- மரபுச் சின்னங்கள் பழமைவாய்ந்த பொருள்கள் மட்டுமல்ல; அவை கடந்த காலச் சமூகத்தின் அறிவுச் செயல்பாட்டு வடிவங்களாக எஞ்சி நிற்பவை. ஒரு நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் வலுப்படுத்த உதவும் நம்பத்தகுந்த ஆவணங்கள் அவை.
- உலகளவில் உள்ள மரபுச் சின்னங்களைப் பாதுகாக்கவும் அவற்றை அழிவிலிருந்து மீட்டெடுக்கவும் நினைவுச்சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச மன்றம் [International Council for Monuments and Sites (ICOMOS)] அளித்த முன்மொழிவுத் திட்டத்தின்படி, ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு, 1983இல் உலக மரபு நாளை (World Heritage Day) அறிவித்தது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 18 அன்று உலக மரபு நாள் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
- தமிழ் மண்ணின் மரபுச் சின்னங்கள்: தமிழ்நாட்டில் பல்லவர் காலக் கடற்கரைக் கோயில்கள், சோழர் கால முப்பெரும் கோயில்களான முதலாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை ராஜராஜேச்சரப் பெருவுடையார் கோயில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழீச்சரம் கோயில், இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட தாராசுரம் ராஜராஜேச்சரம் கோயில் ஆகிய இடங்களை உலக மரபுச் சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
- இந்தியத் தொல்லியல் துறையும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாக்கப்பட்ட தொன்மை மரபுச் சின்னங்களாக அறிவித்துள்ளன. அவற்றில் வரலாற்றுக்கு முந்தைய கால நினைவுச்சின்னங்கள், குடைவரைக் கோயில்கள், கற்றளிகள், கோட்டைகள், ஓவியங்கள் ஆகியவையும் வருகின்றன.
- தொன்மைச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெறும் நூறு ஆண்டுகளுக்குமேல் பழமைவாய்ந்த நினைவுக் கட்டிடங்கள், கோயில்கள், நடுகற்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், நாணயங்கள், காகித ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற மரபுச் சின்னங்களும் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன.
அறுபடாத கண்ணி
- தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் கட்டிடக் கலைப் பொறியியலின் உச்சம் என்றே சொல்லலாம். சிற்பக் கலை, ஓவியக் கலை, நடனக் கலை, இசைக் கலை எனத் தமிழ்நாட்டின் அறிவுக் கலை வளர்ச்சியின் கருவூலமாகக் கோயில்கள் விளங்கின. தமிழ்ப் பண்பாட்டின் அடிநாதமாக விளங்குவது நடுகல் மரபு.
- சமூகத்தின் நலனைக் காக்கும் போரில் உயிரிழந்த வீரர்களைப் போற்றும் விதமாக நடுகல் எடுத்துப் போற்றும் மரபு வழக்கில் இருந்தது. நடுகல் கல்வெட்டுகள் சாமானிய மக்களால், சாமானிய வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்டவை. நடுகல் கல்வெட்டுகள் தமிழ் மொழியின் வளர்ச்சியை அறிந்துகொள்ளவும், மக்களின் பேச்சுவழக்கு மொழியை அறிந்துகொள்ளவும் உதவும் பண்பாட்டுச் சின்னங்கள் ஆகும்.
- மரபுச் சின்னங்கள் மக்கள் பண்பாட்டுத் தொடர்ச்சியில் ஓர் அறுபடாத கண்ணியாக விளங்குபவை. ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பான வழக்கில் மாடுபிடி விளையாட்டின் தொன்மையையும், தொடர்ச்சியையும் எடுத்துரைக்கும் வரலாற்றுச் சான்றாகப் பாறை ஓவியங்களும் நடுகற்களும் துணைநின்றன.
- மாடுபிடி விளையாட்டு தொடர்பான பாறை ஓவியங்கள் அணைப்பட்டி, கரிக்கையூர் ஆகிய ஊர்களிலும், மாடுபிடி வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகற்கள் சேலம், மதுரை, கிருஷ்ணகிரியிலும் பதிவாகியுள்ளன.
வரலாற்றுச் சான்றாவணங்கள்
- பெண்களின் தியாகங்களைப் போற்றும் நடுகற்கள் வீரமாத்தி அம்மனாக, சீலைக்காரி அம்மனாக, மாலையம்மனாகச் சாமானிய மக்களின் நம்பிக்கையைப் பெற்றுச் சில இடங்களில் வழிபாட்டில் உள்ளன. கோழிச்சண்டைப் போட்டியில் இறந்த கோழிக்கும், கள்வர்களிடமிருந்து தனது எஜமானரைக் காக்க முயன்று இறந்த நாய்க்கும் நடுகல் எடுத்துப் போற்றிய மரபு நடுகற்கள் வழியாகத் தெரியவருகிறது.
- கோயில் கல்வெட்டுகளில் நாடு, வளநாடு, கோட்டம், மண்டலம் ஆகிய நிர்வாகப் பிரிவுகள் பயின்றுவரக் காணலாம். இவை அனைத்தும் இன்றுவரை நம் அரசு பின்பற்றும் கிராமம், வட்டம், மாவட்டம் போன்ற நிர்வாகப் பிரிவுகளின் முன்னோடியான நிர்வாகப் பெயர்கள். ஏறக்குறைய 1,500 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு முறையாகத் திட்டமிட்ட அரசு நிர்வாகம் செயல்பட்டதை இவை உணர்த்துகின்றன.
- தமிழ்நாட்டு அரசர்கள் சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் அதீத கவனம் செலுத்தினர். குறிப்பாக, நீர்நிலைகளை அமைத்து அதற்குப் பாசன வாய்க்கால்கள் அமைத்து, மடைத்தூம்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, இயல்பாகத் தண்ணீர் போக இயலாத மேடான பகுதிகளுக்கும் நீரைக் கொண்டுசென்று மக்களின் வாழ்க்கை மேம்பட உதவிபுரிந்தனர். தமிழ்நாட்டில் பல்லவர் காலத்திலிருந்து ஏரிகள் வெட்டப்பட்டு பாசன வாய்க்கால்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
- தமிழ்நாட்டில் ஏராளமான தனித்த பண்பாட்டுச் சிற்பங்கள் கொற்றவை, ஐயனார், தவ்வை போன்ற கடவுளர் சிற்பங்கள் வயல்வெளிகளிலும் நீர்நிலை ஓரங்களிலும் சாமானிய மக்களின் கடவுளராக இருக்கின்றனர். பெருவழிப்பாதைகளில் காணக்கிடைக்கும் வணிகக் கல்வெட்டுகள் பண்டைய நாளில் உள்ளூர்ச் சமூகம் வணிகச் சமூகத்துடன் கொண்டிருந்த தொடர்பை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன.
- நாணயங்களும் செப்பேடுகளும் வரலாற்றில் விடுபட்ட பகுதியை நிரப்பும் சான்றாவணங்கள் ஆகின்றன. ஓலைச்சுவடிகள் தமிழின் தொன்மையான இலக்கிய மரபின் அறிவுச் சொத்துக்களைத் தாங்கி நிற்பவை. இன்று அச்சு வடிவில் கிடைக்கும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியப் பனுவல்கள் கடந்த நூற்றாண்டில்தான் ஓலைச்சுவடிகளில் இருந்து அச்சு வடிவம் பெற்றன.
மரபுச் சின்னங்களின் இன்றைய நிலை
- அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் அறிவித்த இடங்களையும் தாண்டி ஆயிரக்கணக்கான அறிவுச் சொத்துக்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உள்ளூர்ச் சமூகங்களால்கூடக் கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.
- பேரரசர்களாகக் கொண்டாடப்பட்ட மன்னர்களின் நிவந்தங்களையும் அவர்களது உருவச் சிலைகளையும் தாங்கி நிற்கும் பல கோயில்கள் சிதைந்தும் புதர் மண்டியும் கழிப்பிடத் தேவைக்குப் பயன்படுத்தும் இடங்களாகவும் இருக்கின்றன.
- நடுகற்களின் நிலையோ இன்னும் கவலைக்குரியது. ஏரிகளிலும், காடுகளிலும், குப்பை கொட்டும் இடங்களிலும், உடைந்து சிதைந்த நிலையில் கிடக்கின்றன. பல இடங்களில், துவைக்கும் கற்களாக அவை பயன்படுத்தப்படுகின்றன. உடைந்த நிலையில் இருக்கும் சிலைகள் ஊருக்கு ஆகாது என்று நம்பும் மூட நம்பிக்கை மற்றொருபுறம்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவான 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் வட்டெழுத்துப் பொறிப்பு கொண்ட நடுகல்லைத் தேடிச் சென்றபோது ஓர் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது: அது பின்னமான சிலை என்று ஒருவர் கூறியதால், கொடுமுடி ஆற்றில் போட்டுவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.
- 1919இல் திருச்சிக்கு அருகிலுள்ள அன்பில் என்னும் ஊரில் பதினோரு இதழ்கள் கொண்ட சோழர்காலச் செப்பேடு கிடைத்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் செப்பேடு பதிவு செய்யப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழலில் இன்று அது இருக்கும் இடம் தெரியவில்லை.
பாதுகாப்பு வழிமுறைகள்
- பள்ளி, கல்லூரிகளில் உள்ளூர்த் தொல்லியல் மற்றும் வரலாறு தொடர்பான பாடங்களை இன்னும் செம்மைப்படுத்தி வழங்கலாம். மரபுச் சின்னங்களை ஒளிப்படங்களாக ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். உள்ளூர் மக்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு மரபுச் சின்னங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும். இப்பணியில் ஆங்காங்கே உள்ள மரபுசார் தன்னார்வக் குழுக்களே ஈடுபடலாம். நுண்வேலைப்பாடுகள் கொண்ட கோயில்கள், கல்வெட்டுகளின்மீது திருப்பணிகள் என்னும் பெயரில் சிமென்ட் பூசுவது, சாயங்கள் பூசுவதைத் தவிர்க்க வேண்டும்.
- ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள் நவீனகால வரலாற்றில் முக்கிய ஆவணங்கள். அவற்றை அரசிடம் தெரிவித்து, தகுதியான அமைப்புக்களிடம் கொடுத்து முதலில் ஒளிப்படங்களாக ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். மரபுச் சின்னங்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதை அறிந்தால், உடனே உள்ளூர் நிர்வாக அலுவலர் வழியாக அரசு அருங்காட்சியகங்கள் துறைக்கும், தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
- கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், ஓலைச்சுவடிகளை முப்பரிமாண முறையில் ஆவணப்படுத்தும் தொழில்நுட்பம் இன்றைக்கு இருக்கிறது. அதைப் பயன்படுத்தி துல்லியத் தன்மை மாறாமல் மீட்டுருவாக்கம் செய்ய முடியும். தமிழ்நாட்டில் மரபுச் சின்னங்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவை யாவும் மக்கள் வாழ்விடப் பகுதியில் இருப்பதால், அவற்றைப் பாதுகாக்க மக்கள் சமூகமும் பெரும் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- மரபுச் சின்னங்கள் அந்தந்தக் காலத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் விளக்கிச் சொல்லும் கால இயந்திரங்கள். அவற்றை இழந்துவிட்டோமானால், அக்காலத்தின் மக்கள் வரலாற்றையும் அவர்களது அறிவுசார் செயல்பாடுகளை அறிவதையும் நாம் இழக்கிறோம் என்பதை உணர வேண்டும்.
- ஏப்ரல் 18: உலக மரபு நாள்
நன்றி: தி இந்து (18 – 04 – 2023)