TNPSC Thervupettagam

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு காண வேண்டும்!

December 18 , 2024 8 hrs 0 min 34 0

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு காண வேண்டும்!

  • இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்ட நிலையில், இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க இந்தப் பிரச்சினை குறித்து உறுதியான பதில் எதையும் தெரிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
  • இலங்கையின் புதிய அதிபராக, 2024 செப்டம்பர் மாதம் பதவியேற்றுக்கொண்ட அநுர குமார திசாநாயக்க, இந்தியா விடுத்த அழைப்பின்பேரில் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக டிசம்பர் 15 அன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்த அநுர குமார, இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
  • தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாகப் பேசிய அநுர குமார, இந்த விவகாரத்துக்கு, இரு நாடுகளும் சேர்ந்து நீடித்த, நிலையான தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார். இந்தப் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்று பிரதமர் மோடியும் கூறியிருக்கிறார்.
  • எனினும், இதுதொடர்பாக எந்த விதமான வாக்குறுதியையும் அநுர குமார வழங்கவில்லை. மாறாக, இலங்கைக் கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் இழுவை வலைகளை (Bottom trawling nets) பயன்படுத்துவது குறித்துப் பிரதமர் மோடியிடம் அவர் கவலை தெரிவித்திருக்கிறார்.
  • சுருக்குமடி, இழுவை வலை போன்றவற்றால் மீன்வளம் குறைந்துவிடும் என்பதால், இந்தியக் கடல் பகுதிகளிலேயே அவற்றைத் தடைசெய்ய வேண்டும் என்று பாரம்பரிய மீனவர்கள் தரப்பில் நீண்ட காலமாகப் பேசப்பட்டுவந்தது. அதன்படி, இந்த வலைகளைத் தமிழ்நாடு அரசும் தடைசெய்துவிட்டது. இதை எதிர்த்துச் சில மீனவச் சங்கங்கள் தொடர்ந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.
  • இந்தச் சூழலில், தமிழக மீனவர்கள் இழுவை வலைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக மட்டும் அழுத்தமாகப் பேசியிருக்கும் அநுர குமார, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், கைதுசெய்யப்படுவதையும் அவர்களுடைய படகுகள் சேதப்படுத்தப்படுவதையும் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுப்பது குறித்து குறிப்பாக எதையும் பேசவில்லை.
  • இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதாத தமிழக முதல்வர்களே இல்லை எனலாம். தற்போதுகூட, தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திரும்ப ஒப்படைப்பது குறித்தும் இலங்கை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
  • இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, உதவி செய்வதற்கு சீனா போன்ற நாடுகளும் பன்னாட்டு நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளும் பல நிபந்தனைகள் விதித்த நிலையில், இலங்கைக்கு இந்தியா மிகப் பெரிய அளவில் உதவிகளை வழங்கியது. இதுவரை இலங்கைக்குக் கடன், மானிய உதவியாக 500 கோடி டாலர் கொடுத்துள்ளது. பிரதமர் மோடியிடம் இதை நன்றியுடன் ஒப்புக்கொண்டிருக்கும் அநுர குமார, தமிழக மீனவர்களும் இந்தியர்கள்தான் என்பதையும் மறந்திருக்க மாட்டார்.
  • நெருக்கடிக் காலக்கட்டத்தில் இலங்கைக்கு அத்தியாவசியப் பொருள்களைத் தமிழக முதல்வரே நேரடியாகக் கப்பலில் அனுப்பிவைத்ததையும் இலங்கை மறந்திருக்காது. இந்தச் சூழலில், தமிழக மீனவர்கள் கைது பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.
  • இந்த நம்பிக்கை தகர்ந்துவிடக் கூடாது. மீன்வளம் குறைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தமிழகம் காட்டும் அக்கறையை, தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் தவிர்ப்பதில் இலங்கை அரசும் காட்ட வேண்டும். அப்போதுதான் இரு தரப்பு உறவின் அர்த்தம் வலுப்படும்!

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories