமனைப் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 13:: நிகழாண்டு நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 99.99 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தார். மேலும், தேசிய அளவில் முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- 14:: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு கைது செய்தனர். அவரை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 24:: கணவர் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்து சொத்து சேர்த்திருந்தாலும் அதில் மனைவிக்கும் சம உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- 29:: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைதாகியிருந்த நிலையில் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்த சில மணி நேரத்தில் அட்டர்னி ஜெனரலை ஆலோசித்து முடிவெடுப்பதாக பதவிநீக்கத்தை நிறுத்தி வைத்தார்.
- 30:: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 10,000-க்கும் அதிகமான வங்கிக் கணக்குகளில் ரூ.2,700 கோடி அளவுக்கு நிகழ்ந்த ரொக்கப் பரிவர்த்தனை தொடர்பான கணக்குகள் முழுமையானதாக இல்லை என வருமான வரித் துறை சோதனையில் கண்டறியப்பட்டது.
ஜூலை
- 6:: 2019 லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி. ரவீந்திரநாத் தனது வேட்பு மனுவில் சொத்துவிவரங்களை மறைத்தது, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அவரது வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- 7: தூத்துக்குடி மாவட்டம், சிவகளை அகழ்வாராய்ச்சிப் பணியின்போது கிமு.2500-3000 ஆண்டுகள் பழைமையான பொருள்கள் கண்டறியப்பட்டன. சிந்து சமவெளிக்கு இணையான நாகரிகம் தமிழகத்தில் இருந்ததற்கான சான்றுகளாக இவை அமைந்தன.
- 12:: எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
- 12:: ரூ.358 கோடி மதிப்பீட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டப்பட்ட 31,000 குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- 13:: வெளியூரிலிருந்து சென்னையில் தங்கிப் படிக்கும் பெண்களுக்கான அரசு விடுதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- 16:: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
- 18:: நியாயவிலைக் கடைகளில் கருவிழிப் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
- 21:: அனைத்துப் பல்கலை. மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்புகளுக்கு ஒரே பாடத்திட்டம் நிகழாண்டு முதல் அமல்படுத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
- 24:: மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்பப் பதிவு செய்யும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட்
- 1:: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.4,995 கோடி மதிப்பிலான 5436 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
- 3:: தமிழகம் முழுவதும் ரூ.8.29 கோடியில் புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
- 4:: எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவிட்டது.
- 6:: சென்னையில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாரத்தான்-2023 போட்டியில் 50,629 ஆண்கள், 21,514 பெண்கள், 1,063 மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்றனர். மொத்தம் 73,206 பேர் கலந்துகொண்ட இப்போட்டி கின்னஸ் சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது.
- 6:: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தர்பார் அரங்கம் பாரதியார் மண்டபமாக பெயர் மாற்றப்பட்டது. பெயர் மாற்ற கல்வெட்டை குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு திறந்து வைத்தார்.
- 10:: இந்தியாவில் முதல்முறையாக பெண் கைதிகள் இயக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை சென்னை அருகே புழலில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்.
- 16:: மறைந்த திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.செüந்தரராஜனுக்கு அரசு சார்பில் மதுரையில் அமைக்கப்பட்ட அவரது முழு உருவ வெண்கலச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- 23:: தமிழகத்தில் 31,000 பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் தொடங்கி வைத்தார்.
செப்டம்பர்
- 13:: தமிழகத்தில் ஆகம விதிகளைக் கற்றுத் தேர்ந்த க.ரம்யா, சி.கிருஷ்ணவேணி, ந.ரஞ்சிதா ஆகியோர் வைணவ திருக்கோயில்களுக்கு உதவி அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
- 15: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்ட தொடக்க விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், திட்டத்தைத் தொடங்கிவைக்கும் வகையில் 13 பெண்களுக்கு வங்கி பற்று அட்டைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வீதம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- 18:: பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அறிவித்தார்.
- 23:: இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அக்டோபர்
- 4:: யுஜிசி பிரதிநிதிகள் இல்லாமல் துணைவேந்தர்கள் நியமன தேடல் மற்றும் தேர்வுக் குழுவை தமிழக அரசு அமைத்ததற்கு யுஜிசி எதிர்ப்பு தெரிவித்து தமிழக தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியது.
- 11:: மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
- 21:: நீதிமன்றங்களுக்குச் செல்லும் வழக்குரைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணியக் கூடாது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டது.
- 31:: மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
நவம்பர்
- 3:: தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை.
- 8:: தமிழகத்தில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனத்துக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் தற்போதைய நிலைமையே தொடரும் என தெரிவித்தது.
- 16:: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உரிய கல்வித் தகுதி இல்லாததால் 56 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம்:
- 18: ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட, பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டங்கள் தொடர்பான 10 மசோதாக்களும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டன.
- 24:: பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வெளியிட்டது. 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டிசம்பர்
- 4:: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் பலத்த மழை; லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு
- 9:: மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
- 18:: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு பெருமழை; வெள்ளப் பெருக்கு; வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்.
- 21: சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதால் அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி.
நன்றி: தினமணி (31 – 12 – 2023)