- நம் நாட்டின் நாகரிகத்தின் தொன்மையை, உண்மையை வெளிக்கொணர்வதில் வரலாற்று ஆசிரியர்கள், தொல்லியல் துறை வல்லுநர்கள், இன்னும் பிற துறை சார்ந்த ஆய்வுத்திறனாளிகள், பேரறிஞர்கள் என அனைவருடைய அயராத உழைப்பும் பங்களிப்பும் அளப்பரியதாகும்.
- இயற்கை, செயற்கைச் சீற்றங்களினால் புதைந்துபோன தமிழ்த் தொல்நாகரிகத்தின் பண்டைத் தடயங்களை ஆதிச்சநல்லூர், அத்திரம்பாக்கம், கொடுமணல் போன்றவை எடுத்துக்காட்டினாலும், அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கீழடியின் எச்சங்களும் மிச்சங்களும் பழந்தமிழருடைய பண்பட்ட நாகரிக உச்சத்தின் அடிச்சுவடுகளை விரித்துக் காட்டுகின்றன.
அகழாய்வு
- தற்போது ஆறாம் கட்ட அகழாய்வுகள் தொடங்கிய நிலையில், மதுரையிலுள்ள வைகை ஆற்றின் கரையோரத்திலே சீரும் சிறப்புமாக விளங்கியிருந்த நகரங்களில் ஒன்று கீழடியாகும் என்பதில் ஐயப்பாடுகள் எதுவுமில்லை என்று பேரறிஞர்கள் சொல்லுகின்றனர்.
- தமிழ்க்குடி மக்கள் செய்த தவப்பயனாய் கீழடியில் வெளியெடுக்கப்பட்ட பொருள்கள் தமிழரின் தொன்மையைப் பறைசாற்றுவதுடன் கீழடியின் காலத்தையும் அறுதியிட்டுச் சொல்லுவதற்குச் சான்றுகள் பகர்கின்றன. அதாவது, தந்தத்தினாலான பொருள்கள், சுடுமண் பானையின் மிச்சங்கள், சுடுமண்ணாலான சிற்பங்கள், உலோகக் கருவிகள், சங்கு, முத்து, கல்மணிகள், தங்கம் இவற்றாலான அணிகலன்கள், தக்களிகள், விளையாட்டுப் பொருள்கள், வேளாண்மைக் கருவிகள், விலங்குகளின் எலும்புத் துண்டுகள் போன்ற ஐந்தாயிரத்திற்கும் மேலான தொல்பொருள்களைக் காணும்போது கீழடி அழகியவொரு நகரியக் குடியிருப்பாகவும் தொழிற்கூடப் பகுதியாகவும் இருந்ததைப் பேரறிஞர்கள் வலியுறுத்திச் சொல்லுகின்றனர்.
உதாரணம்
- மேற்கண்டவற்றைக் குறிக்கும் வகையில் பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலையில் காணும் சொற்றொடரான "தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்' என்பதையும், எட்டுத்தொகையில் ஒன்றான புறநானூற்றில் "கடல்பயந்த கதிர்முத்தும்' ஆகியனவற்றையும் கூறலாம்.
- மேலும், தமிழ்நாட்டின் சிற்பக்கலை அறிஞர் மறைந்த வை.கணபதி ஸ்தபதியின் ஆய்வுக் குறிப்புகளில் "ஆழ்கடலோர முல்லையணி பெருந்தல மேயாக, ஆழ்கடல் முத்தெடுத்து அணிகலை வளர்த்த காட்சி, ஆழ்கடல் முத்துக்கொண்டு அயலவர் வாணிகச்சீர்...' என்று குறிப்பிடுவதன் வாயிலாகத் தென்னாட்டு முத்து விளைச்சலும் அயலாருடன் தமிழர் முத்து வாணிபம் புரிந்ததும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
- பண்டைத் தமிழ்க் கலைஞர்களின் கைவினைத்திறன் பற்றிக் குறிப்பிடுகையில் "மண்ணியல் மதியா லாய்ந்து மண்ணியல் வகையறிந்து மண்தொழில் வகையின் மாட்சி' என்றும், பிரிதொரு இடத்தில் "மண்கலம் மண்ணி னாற்றல் மண்ணியல் நிலையறிந்து' என்றும் கணபதி ஸ்தபதியின் ஆய்வுகளில் காணலாகிறது.
- கீழடிக் கலைஞர்கள் மண்ணின் தன்மையை நன்கறிந்து அதனுடைய இயல்புக்கு ஏற்ப பலவகையான மண்கலயங்களை வனைந்திருக்கின்றனர். இத்துடன் அம்மக்கள் பயன்படுத்திய மண்ணாலான செங்கல், சுடுபொம்மைகள், காதணிகள் முதலானவை காலத்தையும் விஞ்சிக் காணக் கிடைத்துள்ளதைப் பார்க்கும்போது தமிழர்களுடைய நுட்பதிட்பத்தை அறிவதற்கு ஸ்தபதியின் மேற்கண்ட குறிப்புகளே சாலும்.
பழங்கால வழக்கம்
- தமிழ் மரபில் பெண்ணுக்குச் சீதனம் என்ற பெயரில் வழங்குகின்ற கலன்களில் பெயரைச் சுருக்கமாக பொறிப்பது வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. இவ் வழக்கம் பழங்காலத்தின் தொடர்ச்சியே போலும். ஆகையால்தான் இன்று கீழடியில் காணக் கிடைத்துள்ள பொருள்களில் பெரும்பாலான மட்கல ஓடுகளில் கீறல்கள், சித்திரக் குறியீடுகள் தென்படுகின்றன. சிற்ப மரபில் "குறிகுறியீடே வரைவெனவாகி' என ஒன்றைக் குறித்து வரையப்படுவதையே சித்திரக் குறியென்றும், "கோடுடன் குறியுங் கண்டு, குணமுறும் எழுத்துங் கண்டு' என்ற குறிப்பும் உள்ளது.
- இம் மக்கள் எழுத்தறிவும் கலையறிவும் பெற்றதொரு பண்பட்ட நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் என்ற பெருமையையும் கீழடி எடுத்துக்காட்டுகிறது. இன்றுவரை வரைவதற்கு "கீறுதல்' என்றே இலங்கைத் தமிழர்கள் கூறுவதை ஒப்புமை கருதி இங்கே குறிப்பிடலாம்.
- கீழடியின் அகழாய்வுகளை சிற்ப ஆராய்ச்சியாளர் கண்ணோட்டத்திலிருந்து உற்றாய்ந்தால் வியப்புறும் செய்திகள் பல விரிந்துகொண்டே போகின்றன.
கீழடியில் அகழ்ந்தெடுத்த பொருள்கள் பழந்தமிழரின் தொன்மைமிகு பண்பாட்டுத் தளத்தைப் பறைசாற்றுகின்ற வேளையில் மற்றுமொரு சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறது. அதாவது, தோண்டியெடுக்கப்பட்ட மண்ணின் கீழ் பரந்து காணப்படுகின்ற பண்டைய கட்டடப் பகுதியின் மிச்சங்கள்தாம் அவை; வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்துகின்றன. கீழடி நாகரிகச் சான்றுகள் வளர்ச்சியடைந்த தமிழருடைய நாகரிகப் பின்னணியில்தான் இலங்கியிருந்தது என்பதற்கு அவர்களின் கட்டுமானத்திறன், கையாண்ட தொழில்நுட்ப நெறிமுறைகள், பயன்படுத்திய கட்டுமானப் பொருள்கள் என அனைத்தும் ஒன்றுக்கொன்று உயரியதாகவும் தரமானதாகவும் இருப்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.
- இன்று ஒரு கட்டடத்தை எழுப்புவதற்கு நாம் பயன்படுத்தும் நவீன கருவிகளோ அல்லது இயந்திரங்களோ இல்லாதவொரு காலத்தில் அழகியதொரு குடியிருப்புப் பகுதியை அதுவும் இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் வலுவுடன் அமைக்கப்பட்டிருப்பது கீழடி மக்களின் தொழில்நுட்பத் தொன்மையை எடுத்துக்காட்டுகிறது.
தொலைநோக்குப் பார்வை
- ஆக, கைக்கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்ததொரு காலத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு நகரமைப்பை உருவாக்கிய நம் முன்னோர்களுடைய நுண்ணிய அறிவுத்திறனைக் கண்டு பாராட்டுவதுடன் பின்பற்றவும் வேண்டும்.
- நம்முடைய வாஸ்துசிற்ப சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்க்கும்போது கீழடி கட்டடக் கலைஞர்கள் கீழ்க்கண்ட முறைகளில்தான் இந்த நகர அமைப்பை வடிவமைத்திருக்கக் கூடும் என்பது திண்ணமாகிறது.
- இவற்றுக்குப் பொருத்தமாக குளியல் தொட்டி, உறைகிணறு, தண்ணீர் வாய்க்கால் போன்ற இதர அமைப்புகளை வடிவமைத்தல்.
- பஞ்சபூதங்களின் பேராற்றலை நன்கறிந்து வைத்துள்ள பழந்தமிழர், அவர்தம் நகரமைப்பை உரிய அளவுகளால் வரையறுத்து சிறந்த ஆற்றல்களை வழங்குகின்ற கட்டமைப்பின் (பதவிந்யாசம்) அடிப்படையில் அவ்விடத்தை வடிவமைத்திருக்கின்றனர் என்பதற்கு தற்போது காணக் கிடைத்துள்ள மிச்சங்களே சிறந்த எடுத்துக்காட்டாகும்.
- இங்கே காணப்படுகின்ற வாய்க்கால், உறைகிணறு போன்றவற்றைப் பார்க்கும்போது மகரிஷி மயனுடைய கீழ்க்கண்ட செய்யுளே நினைவுக்கு வருகிறது "வாய்க்காலை நன்கமைத்து வடிநீர்க்கு வழியமைத்து, சேய்க்காலை மிகப்பெருக்கி தெளிநீரையோடச் செய்து, வாய்க்காலினியலை யெல்லாம் கோட்டுருவாகக் காட்டி...' என்பதாகும்.
நன்றி: தினமணி (17-03-2020)