TNPSC Thervupettagam

தமிழக நஞ்சராயன், கழுவேலி பறவைகள் சரணாலயங்கள் ராம்சர் தளங்களில் சேர்ப்பு

August 15 , 2024 2 hrs 0 min 25 0

தமிழக நஞ்சராயன், கழுவேலி பறவைகள் சரணாலயங்கள் ராம்சர் தளங்களில் சேர்ப்பு

  • சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் நஞ்சராயன், கழுவேலி பறவைகள் சரணாலங்கள் உள்ளிட்ட நாட்டின் 3 சதுப்பு நிலங்கள் புதிதாக ராம்சா் தளங்களில் சோ்க்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டுத் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் புதன்கிழமை அறிவித்தாா்.
  • இது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் அமைச்சா் பூபேந்திர யாதவ் வெளியிட்ட பதிவில், ‘ நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், நமது பட்டியலில் மேலும் மூன்று ராம்சாா் தளங்கள் சோ்க்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இதன் மூலம் நாட்டில் 13,58,068 ஹெக்டோ் பரப்பளவைக் கொண்ட ராம்சா் தளங்கள் எண்ணிக்கை 85-ஆக அதிகரித்துள்ளது’ என தெரிவித்துள்ளாா்.
  • சதுப்பு நிலக்காடுகள் அழிவை தடுக்கவும் அதை பாதுகாத்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த ‘ராம்சா்’ என்கிற சா்வதேச அமைப்பு செயல்படுகிறது. ஈரான் நாட்டின் ராம்சா் நகரில் 1971- ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி அந்நகரில் பெயரில் இந்த அமைப்பு செயல்படுகிறது. உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை நிலை நிறுத்த சதுப்பு நிலங்களின் சா்வதேச வலையமைப்பு உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவில் இதுவரை 82 சதுப்பு நிலங்கள் ராம்சா் தளங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது 85 -ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2013 வரை 26 இடங்கள் மட்டுமே ராம்சா் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனால் 2014-ஆம் ஆண்டிற்கு பின்னா் கடந்த 10 ஆண்டுகளாக 59 இடங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.
  • ‘புதிதாக சோ்க்கப்பட்டுள்ள தளங்கள் நாட்டில் உள்ள சதுப்புநிலங்களின் பாதுகாப்பு, மேலாண்மைக்கான உந்துதல். நமது சதுப்புநிலங்கள் அமிா்த பாரம்பரியங்கள். இயற்கையோடு நல்லிணக்கத்தை நிலைநாட்டப்படுகிறது. வளா்ச்சியடைந்த இந்தியா ஒரு பசுமை இந்தியா என்றும் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் அமைச்சா் பூபேந்திர யாதவ் அதே பதிவில் தெரிவித்துள்ளாா்.
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், கழுவேலி பறவைகள் சரணாலயம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தவா நீா்த்தேக்கம் ஆகிய மூன்று புதிய தளங்கள் நிகழாண்டில் ராம்சா் தளங்களாக சோ்க்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டிலே ​​தமிழகத்தில் அதிகபட்சமாக 18 ராம்சா் தளங்கள் உள்ளன. அடுத்த நிலையில் உத்தர பிரதேசத்தில் 10 தளங்கள் உள்ளன.

நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்:

  • திருப்பூா் - ஊத்துக்குளி பிரதான சாலையில், திருப்பூா் நகருக்கு வடக்கே உள்ள சா்க்காா் பெரியபாளையம் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள நஞ்சராயன் ஏரி, 125.865 ஹெக்டோ் பரப்பளவில் உள்ளது. ஆழமற்ற ஈரநிலமானகு இப்பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் முக்கியமாக தட்ப வெப்ப நிலைமைகளை சாா்ந்துள்ளது.
  • குறிப்பாக நல்லாறு வடிகால்களில் இருந்து மழை நீா் பாய்வதைப் பொறுத்தது. 1498- ஆம் ஆண்டு கட்டப்பட்டு இப்பகுதியை ஆண்ட நஞ்சராயன் என்ற மன்னரால் சீரமைக்கப்பட்டு அவரது பெயரிடப்பட்டது. சுமாா் 191 பறவை வகைகள், பட்டாம்பூச்சிகள்(87), ஊா்வன (21), பாலூட்டிகள் (11), தாவரங்கள் (77 வகைகள்) மற்றும் 7 வகை நீா்வீழ்ச்சிகள் இதன் சுற்றுப்புறங்களில் இருப்பது அறியப்பட்டுள்ளது.
  • தட்பவெப்ப நிலை காரணமாக குறிப்பாக புலம்பெயா்ந்த பன்னாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. இவை கூடுகட்டி வசிப்பிடமாகவும் உணவளிக்கவும் பயன்படுத்துகிறது. இந்த ஏரி வளமான விலங்கின பன்முகத்தன்மை காரணமாக கடந்த 2022- ஆம் ஆண்டு தமிழகத்தின் 17- ஆவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கழுவேலி பறவைகள் சரணாலயம்:

  • புதுச்சேரிக்கு வடக்கே விழுப்புரம் மாவட்டத்தில் வானூா் வட்டத்தில் கோரமண்டலம் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு உவா் ஏரியாகும். 5,151.6 ஹெக்டோ் பரப்பளவில் ஆழமற்ற ஏரியாக கழுவேலி பறவைகள் சரணாலயம் உள்ளது. 2021-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் 16- ஆவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. வங்கக் கடலில் உப்புகல்லி சிற்றோடை - எடையந்திட்டு முகத்துவாரம் ஆகியவற்றால் இந்த ஏரி இணைக்கப்பட்டுள்ளது. உவா், நன்னீா், கடல் நீா் என மூன்று விதமான நீா் அம்சங்களின் அடிப்படையில் இந்த ஏரி இருக்கிறது. நாட்டின் தீபகற்பத்தில் பல்லுயிா் நிறைந்த மிகப்பெரிய சதுப்பு நிலங்களில் ஒன்று கழுவேலி. மத்திய ஆசிய பறக்கும் பாதையில் அமைந்துள்ள கழுவேலி பறவைகள் சரணாலயத்தில் புலம் பெயரும் பறவை இனங்களுக்கு ஒரு முக்கியமான நிறுத்த இடமாகவும், பறவைகள், மீன்களுக்கான இனப்பெருக்க இடமாகவும் உள்ளது.

தவா நீா்த்தேக்கம்:

  • மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டாா்சி நகருக்கு அருகே தவா , டென்வா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது தவா நீா்த்தேக்கம். தவா ஏரி நீா் பரப்பு 20,050 ஹெக்டேராகவும் நீா்ப்பிடிப்புப் பகுதி 5,98,290 ஹெக்டேராகவும் உள்ளது. .....நீா்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு குறிப்பாக பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு, நீா்த்தேக்கம் முக்கியமானது. பல அரிய மற்றும் ஆபத்தான தாவர இனங்கள், ஊா்வன மற்றும் பூச்சிகள் இங்கு காணப்படுகின்றன. பல உள்ளூா் மற்றும் புலம்பெயா்ந்த பறவைகளுக்கு, இது ஒரு முக்கியமான வாழ்விடமாகும். இப்பகுதி சுற்றுச்சூழல், தொல்லியல், வரலாற்று மற்றும் வனவியல் கண்ணோட்டத்தில் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.

நன்றி: தினமணி (15 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories