TNPSC Thervupettagam

தமிழின் முதல் புதின ஆசிரியர் வள்ளலாரா

July 16 , 2023 546 days 433 0
  • தமிழின் உரைநடை இலக்கியம் பொ.ஆ. (கி.பி.) எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தொடங்கியிருந்தபோதும், உரைநடை சார்ந்த படைப்பிலக்கியமோ கட்டுரை இலக்கியமோ படைக்கப்பட்டதில்லை. இதனை மிக நேர்த்தியாகக் கையாண்டு புதின இலக்கியத்தை முதன்முதலில் படைத்தவர் வள்ளலார் எனலாம். இதனைப் பலரும் கவனிக்கத் தவறியதன் விளைவே 1879இல் மாயூரம் வேதநாயகம் வெளியிட்ட ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தான் தமிழின் முதல் புதினம் ஆனதற்குக் காரணம். ஆனால், வள்ளலார் எழுதிய ‘மனுமுறை கண்ட வாசகம்’தான் தமிழின் முதல் புதின முயற்சி. எடுத்துக்கொண்ட கதையையும் அதில் வரும் கதாபாத்திரச் சித்திரிப்பையும் வைத்து இதை உணர முடியும்.
  • இறை வணக்கப் பாடலை எழுதிவிட்டு, கதையை இப்படித் தொடங்கியுள்ளார்: ‘கடல் சூழ்ந்த உலகத்திலுள்ள எல்லாத் தேசங்களிலுஞ் சிறப்புடையதாய் காவிரி என்னுந் தெய்வத் தன்மை யுள்ள நதியினால் எந்தக் காலத்திலுங் குறைவு படாத நீர்வளப்ப முடையதாய் வாழைச் சோலை பலாச் சோலை மாஞ்சோலை தென்னஞ்சோலை கமுகஞ் சோலை கருப்ப சோலை முதலாகிய பயனுள்ள சோலைகள் அணியணியாக ஒன்றையொன்று சூழ்ந்தோங்க அசோகு குருக்கத்தி சண்பகம் பாதிரி முதலான விருட்சங்களால் நெருங்கி வண்டுகள் பாடுகின்ற மலர்ச் சோலைகளும் தாமரைத் தடாகங்களும் நீர் நிறைந்து அல்லி நீலம் முதலான புட்பங்களும் மலர்கின்ற ஓடைகளும் பொய்கைகளும் ஏரிகளும் குளங் களும் பலவிடங்களிலு முள்ளதாய், செந்நெல் முதலாகிய பயிர்கள் மாறாது முப்போகமும் விளைகின்ற குறைவற்ற விளைவையுடைய வயல்கள் நெருங்கி யுள்ளதாய் சிதம்பரம் பஞ்சநதம் மத்தியார்ச்சுனம் சம்புகேச்சுரம் முதலான திவ்விய கேத்திரங்கள் இடையி்லுள்ளதாய்... (பக். 79)’.
  • அறுபது வயதுவரை குழந்தைப்பேறு இல்லாமல் வாழ்ந்த மனுநீதிச் சோழன் பெரும் தவத்துக்குப் பிறகு பிறக்கும் தமது மகனைப் பசுவின் கன்றுக்காய் கொல்கிறான் என்றால், எத்தகைய உயிர் இரக்கம் கொண்டவனாக இருந்திருப்பான். பசுவின் கன்று தேர்க்காலில் சிக்கி இறந்த செய்தியறிந்து துடிதுடித்துப் போகிறான். சோழனின் புலம்பலும் அதனைத் தொடர்ந்து நடக்கும் கதைப்போக்கும் பாத்திரங்கள் பேசும் உரையாடலும் வாசிப்போரை ஒன்றவைத்துவிடுகின்றன. தேர்க்காலிலே கன்று அகப்பட்டதை நாவலாசிரியரின் மொழியில் காண்போம்: இந்தப் பிரகாரம் அவ்வவ் வீதியிலுள்ள இஸ்திரீ ஜனங்களும் புருஷ ஜனங்களும் பார்த்துப் பார்த்துப் பலவிதமாகப் புகழ்ந்து நெருங்க வீதி விடங்கன் தேரிலேறிச் செல்லும்போது, ஒரு வீதியில் தேரிலே கட்டிய குதிரைகள் தேர்ப்பாகன் வசத்தைக் கடந்து தெய்வத்தின் வசமாகி, அதிவேகமாக அத்தேரை இழுத்துக்கொண்டு சென்றன (பக்.97)’.
  • மந்திரியை அழைத்துத் தன் மகனைக் கன்று இறந்த இடத்திலேயே படுக்கவைத்துத் தேரை ஏற்றிக் கொல்லுமாறு தீர்ப்பளிக்கின்றான். இதனைக் கூறும் பகுதிப் பின்வருமாறு அமைகிறது: இந்தப் பசுவின் கன்றைக் கொன்ற பழிக்கு ஈடாக என் புத்திரனைக் கொலை செய்வதே நிச்சயமாகிய தீர்ப்பு என்று சொல்லிவிட்டு, பின்பு மந்திரிகளுக்குள் கலாவல்லபன் என்கிற மந்திரியைப் பார்த்து, மந்திரி என் புத்திரனையழைத்துப்போய் அந்த கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் கிடத்தி, நீ தேரிலேறிக் கொண்டு அவனுடம்பின் மேல் தேர்ச் சக்கரம் ஏறும்படி செய்து கொலை செய்து வருவாய்’’ என்று கட்டளையிட்டார்.
  • மனுநீதிச் சோழனின் கதையைச் சிறுவயதில் கேட்டபொழுதுகூட இந்தக் கலாவல்லபன் என்ற கதாபாத்திரத்தைப் பற்றிக் கேள்வி பட்டதில்லை. இந்தக் கதாபாத்திரத்தின் வார்ப்பின் மூலம் அச்சூழலின் சோகத்தை மேலும் அதிகரித்துவிடுகிறார் வள்ளலார். பின்பு இந்த எதிர்பாராத சம்பவத்துக்காகவும் பெரும் துன்பத்துடன் வருந்தும் மனுநீதிச் சோழன் இனி இப்படியொரு சம்பவம் நடந்துவிடக் கூடாது, இதற்கு நான் பொறுப்பாகிவிட்டேனே என்று பற்பலவாறு அவலச்சுவை சொட்டச் சொட்டப் புலம்பி அழுகிறார். அந்தப் பகுதியை மிகத் துயரம் மிக்கதாகவே பதிவுசெய்திருக்கிறார்.
  • எல்லா உயிரிலும் இறைவன் குடியிருக்கிறான். இவ்வுண்மையை நிலைநாட்ட இப்புதினத்தைப் தேர்வுசெய்து கொண்டு இந்தக் கதையைப் படைத்திருக்கிறார். இது எழுதப்பட்ட பொ.ஆ. 1854இல் தமிழில் புதின இலக்கியம் தோன்ற வில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வள்ளலார், அக்காலச் சூழலில் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி வாழ்ந்தவர்.
  • அத்துடன் அவர்தம் படைப்புகள் அருட்பாவா? மருட்பாவா? என்ற விவாதம் ஒருபுறம் மிகக் காத்திரமாக நடைபெற்றதையும் காண்கிறோம். இப்படிப்பட்ட நிலையிலிருந்து தமிழ்ச் சூழலில் உரைநடைப் பணியை அழுத்தமாக உருவாக்கி, தம் பங்குக்குச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
  • தமிழர்கள் எவ்வுயிரையும் தம்முயிர் போன்று பாவித்து வாழ்ந்தவர்கள். இந்த மரபின் பின்னணியில் வந்த வள்ளலார் எல்லா உயிர்களிலும் இறைவனின் தரிசனத்தைக் கண்ட வள்ளலார், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார், பெரிய புராணத்திலும் குறிக்கப்பட்ட இக்கதையைத் தனியாக எடுத்து எழுதியதன் வாயிலாகப் பல்வேறு செய்திகளை உணர்த்தி நிற்பதோடு, தமிழின் முதல் உரைநடைப் பாணிக் கதையையும் எழுதியிருக்கிறார்.

நன்றி: தி இந்து (16 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories