- அறுபதுகளின் மத்தியில் தொடங்கிய பசுமைப் புரட்சி காலத்திலிருந்து தமிழ்நாடு விவசாயத் துறையில் சிறந்த மாநிலமாகப் பெயர் பெற்றிருந்தாலும், அதன் விவசாயிகள் வருவாய்க் குறைவு காரணமாகக் கடன் தொல்லையில் சிக்கிப் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகிறார்கள்.
- விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை வேளாண் துறைக்குத் தனி வரவு-செலவுத் திட்டம் தயாரிக்க உள்ள திமுக அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது அவசியமாகிறது.
- மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, முக்கியப் பயிர்களின் ஒரு ஹெக்டோ் மகசூல் தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தாலும், மொத்த உற்பத்தியில் மக்காச்சோளம், சில பருப்புப் பயிர்கள் தவிர மற்ற பயிர்களில் நம் மாநிலத்தின் பங்கு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் கடுமையாகக் குறைந்துள்ளது.
- 1980-83-களில் சராசரியாக 59.07 லட்சம் டன்களாக இருந்த மொத்த உணவு தானியங்களின் உற்பத்தி 2017-20 ஆண்டுகளில் 107.91 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளபோதிலும், தமிழ்நாட்டின் பங்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் 4.51%-லிருந்து 3.73%-ஆகக் குறைந்துள்ளது.
- இதே காலகட்டத்தில், தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல் உற்பத்தியின் பங்கு 8.62%-லிருந்து 5.73% ஆகவும், துவரை 2.13%-லிருந்து 1.38% ஆகவும், மொத்த எண்ணெய்வித்துப் பயிர்களின் உற்பத்தி 9.31%-லிருந்து 3.17% ஆகவும், பருத்தி 3.52%-லிருந்து 1.17%-ஆகவும், கரும்பு 10.18%-லிருந்து 4.19%-ஆகவும் குறைந்துள்ளது.
- இந்தப் புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன? தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி வேகம் சராசரி இந்தியாவின் வளா்ச்சி வேகத்தைக் காட்டிலும் குறைவாக உள்ளது.
- இதற்கு முக்கியக் காரணம், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குக் குறைந்துவரும் நிகர சாகுபடிப் பரப்பு. 1970-71-லிருந்து 2018-19 வரையில், மொத்தமாக 15.87 லட்சம் ஹெக்டோ் சாகுபடிப் பரப்பை தமிழ்நாடு இழந்துள்ளது.
- வேளாண் உற்பத்தி சார்ந்த பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டு விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துவருகிறார்கள். முதல் பெரும் பிரச்சினை பயிர்ச் கிடைக்கும் குறைவான வருமானம்.
- இந்தியக் கிராம மக்களின் நிதி நிலவரத்தை அறிய நபார்டு வங்கியால் 2016-17-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, தமிழ்நாட்டு விவசாயக் குடும்பத்தின் மாத வருமானம் வெறும் ரூ.9,775 மட்டுமே.
- இதைவிட அதிர்ச்சியான விஷயம், தமிழ்நாட்டு விவசாயிகளின் மொத்த ஆண்டு வருமானத்தில் பயிர்ச் சாகுபடியில் கிடைக்கும் வருவாய் வெறும் 27%. இது இந்தியாவின் சராசரி அளவைவிட (73%) மிகவும் குறைவு.
- அதிகமாகத் தேவைப்படும் பயிர்ச் சாகுபடிச் செலவு குறைவான வருமானத்துக்கு முக்கியக் காரணம்.
- இந்திய அரசின் வேளாண் செலவு மற்றும் விலை ஆணையத்தின் (2017-18) புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் முக்கியப் பயிர்களின் உற்பத்திச் செலவு, நாட்டின் சராசரிச் செலவைவிட மிகவும் அதிகம்.
- நெல்லுக்கு 26.01%, சோளத்துக்கு 67.78%, உளுந்துக்கு 33.59%, நிலக்கடலைக்கு 13.32%, பருத்திச் சாகுபடிக்கு 42.99% கூடுதலாகத் தமிழ்நாட்டு விவசாயிகள் செலவு செய்துள்ளார்கள்.
- வருமானக் குறைவால் விவசாயிகள் பெரும் கடனாளிகளாக மாறிவிட்டனா். 2016-17 புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில் 61% விவசாயிகள் கடன்பட்டுள்ளார்கள். இது இந்திய சராசரி அளவைவிட (47%) அதிகம்.
- விவசாயக் குடும்பத்தின் கடனளவும் (ரூ.1,00,266), இந்திய அளவைவிட (ரூ.70,580) அதிகம். தொடர்ந்து கடன் வாங்கி விவசாயம் செய்வதால், தமிழ்நாட்டு விவசாயிகளின் கடன்-சொத்து விகிதம் (4.19), இந்தியாவின் சராசரி அளவைக் (2.46) காட்டிலும் மிகவும் அதிகம்.
விவசாயிகளின் பிரச்சினைகள்
- விவசாய வளர்ச்சியும், விவசாயிகளின் வருமான வளர்ச்சியும் நெருங்கிய தொடர்புடையவை.
- விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வழிவகை செய்யாமல், விவசாயத் துறையில் வளர்ச்சி ஏற்படுத்துவது சிரமம். எனவே, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க புதிய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- முதலில், நீர்ப்பாசன வளர்ச்சியைப் பெருக்க நடவடிக்கை வேண்டும். 1960-61 முதல் 2016-17 வரையிலான காலகட்டத்தில் மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் எந்த வளர்ச்சியும் அடையாத ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஆகவே, செலவு குறைவான குளம், கால்வாய்ப் பாசனத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும்.
- இரண்டு, பயிர்ச் சாகுபடியில் கூலிச் செலவு அதிகமாக உள்ளதால், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் பயிர்ச் சாகுபடி வேலையுடன் இணைப்பதால் செலவைக் குறைக்க முடியும்.
- மூன்று, தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில், 21% மட்டுமே 2018-19-ல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது ஆந்திரம் (58.36%), தெலங்கானாவை (77.75%) விடக் குறைவாகும்.
- அரசு கொள்முதல் நிலையங்களில் பொருட்களை விற்றால் மட்டுமே விவசாயிகளால் குறைந்தபட்ச ஆதார விலையைப் பெற முடியும். எனவே, வேளாண் பொருட்களின் கொள் முதலை அதிகரிக்க வேண்டும்.
- நான்கு, இடைத்தரகர்களின் நடவடிக்கைகளால், குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகளால் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. குறைந்தபட்ச ஆதார விலையில் மட்டும் விளைபொருட்களை விற்பதற்கான உறுதிச் சட்டத்தை (Right to sell at MSP) இயற்ற வேண்டும்.
- ஐந்து, குறு, சிறு விவசாயிகள் பல்வேறு சிரமங்களில் உள்ளனர். இவர்களுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்களை வழங்க வேண்டும்.
- ஆறு, காய்கறி, பழவகைப் பயிர்களுக்குப் பெரும்பாலான நேரங்களில் உரிய விலை கிடைக்கவில்லை. கேரள அரசால் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள தோட்டப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தைத் தமிழ்நாட்டிலும் கொண்டுவர வேண்டும்.
- ஏழு, தெலங்கானா, ஒடிசா மாநிலங்கள் போன்று, விவசாயிகளுக்கான நேரடிப் பணவரவுத் திட்டத்தை, குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு அமல்படுத்த வேண்டும்.
- வேளாண் பொருட்களை நகரச் சந்தைகளுக்குக் கொண்டுவர விவசாயிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும்.
- எட்டு, வேளாண் சந்தையின் அடிப்படைக் கட்டுமான வசதிகள் பெரும்பாலான இடங்களில் மிகவும் மோசமாக உள்ளன.
- இதனை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், அனைத்து தாலுகாக்களிலும் உழவர் சந்தையை ஏற்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 - 08 – 2021)