தமிழக ரேக்ளா போட்டிகளில் பிற மாநில காளைகள் - எதிர்ப்பு வலுப்பது ஏன்?
- காங்கயம்: தமிழகத்தில் நடக்கும் ரேக்ளா போட்டிகளில் பிற மாநில காளை இனங்களை பயன்படுத்தாமல், உள்ளூர் காளைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காங்கேயம் இன காளைகள் உழைப்புக்கு பெயர் பெற்றவை. அழகிய திமிலுடன் பார்க்கவே கம்பீரமாக இருக்கும் காங்கேயம் காளைகள், பார்த்த மாத்திரத்தில் அனைவரையும் ஈர்க்கும். இவை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சமீப ஆண்டுகளாக அதிகளவில் பயன்படுத்தப்படுகி்ன்றன.
- இது தொடர்பாக சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி கூறியதாவது: கடந்த 17 ஆண்டுகளாக காங்கேயம் கால்நடைகளை பாதுகாக்கும் பணியில் எங்கள் அறக்கட்டளை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
- இந்த தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, காங்கேயம் கால்நடைகளின் எண்ணிக்கை மீண்டு வரத் தொடங்கியுள்ளது. காங்கேயம் போன்ற உள்நாட்டு இனங்கள் உள்ளூர் காலநிலை மற்றும் விவசாயத்துக்கு முக்கியமானவையாகும். இருப்பினும் சமீப ஆண்டுகளில் காங்கேயம் கால்நடை வளர்ப்பவர்களுக்கு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
- கொங்கு மண்டலத்தில் நடைபெறும் ரேக்ளா போட்டிகளுக்கு, கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஹாலிக்கர் மற்றும் அமிர்தமகால் காளைகளை பயன்படுத்தி அதிகளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த இனங்கள் போட்டிகளில் குறுகிய கால வெற்றியை அடையலாம்.
- இதனால் நமது பாரம்பரிய கால்நடைகளுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய தீங்காகும். இது போன்ற நிகழ்வுகளால், பிற மாநிலங்களில் இருந்து கால்நடைகளை இறக்குமதி செய்வது, காங்கேயம் கால்நடைகளின் வாழ்வுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கும். அழகிய திமிலுடன் காணப்படும் காங்கேயம் காளை.
- காங்கேயம் போன்ற உள்ளூர் இனங்களைப் பயன்படுத்தி ரேக்ளா பந்தயங்களை நடத்த விவசாயிகள், அமைப்பாளர்களை வலியுறுத்துவோம். தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை காக்கவும், நாட்டினங்களை பாதுகாக்கும் வகையிலும், இனிவரும் நாட்களில் ரேக்ளா பந்தயங்களில் வெளி மாநில கால்நடைகளை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, காங்கேயம் இன காளைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பூரை சேர்ந்த ரேக்ளா போட்டியாளர்கள் சிலர் கூறும்போது, “கொங்கு மண்டலத்தின் அடையாளமாக காங்கேயம் இன காளைகள் உள்ளன. ரேக்ளா பந்தய அமைப்பாளர்கள் பிற மாநில இனங்களை முதலில் அனுமதிக்கக்கூடாது. இதில் தமிழக அரசு தனிகவனம் செலுத்த வேண்டும். நமது பாரம்பரிய இனங்களை பாதுகாப்பது அனைவரின் கடமை” என்றனர்.
- ரேக்ளா போட்டியாளர்கள் கூறும்போது, “தமிழகத்தில் மைலேஜ், மீட்டர் என இரண்டு பிரிவுகளில் ரேக்ளா பந்தயம் நடத்தப்படுகிறது. மைலேஜ் வகை நீண்ட தூரத்தைக் கொண்டுள்ளது. மீட்டர் வகை குறைந்த தூரத்தைக் கொண்டுள்ளது. இதில் காங்கேயம் இனம் உள்ளிட்ட உள்ளூர் இனங்கள் மட்டுமே தமிழகம் முழுவதும் மைலேஜ் பிரிவு போட்டிகளில் ஓடுகின்றன.
- கர்நாடக இனங்கள் மீட்டர் பிரிவில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை குறுகிய தூரத்தை குறைந்த நொடிகளில் கடக்கும் திறன் கொண்டவை. பந்தயத்தில் பயன்படுத்தப்படும் கர்நாடக மாடுகளின் விலை அதிகம். ஒரு பந்தய காளையின் விலை ரூ.13 லட்சம் வரை இருக்கும். எனவே எல்லோரும் அதை நோக்கி செல்ல மாட்டார்கள்” என்றார்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 02 – 2025)