TNPSC Thervupettagam

தமிழர்கள்: ஓர் ஆழமான அறிமுகச் சித்திரம்

January 19 , 2025 18 days 61 0

தமிழர்கள்: ஓர் ஆழமான அறிமுகச் சித்திரம்

  • தமிழர்கள் யார் என்கிற அறிமுகச் சித்திரத்தைத் தரும் நூல் The Tamils: A Portrait of a Community. ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் நிர்மலா லக்ஷ்மண் எழுதியிருக்கிறார். ஆங்கிலம் வழியாகத் தமிழ் சமூகத்தை அறிமுகப்படுத்தும் இந்த நூல் மிகவும் நுணுக்கமான விவரணைகளுடன் தமிழர்கள் குறித்த ஓர் ஆழமான பார்வையை நம் முன் வைக்கிறது. வெகுமக்கள் படிப்பதற்கான புத்தகமாக உருவாக்கப்பட்டிருக்கும் அதேநேரம், தகவல் வெள்ளம் பாயும் இந்தக் காலத்தில் தமிழ்ச் சமூகத்தை வரையறுக்கும் அடிப்படை அம்சங்களை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்து, நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநயமிக்க நகைபோல் இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது.
  • தமிழர்களின் மேதமை, பங்களிப்பு, பார்வை குறித்து உலகம் மதிக்கும் பல அறிஞர்கள் பேசியும் எழுதியும் இருந்தாலும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியா குறித்து முன்னிறுத்தப்படும் விஷயங்களில் தமிழ், தமிழர்களுக்கு உரிய மதிப்பும் இடமும் எல்லா நேரமும் வழங்கப்படுவதில்லை. தேய்வழக்காகச் சில அடையாளங்களே திரும்பத் திரும்ப முன்னிறுத்தப்படுகின்றன. அந்த அம்சங்களைக் களையும் வகையில் யார் தமிழர், அவர்களின் தனித்துவம்என்ன, பெருமிதங்கள் எவை, மானுடத்துக்குத் தமிழர்களின் பங்களிப்பு என்ன என்பதுடன் இங்கே தங்கிவிட்ட சில பிற்போக்குத்தனங்களையும் ஆதாரங்கள், ஆய்வுபூர்வக் கருத்துகள் அடிப்படையில் இந்தப் புத்தகம் நிறுவுகிறது.
  • தமிழர்கள் தனித்த மரபைக் கொண்டவர்கள். நவீனத்தை சுவீகரித்துக்கொண்டாலும் மரபைத் துறக்காதவர்கள், அதில் ஆழமாக நங்கூரமிட்டவர்கள். வரலாற்றின் ஏற்ற இறக்கங்கள், பல்வேறு வெளித்தாக்கங்கள், மாற்றங்கள் ஆகியவற்றை எல்லாம் கடந்து, மரபின் தொடர்ச்சியும் 2000 ஆண்டு நெடிய பயணத்தைத் தாண்டி உலகமயமாகிவிட்ட இந்த நவீனக் காலத்திலும் சங்கக் கவிதைகளை நாள்தோறும் உச்சரிக்கும், தங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள சமூகமாகத் தமிழ்நாடு இருக்கிறது. திருக்குறள், தொல்காப்பியம், சமண-பௌத்த மதங்கள் அளித்த கல்வி - பண்பாட்டு எச்சங்கள் போன்றவற்றின் தொடர்ச்சி இன்றுவரை ஏதோ ஒருவகையில் தமிழ் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் தமிழின், தமிழரின் தனித்தன்மைகளில் குறிப்பிடத்தக்கது. மொழி, பண்பாட்டில் காணப்படும் இந்தத் தொடர்ச்சிக்கு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிடப் பண்பாடு, அரசியல் சார்ந்த விழிப்புணர்வு பரவலானது முக்கியமான காரணம் என்கிறார் ஆசிரியர்.
  • ஒரு பண்பாட்டில் இலக்கியத்தின் தாக்கம் இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடர்வது திட்டவட்டமாக அசாதாரணமான ஓர் அம்சம் என்கிற மானுடவியல் பேராசிரியர் அர்ஜுன் அப்பாதுரையின் கூற்றை ஆசிரியர் வலியுறுத்துகிறார். அதேபோல் சங்க இலக்கியத்தை ஒருவர் நேரடியாகப் பயன்படுத்தவில்லை என்றாலும்கூட அவர்களுடைய பேச்சில் சங்க இலக்கியச் சொற்கள் இயல்பாகப் பொதிந்து கிடப்பதை நினைவுபடுத்துகிறார்.
  • ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’ எனத் திருமந்திரத்தில் திருமூலர் கூறும் கூற்று, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் எனப் பலரது எழுத்துகளையும் தமிழ்த்தாய் எனும் மொழிக்கடவுள் தமிழ்ச் சமூகத்தில் பெற்றுள்ள தனித்த மதிப்பையும் முன்வைத்து இதைக் கூறியுள்ளார். இப்படிப் பல்வேறு வகைகளில் தமிழர்களைப் பிணைக்கும் முதன்மைச் சக்தியாகத் தமிழ் மொழி திகழ்கிறது.
  • உலகின் ஒரு சில மொழிகளிலேயே காணப்படும் தொன்மையான இலக்கியங்களுக்கு இணையானவை சங்க இலக்கியங்கள் என்றாலும், தமிழ்ச் சமூகத்தின் தொன்மைக்குத் தொல்லியல் ஆதாரங்கள் கண்டறியப்படாமல் இருந்ததால், உலக அளவிலான ஆய்வாளர்கள் அதன் காலத்தையும் பண்டை வரலாறு குறித்த கேள்விகளையும் எழுப்பிய வண்ணம் இருந்தனர். அதற்கு பதில் அளிக்கும் வண்ணம் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் தலங்களில் சமீப ஆண்டுகளில் கண்டறியப்பட்டுவரும் தொல்லியல் ஆதாரங்களை இந்த நூல் விரிவாக முன்வைக்கிறது. அத்துடன் மூவேந்தர்கள் யார், அவர்கள் ஆட்சி செலுத்திய நிலப்பகுதி எது என்பதையும் தெளிவாக வரையறுத்துக் கூறுகிறது.
  • தமிழர்களிடம் நிலவும் சாதி வேற்றுமை, சமூக ஏற்றத்தாழ்வு ஆகிய பிரச்சினைகளைத் தாண்டி, மொழி உணர்வுக்கு அடுத்தபடியாக ஊர் சார்ந்த உணர்வும் தமிழர்களிடம் ஆழமாக மேலோங்கி இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். தமிழர்களின் இலக்கிய ஆர்வத்துக்கு இணையாக, வெகுமக்களை ஈர்க்கும் மேடைப் பேச்சு சார்ந்தும் இந்த நூல் கவனப்படுத்துகிறது.
  • இந்த அம்சங்கள் ஒவ்வொன்றையும் மூத்த மொழியியலாளர் டேவிட் ஷுல்மன், மொழியியல் மானுடவியலாளர் பார்னி பேட், சமூகவியலாளர் வாலன்டைன் டேனியல், தொல்லியல் அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன், வெ.வேதாசலம், ஒய்.சுப்பராயலு, கா.ராஜன் எனப் பலரின் முக்கியக் கருத்துகள், நூல் பிழிவுகள் மேற்கோள் காட்டி விளக்கப்பட்டிருக்கின்றன. தமிழை வரையறுக்கும் சிறந்த கவிதை வரிகள், மேற்கோள்கள், ஒப்புமைகள் நூலெங்கும் பரவலாகக் கையாளப்பட்டுள்ளன.
  • பன்மைத்துவக் குரல்களை, பல்வேறு தரப்புகளின் கதைகளை இந்த நூல் முன்வைக்கிறது. காலந்தோறும் பல்வேறு சமூகப் போராட்டங்கள், அறிவு மரபை-உரிமைகளை முதன்மைப்
  • படுத்தும் தன்மை, சமூக விழிப்புணர்வு இயக்கங்கள் காரணமாகத் தனக்கென தனித்த ஓர் அடையாளத்தைத் தமிழர்கள் உருவாக்கிக் கொண்டுள்ளனர். நெடிய சிந்தனை மரபைக் கொண்ட ஓர் மொழிக் குழுவினராகத் தமிழ் நிலத்தில் கால்கொண்டிருந்தாலும் ஒட்டுமொத்த மனித குலத்தையும் உலகையும் பற்றியே தமிழ்ச் சமூகம் சிந்தித்தது, கவலைப்பட்டது.
  • வேற்று நாட்டவர், வேற்று மதத்தவர், வேற்று மொழி பேசுபவர் என அனைத்துத் தரப்பினரையும் வரவேற்று இணக்கமாக வாழ்வது தமிழ்ச் சமூகத்தில் காலங்காலமாகத் தொடர்ந்துவரும் அடையாளம். இப்படித் தமிழர்கள் ஒருபுறம் பன்மைத்துவத்தை வரவேற்றாலும், காலந்தோறும் சீர்திருத்தங்களை ஏற்றாலும், எல்லோரும் சமம் என்பது சார்ந்து சிந்தித்தாலும் இந்த நவீனக் காலத்திலும் தமிழர்களிடம் சாதிய உணர்வு மேலோங்கியே இருப்பது ஓர் பிரச்சினை.
  • தமிழர்களை அறிமுகப்படுத்தும் ஒரு புத்தகமாக இதை எழுதியிருந்தாலும், ஒரு தனிநபரின் பார்வையிலிருந்தே இதைச் சொல்வதாக ஆசிரியர் அடக்கத்துடன் கூறியிருக்கிறார். இந்த நூலுக்காக நான்கு ஆண்டுகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்; தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குப் பயணித்திருக்கிறார், பல அறிஞர்களை நேர்காணல் செய்திருக்கிறார்.
  • ஒரு நெடிய நாகரிகத்தின், வரலாற்றின், பண்பாட்டின் வளர்ச்சி-தொடர்ச்சி குறித்த ஒரு நம்பகமான அறிமுகச்சித்திரமாக இந்த நூல் அமைந்துள்ளது. பெருங்கடலைச் சிறு சங்குக்குள் அடைக்கும் முயற்சிதான் இது என்றாலும், அந்தச் சவாலை ஆசிரியர் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். 5,000 ஆண்டு வளமான பண்பாடும் வரலாறும் கொண்ட ஒரு நிலத்தின் மக்களையும் மொழியையும் பற்றி ஆங்கில வாசகர்களுக்கு, விரிவும் ஆழமும் கூடிய, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒரு திட்டவட்டமான அறிமுகத்தை இந்த நூல் வழங்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories