- தமிழகம் முழுவதும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானம், தொழில் நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கட்டுமானப் பணிகளைத் தாண்டி விவசாய பணிகளிலும் அதிக எண்ணிக்கையில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், தமிழகத் தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, அவ்வப்போது போராட்டம் நடந்து வருகிறது.
- இந்நிலையில், கடந்த பிப்ரவரி 9-ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில், ‘வட மாநில தொழிலாளர்களுக்கு அனைத்து கட்டிட வேலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதால், தமிழக கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறி, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கட்டிடத் தொழிலாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
- தமிழகத்தின் பல பகுதிகளிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் முன்வைக்கும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூடுதல் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டைப் பொருத்தவரை ஏற்றுக்கொள்பவர்களுக்கு இணையாக மறுப்பவர்களும் உண்டு. அண்மையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான நடுப்பக்கக் கட்டுரையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பொருளாதார ஆய்வாளர் கி.சிவராமகிருஷ்ணன், “தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை பார்க்காமலோ, வேலைக்கு வர விருப்பம் இல்லாமல் இருப்பதாகவோ சொல்ல முடியாது.
- 2010-லிருந்து நமது பொருளாதார உற்பத்தி, சேவை ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்கு மாறிவிட்டது. தங்கள் வேலை நேரத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்வது, சுய தொழிலில் இருக்கும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றின் காரணமாகத் தமிழ்நாட்டு இளைஞர்கள், நடத்தர வயதினர் தொழிற்சாலைகள், உணவகங்கள், நிறுவனங்கள் ஆகிய இடங்களில் வேலை செய்வதைக் குறைத்துக் கொண்டனர் என வைக்கப்படும் வாதம் சரிதான்.
- தொழிலாளர் பற்றாக்குறையைச் சரிசெய்ய இந்நிறுவனங்களின் முதலாளிகள் வட மாநிலங்களை நோக்கித் திரும்பினர். அசாம், ஒடிசா மாநிலத்தவர் பேக்கேஜ்ஜிங், சுமைகளை கையாளுதல் போன்ற வேலைகளில் திறமையானவர்களாக அறியப்பட்டனர். பிஹார் மாநிலத்தவர்கள் கட்டுமானம், தச்சு வேலை போன்றவற்றில் திறம்படச் செய்பவர்கள். இதன் காரணமாக வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டு முதலாளிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது” என்று கூறியிருந்தார்.
- உலக அளவிலும், உள்நாட்டிலும் புலம்பெயரும் தொழிலாளர்கள் 3D (Dirty, Dangerous and Difficult) பணியாளர்கள் என்று பொதுவாக வரையறுக்கப்படுகின்றனர். அதாவது அசுத்தம் நிறைந்த, ஆபத்தான மற்றும் கடினமான பணிகளைச் செய்யக்கூடியவர்களாக அறியப்படுகின்றனர். வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் தொழிலாளர்கள் உயிரிழக்க நேரும்போதெல்லாம், அரசுக்கும் சம்பந்தப்பட்ட தொழிலாளியின் குடும்பத்தினருக்கும் அவரது உடலை எப்படியாவது ஊருக்கு கொண்டு வந்து சேர்த்தால் போதும் என்ற எண்ணே மோலோங்கி இருக்கிறது. இந்த நிலை உள்நாட்டில் இடம்பெயரும் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.
தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறதா?
- வட மாநிலத் தொழிலாளர்கள் வருகையால், தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறதா என்பது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறியது: “வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் நுழைந்து வணிகத் துறையில் பணியாற்ற வந்ததால்தான் ,பல்வேறு வணிகத்தை நாம் தொடர்ந்து நடத்த இயல்கிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரவில்லை என்று குற்றம்சாட்டுபவர்கள், எங்கள் அமைப்பின் மீது பொறாமை கொண்டவர்களாக இருக்கலாம். அல்லது மாநிலத்தினுடைய வளர்ச்சி பிடிக்காதவர்களாக இருக்கலாம். இவர்கள்தான் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.
- ஒரு காலக்கட்டத்தில் திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை மண்டலங்களில்தான் வட இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருவதைப் பார்த்திருந்தேன். ஆனால், இப்போது தமிழகம் முழுவதுமே, அனைத்து துறைகளிலுமே, குறிப்பாக ஹோட்டல், டீக்கடைகள், வணிகக் கடைகள் என அனைத்து நிறுவனங்களிலும் அவர்கள் பணியாற்றுகின்றனர். சென்னையில் ஒரு ஹோட்டலில் நூறு பேர் வேலை செய்தால், அவர்களில் 70 பேர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் பணியாற்றுகின்றனர். வட மாநிலத் தொழிலாளர்கள் வணிகத்தைத் தாண்டி தற்போது விவசாயத்திற்கும் சென்றுவிட்டனர். வயலில் நடவு செய்யும் பணிகளில்கூட அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- இதற்கு முக்கியக் காரணம், நமது மாநிலத்தில் உள்ளவர்கள் வேலை செய்வதற்கு தயராக இருப்பது இல்லை என்பதே. இதற்கு இன்னொரு காரணமாக இருப்பது, பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், நமது மாநிலத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் உயர் கல்வி பயின்றவர்கள் இருக்கின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ளவர்கள் தங்களது படிப்பிற்கு ஏற்ற வேலை வேண்டும் என்றுதான் தேடுகின்றனர். அல்லது, அரசு வேலை வேண்டும் என்றுதான் அதிகம் பேர் நினைக்கின்றனர். எந்தப் படிப்பு படித்திருந்தாலும், எந்த வேலையும் செய்ய தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
- நமது ஊரில், ஏர்போர்ட்டில் சென்று ஒருவர் வேலை பார்ப்பார். அதற்கு அதிகபட்ச ஊதியமாக ரூ.8000-ல் இருந்து ரூ.12,000 வரை பெறுவர். ஆனால், அதே நபர் ஏதாவது ஒரு கடையில் சென்று வேலை செய்வதை, தங்களது தரத்திற்கு குறைவானதாக கருதுகின்றனர். தன்னுடைய மகன் ஏர்போர்ட்டில் வேலை செய்கிறார் எனச் சொல்ல வேண்டும் என்பதைத்தான் பெற்றோர்களும் விரும்புகின்றனர். ஆனால், நாங்கள் ஒரு கடையில் வேலை செய்யும் நபர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமே ரூ.15,000 வரை வழங்குகிறோம். இதுதவிர மூன்று வேளை உணவு, தங்குமிடம் என அனைத்தும் தருகிறோம். இதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் ரூ.25,000 வரை வருகிறது.
- ஆனால், இதுபோன்ற வேலைகளில் இங்கு பணியாற்றினால், தங்களது படிப்பிற்கும், தரத்துக்கும் பங்கம் ஏற்படுவதாக எண்ணி சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் அவர்கள் அந்நாடுகளில் ஹவுஸ் கீப்பீங் வேலை போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இதை எதற்காக கூறுகிறேன் என்றால், தமிழ்நாட்டில் கடைகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள் தேவைப்படுகின்றனர். தமிழகத்தின் தொழில்துறை பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் போரூர், செங்கல்பட்டு எல்லாம் வெகு தொலைவில் இருந்தன. ஆனால், தற்போது அந்த நிலை மாறிவிட்டது. அந்த அளவுக்கு தொழில் துறையும் அதிகமாகி வருகிறது. வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது.
- தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பணியாற்றினால், அவர்களுடைய வருமானத்தை நமது மாநிலத்திலேயே செலவு செய்வார்கள். இதனால், இங்குள்ள வியாபாரிகளுக்கு அதிகப்படியான வியாபாரம் நடக்கும். ஆனால், இன்று பல ஆயிரம் கோடிகள், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால், பல வியாபாரிகளுக்கு வணிகத் துறையில் குறைவு ஏற்பட்டு வருகிறது. யாரும் வருத்தப்பட்டாலும் கூட, இதுபோன்ற வேலைகளுக்கு ஆட்கள் வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் இருந்தால்தான் வணிகத்தைச் சிறப்பாக செய்யக்கூடிய நிலை இருந்து வருகிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேபோல், அவர்களுக்கு இடையூறு ஏற்பட்ட சமயத்தில் அரசு எடுத்த உரிய நடவடிக்கையின் காரணமாக அவர்கள் தகுந்த பாதுகாப்புடன் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
- அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலைகளைத் தர வியாபாரிகள் தயாராக உள்ளனர். வணிக நிறுவனங்களில் ஜிஎஸ்டி கணக்கு விவரங்களைப் பராமரிப்பதற்கு அக்கவுண்ட் பிரிவிற்கு ஆட்களே கிடைப்பது இல்லை. கடைக்கு ஒரு அக்கவுண்டன்ட் தேவைப்படுகிறது. ஆனால், ஆட்கள் கிடைக்காததால், கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது" என்றார்.
தொழிலாளர் பற்றாக்குறை
- இதுதொடர்பாக அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தின் மேனாள் தேசிய தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியது: "வடமாநிலத் தொழிலாளர்களின் வருகையால், தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்று சில ஊடகங்களும், சில அரசியல்வாதிகளும்தான் சொல்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஒரு கொத்தனார், பெரியாள், சித்தாள் என யாராவது ஒருவர், அவர்கள் வந்ததால் எங்களுக்கு வேலை இல்லை என்று சொல்கிறார்களா?
- தமிழகத்தில் ஒருசில இடங்களில் போராட்டங்கள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால், உண்மையில் இங்கிருப்பவர்களுக்கு வேலை செய்துதான் பிழைக்க வேண்டும் என்ற நிலை இல்லை. நம் மாநிலத்தின் பொருளாதாரம் அந்தளவுக்கு வளர்ந்துவிட்டது. எனவே, இங்கிருக்கும் பலர் சேற்றில் காலை வைப்பதற்கு தயாராக இல்லை. தமிழ்நாட்டில் உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 58 சதவீதம் வரை வந்தாகிவிட்டது. இதனால், தொழிற்சாலை உள்ளிட்ட ஏதாவது ஒரு இடத்திற்கு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர்.
- எனவே, வட மாநிலத்தவர்களின் வருகையால், கட்டுமானத் துறையிலோ, விவசாய பணிகளிலோ தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது என்று சொல்லவே முடியாது. அவ்வாறு சொல்லப்படுவது தனிநபர்களின் சுயலாபத்துக்காக கூறுகின்றனர். அடிப்படையில் நமக்கு பொருளாதார முன்னேற்றம் வேண்டும். பொருளாதார முன்னேற்றம் வேண்டும் என்றால், கட்டுமானம் சிறப்படைய வேண்டும். கட்டுமானம் என்றால் வீடு மட்டுமல்ல, சாலை வசதிகள், பாலங்கள், அனல்மின் நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி அடைந்தால்தான், ஒரு மாநிலமோ, ஒரு நாடோ முன்னேற்றம் அடையும்.
- அத்தகைய முன்னேற்றத்திற்கு நமக்கு தொழிலாளர்கள் வேண்டும். கட்டுமானத் துறையில் 40 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், 70 சதவீதம் தொழிலாளர்கள் குறைந்துவிட்டனர். இயந்திரங்களின் பயன்பாடு அதிகமாகியுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு 10-வது மாடியில் கான்கிரீட் போட வேண்டும் என்றால், சாரம் அமைத்து நூறு பேர் வரை நிற்க வேண்டும். இன்றைக்கு 4 பேர், ஒரு பெண் பணியாளரை உதவியாக வைத்துக்கொண்டு கான்கிரீட் போட்டுவிடுகின்றனர். இந்தளவுக்கு இயந்திரங்கள் வந்தபிறகும்கூட, நமக்கு தொழிலாளர் பற்றாக்குறை இருக்கிறது. அதில் தமிழகத்தில் நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கிறது.
- பிஹார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசத்தில் இந்தளவுக்கு பொருளாதார முன்னேற்றம் கிடையாது. அங்கு அவர்களுக்கு வேலை இல்லை என்பதால் தமிழகத்துக்கு வருகின்றனர். அவர்களது சொந்த மாநிலம் பொருளாதார முன்னேற்றம் அடைந்து, அங்கேயே அவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தால், நமது நிலை அதோகதிதான். அதன்பிறகு நாம் பிலிப்பைன்ஸ், வங்க தேசத்தில் இருந்துதான் வேலைக்கு ஆட்களைக் கூட்டி வரவேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
- மைக்கைப் பிடித்துக் கொண்டு பேசுபவர்கள் பேசட்டும். அவர்களா தொழில் செய்கின்றனர்? தமிழகத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால்தான் அங்கிருந்து அழைத்து வருகிறோம். அதேபோல், அவர்கள் நன்றாக உழைக்கின்றனர். நமது ஊர்காரர்கள் 3 பேர் செய்கின்ற வேலையை வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரோயொரு தொழிலாளர் செய்கிறார். இது உண்மை.
- கட்டுமானத் துறையில் எங்களுக்கு உள்ளூரில் ஆட்கள் கிடைப்பது இல்லை. விமானம் மூலம் அழைத்து வருகிறோம். உள்ளூரில் எங்களுக்கு ஆட்கள் கிடைத்தால், நாங்கள் ஏன் விமானக் கட்டணம் செலுத்தி அவர்களை அழைத்து வரப்போகிறோம்? கொல்கத்தா விமானத்தை நீங்கள் பார்த்தால், அதில் பாதி பேர் பணியாளர்கள்தான் வருவார்கள். கரோனா சமயத்தில் ஏசி பேருந்து மூலம் கொல்கத்தாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்தோம்.
- அதேபோல், பல ஆண்டுகளுக்கு முன்னால், வட மாநிலத் தொழிலாளர்கள் பணிசெய்யும் இடங்களில் உள்ள தங்குமிடங்கள் மிக மோசமாகவும், கழிவறைகள் இல்லாமலும் இருக்கும். இதனால், அவர்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க திறந்தவெளியில் செல்ல வேண்டிய நிலை இருக்கும். ஆனால், தற்போது கழிவறை, தண்ணீர் வசதிகளுடன் கூடிய வகையில் தங்குமிடங்கள் அமைத்து பார்த்துக் கொள்கிறோம். இல்லையென்றால் அவர்கள் திரும்பிச் சென்றுவிடுவர். சில நிறுவனங்கள் அவர்களுக்கு மெஸ் வைத்து மூன்று வேளை உணவும் கொடுக்கின்றன. இதனால் அவர்கள் ரூ.10,000 முதல் சம்பாதிக்கும் தொகையை அப்படியே அவர்களது குடும்பத்தினருக்கு அனுப்பிவைக்கின்றனர் என்பதே நிஜம்” என்று அவர் கூறினார்.
நன்றி: தி இந்து (28 – 03 – 2023)