TNPSC Thervupettagam

தமிழுக்கு வங்கம் சேர்த்த வளம்

January 15 , 2024 226 days 261 0
  • ‘இலக்கிய நோக்கில் பார்க்கும்போது, மொழிபெயர்ப்புகள் இன்னொரு பக்கம் மிகவும் முக்கியமானவை. மொழிபெயர்ப்பு, பெறுமொழியின் வளர்ச்சிக்கு வளம் சேர்க்கிறது. அம்மொழியின் கருத்தியல் வளர்ச்சியில் அழுத்தமான தடயங்களைப் பதிக்கிறது. பரந்துபட்ட நிலையில், உலக மொழிகளோடு தொடர்புகொள்ள உதவுகிறது’– எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன் ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
  • ஓராயிரம் ஆண்டு வரலாற்றை மட்டுமே கொண்ட வங்காள மொழி, 19ஆம் நூற்றாண்டில் உருவான வங்காள மறுமலர்ச்சியின்போது, அதுவரையில் கண்டிராத புத்துணர்வைப் பெற்றது. கவிதையில் மைக்கேல் மதுசூதன் தத், உரைநடையில் ஈஸ்வர சந்திர வித்யாசாகர், புனைவிலக்கியத்தில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி, நாடகத்தில் தீனபந்து மித்ரா போன்றோர் வங்காள இலக்கியத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டனர்.
  • 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலத்தில் ரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திரர், மாணிக் பந்தோபாத்யாய போன்ற பலரும் அம்மொழியின் புனைவு இலக்கியத்தினைப் புதியதொரு உச்சத்துக்குக் கொண்டுசென்றனர்.

பாரதியின் பங்களிப்பு

  • மேலே கூறப்பட்ட மேற்கோளை வைத்துப் பார்க்கையில், வங்காள மொழியிலிருந்து பெறப்பட்ட மொழிபெயர்ப்புகளால் தமிழ் மொழி மேலும் வளம்பெற்றதை நாம் உணர முடியும். குறிப்பாக, மகாகவி பாரதியாரின் முனைப்பு இதில் முன்னோடியாக இருந்தது.
  • வங்காள மொழியுடன் பரிச்சயமானவர் என்ற வகையில், அவர் ஏற்கெனவே பங்கிம் சந்திரரின் ‘வந்தே மாதரம்’ பாடலைத் தமிழில் மொழி பெயர்த்திருந்தபோதிலும், அதன் சந்த நயத்தைத் தமிழிலும் கொண்டுவர வேண்டும் என்கிற உந்துதலோடு, அவரே அதை மீண்டும் ஒருமுறை மொழிபெயர்த்தார்.
  • அதைப் போன்றே ரவீந்திரநாத் தாகூரின் ‘இளம்பிறை’யின் (The Crescent Moon) ஒரு பகுதி, எட்டு சிறுகதைகள், ஐந்து கட்டுரைகள் (விரிவான விளக்கங்களுடன்) ஆகியவற்றையும் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
  • ஒரு பத்திரிகையாளராக, தாகூரைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவரும் பாரதிதான். 1921ஆம் ஆண்டில் அவர் மறைவதற்குச் சில மாதங்களுக்கு முன்பாகவும்கூட, தாகூரின் ஐரோப்பியப் பயணத்தின் தாக்கத்தைத் தமிழ் வாசகர்களுக்கு எடுத்துக்கூறும் வகையில், ‘ரவீந்திரர் திக்விஜயம்’ என்கிற கட்டுரையை அவர் எழுதியுள்ளார்.

மொழிபெயர்ப்பில் விடுபடல்கள்

  • 1930-40கள் தொடங்கி வெளியான தமிழ்த் திரைப்படங்கள் தாகூர், சரத் சந்திரர் உள்ளிட்ட பல வங்காள நாவலாசிரியர்களின் எழுத்துகளைப் பயன்படுத்தத் தொடங்கின. இலக்கிய உலகைப் பொறுத்தவரை, தாகூரின் சாந்திநிகேதனில் பயின்ற த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி ஆகியோரின் முயற்சியில் தாகூர், பங்கிம் சந்திரர் உள்ளிட்ட வங்காள இலக்கிய முன்னோடிகளின் தனித்துவமான எழுத்துகள் தமிழுக்கு நேரடியாக வந்துசேர்ந்தன.
  • இந்த எழுத்துகள் அனைத்துமே அன்று தமிழ் இலக்கியப் பரப்பில் தீவிரமாகச் சேவை புரிந்துவந்த ‘மஞ்சரி’, ‘கலைமகள்’ போன்ற இலக்கிய இதழ்களின் மூலம் தமிழ் வாசகர்களைச் சென்றடைந்தன. 1950களின் நடுப்பகுதியில் இந்தியாவின் பல்வேறு மொழி இலக்கியங்களை நாடு முழுவதிலும் கொண்டுசெல்லும் பணியைத் தன் தலையாய பணியாக மேற்கொண்டு செயல்படத் தொடங்கிய சாகித்ய அகாடமி, தன்னளவில் திறம்படச் செயல்பட்டு வங்காள மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தது.
  • எனினும் ஆங்கிலம், இந்தி மொழிகளின் வழியாக வந்த இந்த மொழிபெயர்ப்புகள், மூல மொழியின் செறிவை முழுமையாகக் கொண்டுவரத் தவறின என்றே கூறலாம். 1950களிலும் 1960களிலும் செயல்பட்ட பேராசிரியர்கள் அ.ச.ஞானசம்பந்தன், ஆ.சீனிவாசராகவன் போன்றோரும் வங்காள எழுத்துகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்தனர்.

நேரடி மொழிபெயர்ப்புகள்

  • வங்காள மொழியிலிருந்து தமிழ், தெலுங்கிலிருந்து தமிழ், மராத்தியிலிருந்து தமிழ் என மொழிபெயர்ப்புகள் நேரடியாக வரும்போது அது பெறுமொழிக்குப் புதிய பண்பாட்டை உயிரோட்டத்தோடு அறிமுகப்படுத்துவதாக அமையும். இதன் மறுபக்கமாக, தமிழிலிருந்து வங்காள மொழிக்கு என்பதாகச் செயல்படும்போது, தமிழின் ஆகச் சிறந்த இலக்கியங்களை இந்தியாவின் ஏனைய மொழிகளுக்குக் கொண்டு செல்ல வழியேற்படும்.
  • இவ்வகையில், முன்னத்தி ஏராகச் செயல்பட்டவர் (கல்கத்தா) சு.கிருஷ்ணமூர்த்தி ஆவார். வங்காள மொழியின் ஆகச் சிறந்த எழுத்துகளைத் தமிழுக்குக் கொண்டுவந்த அதேநேரத்தில், திருக்குறள் உள்படப் பழந்தமிழ் இலக்கியங்களையும், 1980-90களில் வெளிவந்த நவீன இலக்கியங்களையும் வங்காள இலக்கியத்துக்கு அறிமுகம் செய்த தனிநபர் சேனையாக அவர் இருந்தார்.
  • அவரைப் பின்பற்றி புவனா நடராஜன், கல்கத்தா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஆர்.பானுமதி (இவர் தமிழிலிருந்து வங்காள மொழிக்குச் சில நூல்களைக் கொண்டு சென்றிருக்கிறார்) ஆகியோரும் நவீன வங்காள இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினர்.
  • புத்தாயிரத்தில் வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு நேரடியாகக் கொண்டுவரும் திறன்மிக்கவர்களாக இக்கட்டுரையாசிரியர் (சத்யஜித் ரேயின் ஃபெலுடா கதைகள், ஜோதிபாசுவின் சுயசரிதை), கவிஞர்கள் சீர்ஷா மண்டல் (இவர் சாந்திநிகேதனில் தமிழில் சான்றிதழ் படிப்பையும், தமிழ்க் கல்வெட்டு ஆய்வில் பட்டயப் படிப்பையும் முடித்துள்ளார்), ஞா.சத்தீஸ்வரன் (இவர் சாந்திநிகேதனில் தமிழ்த் துறையில் தற்போது முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டுள்ளார்) உள்ளிட்டோர் உருவாகியுள்ளனர்.
  • சீர்ஷா மண்டல், ஞா.சத்தீஸ்வரன் இருவரும் இணைந்து தமிழிலிருந்து கவிதைகளையும் குறுநாவல்களையும் (சுகிர்தராணி கவிதைகள், இரா.நடராசனின் ‘ஆயிஷா’ போன்றவை) வங்காள மொழிக்குக் கொண்டுசென்றுள்ளனர். சத்தீஸ்வரனின் சமீபத்திய தமிழ் வரவாக ஹரிலால் நாத் எழுதிய ‘மரிச்ஜாப்பி’ வெளிவந்துள்ளது.
  • இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், பேராசிரியர்கள் ச.சிவகாமி, இரா.மோகனா ஆகியோரின் மொழிபெயர்ப்பு நூல்தொகை வரிசையின்படி 72 மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் வந்துள்ள நிலையில், ஆங்கில, மலையாள மொழிகளுக்கு அடுத்து வங்காள மொழியிலிருந்துதான் தமிழுக்கு அதிக நூல்கள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக, ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துகளே அதிகம். அவரது ‘கீதாஞ்சலி’ மட்டுமே ஐந்துக்கும் மேற்பட்டோரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே ஆங்கில வழியில் வந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்ய வேண்டியவை

  • அந்தந்த மொழிகளிலிருந்து நேரடி மொழிபெயர்ப்பை ஊக்குவிக்கும் பணிகள் தொடங்கப்படுவது தமிழ் எழுத்துலகுக்கு மேலும் பலன் தரும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து, சாகித்ய அகாடமியின் உதவியோடும், மைசூர்-புவனேஸ்வர் நகரங்களில் செயல்படும் இந்திய மொழிகள் நிறுவனம் ஆகியவற்றின் உதவியோடும், சாகித்திய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் பரஸ்பர மொழிபெயர்ப்புக்கான பயிற்சிகளை வழங்கும் வகையில் ஒரு பாடத்திட்டத்தினை உருவாக்கி, புதிய மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்க முடியும்.
  • தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகம் மேற்கொண்டுவரும் (தமிழிலிருந்து) ஆங்கில மொழியாக்க முயற்சிகளைப் போலவே, இத்தகைய முயற்சியும், அதன் விளைவாக இதர மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து இதர மொழிகளுக்கும் மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்புகளும் இந்த வரிசையில் இடம்பெறும் வகையில் நீட்டிக்கப்படுவதும் தமிழ் மொழிக்குப் புதிய திறப்புகளை உருவாக்கி, அதை மேலும் வளப்படுத்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories