- மனப்பாடக் கல்விமுறையின் குறைபாடுகள் பற்றி இன்று விரிவாகப் பேசுகிறோம். கூகுள் தேடுதள உதவியால் இன்று எந்தத் தகவலையும் உடனே பெறலாம்; சரி பார்த்துக் கொள்ளவும் முடிகிறது. அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் உள்ளிட்ட நோக்கு நூல்களும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கின்றன. இந்நிலையில் மனப்பாடம் எதற்கு என்னும் வினா இயல்பாக எழுகிறது. மனனம் செய்வதே தேவையில்லை என்றும் நினைக்கிறோம்.
- அதேசமயம், பள்ளி அளவிலான தேர்வுகளில் பாடத்தில் உள்ளதை அப்படியே மனனம் செய்து எழுதுபவருக்கே அதிக மதிப்பெண் கிடைக்கும் என்னும் நிலையும் உள்ளது. கருத்து ரீதியாக எதிர்ப்பும் நடைமுறையில் ஏற்பும் பெற்று மனனம் பற்றிய முரண் நிலவி வருகிறது. தமிழ் இலக்கியக் கல்வி கற்றலிலும் கற்பித்தலிலும் மனனம் பற்றி எனக்கெனச் சில கொள்கைகள் உண்டு.
மனனமும் மரபுக் கல்வியும்
- மரபான தமிழ்க் கல்விமுறையில் மனனத்திற்கு முதன்மையான இடம் இருந்தது. நூல் முழுவதையும் மட்டுமல்லாமல் உரையையும் மனனம் செய்து ஒப்பிப்போர் இருந்துள்ளனர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு எவ்வளவு செய்யுள்கள் மனனமாகத் தெரியும் என்று அளவிடவே இயலாது. பல நூல்களைப் பார்க்காமலே பாடம் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார்.
- உ.வே.சாமிநாதையரும் மனனத்தில் சிறந்தவர். “…சூடாமணி நிகண்டின் பன்னிரண்டு தொகுதியும் மணவாள நாராயண சதக முதலிய சில சதகங்களும் இரத்தின சபாபதி மாலை முதலிய சில மாலைகளும் நன்னூல் மூலமும் மனனம் செய்து தந்தையாரிடம் ஒப்பித்து வந்தேன்” (ம.மீ.ச., பாகம் 2, ப.4) என்று சொல்கிறார். நிகண்டு பன்னிரண்டு தொகுதியும் மனனம் என்பது எளிதல்ல. இப்படி இன்னும் எத்தனையோ நூல்களை மனனம் செய்து கற்றவர் அவர்.
- ஓலைச்சுவடிக் காலத்துக் கற்றலில் மனனத்திற்கு முதன்மை இடமிருந்தது. சுவடிகள் கிடைப்பது அரிது; படியெடுப்பது சிரமம்; சுவடிகளைப் பாதுகாத்தல் கடினம். எனவே, மனனம் போற்றப்பட்டது. உ.வே.சாமிநாதையர் ஓலைச்சுவடி மூலம் இளமையில் கற்றவர் எனினும் அச்சு நூல்களைக் கையாளும் நிலையும் அவர் காலத்திலேயே ஏற்பட்டது. எனினும் மனனத்திற்கான இடம் அப்படியேதான் இருந்தது.
- கல்லூரிகளில் அவர் பணியாற்றியபோது தம் மாணவர்களுக்கு மனனத்தை வலியுறுத்தினாரா என்பது தெரியவில்லை. அவர் மாணவர்கள் தமிழிலக்கியத்தை முதன்மைப் பாடமாகக் கற்றவர்கள் அல்ல. அப்போதைய முறைசார் கல்வியில் மனனம் எத்தகைய இடம்பெற்றிருந்தது என்பதை அறிய இயலவில்லை.
மவுசு குறையாத ஆற்றல்
- உயர்கல்வியில் தமிழ் இலக்கியம் இடம்பெற்ற பிறகு மனனம் அவ்வளவாக வலியுறுத்தப் படவில்லை எனினும் அதற்கு முக்கிய இடமிருந்தது என்பதில் ஐயமில்லை. திருவையாறு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய தமிழறிஞர் தி.வே.கோபாலையர் பெருநூல்களை எல்லாம் மனனம் செய்திருந்தவர் என்பதை அவர் மாணவர்கள் போற்றிக் கூறுகின்றனர். அவரிடம் கற்ற நண்பர் சு.துரை, “கம்பராமாயணம் நடத்த ஒருபோதும் அவர் புத்தகத்தைத் தொட்டதேயில்லை. வகுப்புக்கு வந்து முதல்நாள் முடித்த பாடல் எது என்று கேட்டுக்கொண்டு அடுத்த பாடலிலிருந்து நடத்த ஆரம்பித்துவிடுவார். நூலில் வேண்டுமானால் தவறு இருக்கலாம். அவர் சொல்வதில் தவறே இருக்காது” என்று வியந்து சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
- கோவை பூசாகோ கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய என் ஆசிரியர் க.வெள்ளிமலை வில்லிபாரதப் பாடல்களையே மனனமாகச் சொல்லும் திறன் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த சி.பாலசுப்பிரமணியன் குறுந்தொகைப் பாடல்களையும் முழுவதையும் மனனமாகக் கொண்டிருந்தவர். என் வயதொத்தவர்கள் பலரும் மனனம் செய்வதில் வல்லவர்கள். திருச்சி, தந்தை பெரியார் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக உள்ள இரா.வெங்கடேசன், பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் மனனமாகச் சொல்லக்கூடியவர். சென்னை, மாநிலக் கல்லூரி முதல்வராகத் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் இரா.இராமன் பழந்தமிழ் இலக்கியம் மட்டுமல்லாமல், நவீன கவிதைகளையும் மனனமாகச் சொல்வதில் வல்லவர்.
- இப்போதைய தலைமுறையிலும் சிலரை அப்படிக் காண்கிறேன். தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியராக உள்ள என் மாணவர் வீ.ப.ஜெயசீலன் 1330 குறள்களையும் மனனமாகச் சொல்பவர். கம்பராமாயணம் உள்ளிட்ட பல இலக்கியங்களிலிருந்து ஏராளமான செய்யுள்கள் அவருக்கு மனனம். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் என் மாணவர் அ.ஜெயக்குமார் குறுந்தொகையின் நானூறு பாடல்களையும் மனனம் செய்துள்ளார். பாடல் எண்ணைச் சொன்னால் போதும், பாடியவர், திணை, துறை உள்ளிட்ட அனைத்தையும் உடனே சொல்லும் அளவு அவதான ஆற்றல் கொண்டுள்ளார்.
- நடிகர் சிவக்குமாரின் மனனத் திறன் அனைவரும் அறிந்தது. குறிஞ்சிப் பாட்டில் வரிசைப்படுத்தியுள்ள 99 மலர்களையும் அவர் அடி பிறழாமல் மேடைகளில் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அவர் மகன் நடிகர் சூர்யாவும் குறிஞ்சிப் பாட்டு அடிகளை அப்படியே சொல்லிக் கைத்தட்டல் வாங்குகிறார். ஆக, மனன ஆற்றலுக்கு இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை.
திருத்தமாக வாசிக்க வேண்டும்
- பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் மனப்பாடப் பகுதி மட்டுமல்லாமல், செய்யுள் பகுதி முழுவதையும் மனனம் செய்துவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன். அப்படிச் செய்யும்படி யாரும் சொன்னதில்லை. செய்யுளோசை எனக்குப் பிடித்திருந்த காரணத்தால் நானாகவே மனனம் செய்தேன். என் தமிழாசிரியர்கள் அதை ஊக்குவித்தனர். நண்பர்கள் பாராட்டினர். எனினும் பத்தாம் வகுப்புக்குப் பிறகு நவீன கவிதைப் பக்கம் திரும்பியதால் எல்லாவற்றையும் மனனம் செய்யும் முறையைக் கைவிட்டேன்.
- உயர்கல்வியில் தமிழிலக்கியம் கற்றபோது எதையும் மனனம் செய்வது நிர்ப்பந்தமாக இல்லை. அவரவர் விருப்பம் என்னும் நிலை. தேர்வில் பாடல்களையும் நூற்பாக்களையும் எழுதினால் கூடுதல் மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது என்று மட்டும் ஆசிரியர்கள் சொல்வதுண்டு.
- அப்போது சிறுகதை, நாவல் வாசிப்பில் என் கவனம் முழுமையாகச் சென்றுவிட்டது. பழந்தமிழ்ச் செய்யுள்களில் எனக்குப் பிடித்தமானவற்றை மட்டும் மனனம் செய்வதுண்டு. இலக்கிய வரலாறுகளில் மேற்கோள் காட்டும் பாடல்கள், நய நூல்கள் எடுத்தியம்பும் பாடல்கள், ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது வியந்து சொல்லும் பாடல்கள், மேடைப் பேச்சுக்களில் அடிக்கடி கேட்கும் பாடல்கள் ஆகியவற்றைத் தேர்ந்து மனனம் செய்தேன். பாடல்களைத் திருத்தமாக வாசித்து மனனம் செய்ய வேண்டும் என்னும் உணர்வை எனக்கு இரண்டு அனுபவங்கள் உணர்த்தின.
இரண்டு அனுபவங்கள்
- முதலாவது, உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூல் வாசிப்பனுபவம். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை முதன்முதலில் சந்திக்கும்போது ஒருபாடல் சொல்லும்படி அவர் கேட்டார். நைடதக் காப்புச் செய்யுளை உ.வே.சா. சொன்னார். ‘தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதற் சடையிற் சூடும்’ என்று முதலடியைச் சொன்னதும் மகாவித்துவான் இடைமறித்தார். ‘தனிமுதல் சடையிற் சூடும்’ என்று திருத்தினார். ‘தனிமுதற் சடையிற் சூடும்’ என்பதற்கும் ‘தனிமுதல் சடையில் சூடும்’ என்பதற்கும் பொருள் வேறுபாடு உள்ளது. ‘தனிமுதல்’ என்பது ‘சிவபெருமான்.’ தனி – ஒப்பற்ற; முதல் – உலகத்திற்கு முதலானவன்; தனிமுதல் – சிவபெருமான். ‘கடுக்கை மாலைத் தனிமுதல் சடையிற் சூடும்’ என்றால் ‘கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான்’ என நிறுத்தம் பெற்று அவர் தம் ‘சடையில் சூடும்’ என்று பொருள் தொடர்ச்சி வரும். ‘தனிமுதற் சடையில் சூடும்’ என்றால் ‘தனித்த முதற்சடையில் சூடும்’ என்றாகும். அதாவது ‘முதல்’ என்பது ‘சடை’யோடு நேரடியாக இணைந்துவிடும். மொழியில் ஓரெழுத்து எத்தனை முக்கியம் என்பதை எனக்கு உணர்த்திய சம்பவம் அது.
- இரண்டாவது, எனக்கே நேர்ந்த அனுபவம். முதுகலை முடித்த நிலையில் பல்கலைக்கழக ஆய்வு உதவித்தொகை ஒன்றிற்கான நேர்காணலுக்குக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். நேர்காணல் செய்த பேராசிரியர் கம்பராமாயண வல்லுநர். “கம்பராமாணத்திலிருந்து ஏதாவது ஒரு பாடல் சொல்லுங்கள்” என்றார் அவர். குகப்படலத்திலிருந்து ‘கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்’ என்னும் பாடலைச் சொன்னேன். குகனின் தோற்றத்தைக் காட்ட வல்லின எழுத்துக்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கம்பர் எழுதிய பாடல். சொல்வதற்கும் கேட்பதற்கும் தெளிவுடைய பாடல். ஆகவே, அதைத் தேர்ந்தேன். அதன் மூன்றாமடி ‘வெட்டிய மொழியினன் விழிக்கண் தீயினன்’ என்பது. ‘விழிகண் தீயினன்’ என்று சொல்லிவிட்டேன். அப்படித்தான் மனனம் செய்திருந்தேன். ‘விழிக்கண் தீயினன்’ என்று அப்பேராசிரியர் திருத்தினார்.
- ‘விழிகண்’ வினைத்தொகையாகப் பொருள்படும். ‘விழிக்கண் தீயினன்’ என்பது ‘விழியிடத்தே தீயைக் கொண்டவன்’ என்றாகும். அதாவது ‘கண்’ உறுப்பைக் குறிப்பதல்ல; ஏழாம் வேற்றுமையைக் குறிக்கும் உருபு. பின்னர் பல பதிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது ‘விழிக்கண்’ என்றே இருப்பதைக் கண்டேன். ‘விழிக்கும் தீயினன்’ என்று சிலர் பாடம் கொண்டிருந்தனர். ஒற்றை விட்டுவிட்டு எப்படிப் பாடலைப் படித்தேன், அச்சுப்பிழை கொண்ட நூலிலிருந்து இப்பாடலை எடுத்தேனா, எழுதும்போது தவறு செய்தேனா என்றெல்லாம் எனக்குக் குழப்பம். அப்பாடலைச் சொன்ன விதத்தை அப்பேராசிரியர் பாராட்டினார் எனினும் எனக்கு மனம் ஆறவில்லை. அதுமுதல் ஒருபாடலை மனனம் செய்தால் எழுத்தெண்ணிப் படிக்கும் கவனத்தைக் கொண்டேன்.
உலகியல் மதிப்பு
- செய்யுளை எந்திரத்தனமாக மனனம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. கவிதையான செய்யுள்களைத் தேர்வுசெய்வதற்கு முதலில் நுகரும் மனம் வேண்டும். அதன் பிறகு ஓசை, சொல்லாட்சி, நயம் ஆகியவற்றை உணர்ந்து வாசிக்க வேண்டும். ஓரளவு யாப்பிலக்கண அறிவு இருப்பின் எதுகை, மோனை ஆகியவற்றைப் புரிந்து மனனம் செய்வது எளிது; ஏதேனும் சொல்லோ அடியோ மறந்துபோனால் நினைவுக்குக் கொண்டுவருவதும் சுலபம். உரைநடைக்கும் செய்யுளுக்கும் உள்ள வேறுபாடு சொற்கட்டுத்தான். செய்யுளில் சொற்கட்டுக்கு எல்லையுண்டு; அதற்குப் பெயர் ‘அடி.’ உரைநடையில் ‘வரி.’ அடிக்கு வரையறை உண்டு; வரிக்கு இல்லை.
- அடியில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை எனப் பொதிந்திருக்கும் இலக்கணக் கட்டுப்பாட்டை அறிந்துகொண்டால் மனனம் எளிதாகும். அவ்வறிவுடன் செய்யுளை வாசித்தால் இயல்பாகவே சந்தம் உருவாகும். பாடத் தெரிய வேண்டியதில்லை. சந்தக்கட்டு தெரிந்தால் போதும். அப்பாடலுக்குள் உறைந்திருக்கும் உணர்வை அழகாக வெளிக்கொண்டு வரலாம். அது மனதில் சட்டென்று பதியும். மனனம் செய்வதென்பது கண்ணை மூடிக்கொண்டு உருத்தட்டுவது அல்ல. அதுவொரு அறிவுச் செயல். கவிதையை நுகரும் இன்பமும் அறிவுச் செயலும் இணைந்தால் கிடைக்கும் இலக்கிய இன்பம் பெரிது.
- கல்விப்புலத்தில் மாணவராகவோ ஆசிரியராகவோ இருப்போருக்குப் பழந்தமிழ் இலக்கியப் பாடல்களில் ஓரளவு மனனம் இருப்பது அவசியம். அது நுகர்திறனை மேம்படுத்தும்; இலக்கிய, இலக்கண அறிவை உயர்த்தும். கவிதையை, கவிச்சொற்களை ஒப்பிட்டுக் காண உதவும். இந்த ஒப்புமை காணுதல் உரையாசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் ஆகியோரது பணிகளுக்கு மிகச் சிறப்பாகத் துணை செய்திருக்கிறது.
- இலக்கியம் கற்பித்தலிலும் இது முக்கியமான கூறு. மனனம் செய்வதன் இன்னொரு சிறப்பு செய்யுளைச் சந்தம், பொருள் முடிபு ஆகியவற்றின் அடிப்படையில் வாசிக்கும் திறனை வளர்த்தல் ஆகும். பழந்தமிழ் இலக்கியப் பெருக்கம் கொண்ட நமக்கு இந்த வாசிப்புத் திறன் அவசியம். ஒரு செய்யுளை வாய்விட்டு வாசிக்கத் தடுமாறுவோர் பலரைக் கல்விப்புலத்தில் காணலாம். குறைந்தபட்சம் நூறு பாடல்களை அவர்கள் மனனம் செய்திருந்தாலே அத்தடுமாற்றம் நேராது.
- மனனத்திற்கு நம் சமூகத்தில் இருக்கும் உலகியல் மதிப்பு இன்றும் பெரிது. இலக்கியம் கற்ற ஒருவர் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது அவரிடம் முதலில் ‘இந்த இலக்கியத்திலிருந்து ஒரு பாடலைச் சொல்லுங்கள்’ என்று கேட்பது சாதாரணம். அல்லது ஒரு செய்யுளைக் கொடுத்து அதை வாசித்துப் பொருள் கூறச் சொல்லுதல் நடக்கும். அதனால்தான் என் மாணவர்களுக்கு மனனத்தை வலியுறுத்துவேன்; வற்புறுத்துவதில்லை. இன்றைய கல்விமுறையிலும் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு ஓரளவு மனனம் தேவை என்பது என் எண்ணம். எதை மனனம் செய்வது என்பதை அவரவர் விருப்பப்படி தேர்வுசெய்துகொள்ளலாம். பழந்தமிழ் இலக்கியத்தின் ஒவ்வொரு வகைமையிலும் சில பாடல்கள் மனனமாக இருப்பது நல்லது. கலம்பகம் போல விதவிதமான பாடல்களை மனதில் இருத்தி மகிழலாம்.
கற்பித்தலில் மனனம்
- தமிழிலக்கியம் கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகப் பணியில் சேர்ந்த பிறகு என் கற்பித்தலில் மனனத்தையும் ஒருகூறாகக் கொண்டேன். நல்ல பாடல்களைத் தேர்வுசெய்து சொல்வது, அவற்றை மனதில் பதியும் விதத்தில் வாசித்து விவரிப்பது என்பவற்றைத் தவறாமல் செய்வேன். சில செய்யுள்களையேனும் மனனம் செய்யத் தூண்டும் விதத்தில் நிபந்தனைகளும் போடுவதுண்டு.
- சங்க இலக்கியம் என்றால் குறுந்தொகையில் பத்துப் பாடல்களை மனனம் செய்து சொன்னால், எழுதிக் காட்டுவோருக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்ணை முழுமையாகத் தருவேன் என்று அறிவிப்பேன். அதை உண்மையென நம்பிப் பல மாணவர்கள் மனனம் செய்திருக்கிறார்கள். முத்தொள்ளாயிரம், நந்திக் கலம்பகம், கம்பராமாயணம், தனிப்பாடல்கள் ஆகியவற்றில் சில பாடல்களையேனும் என் மாணவர்கள் மனனம் செய்யும்படி நேர்ந்துவிடும்.
- கற்கும் நேரத்தில் அதற்காக என்னைத் திட்டும் மாணவர்கள் உண்டு. அவர்களே பிற்காலத்தில் அதன் பயனைப் பெற்ற பிறகு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிப்பார்கள். சில தனிப்பாடல்களை என்னிடம் கேட்ட பிறகு காளமேகம், ஔவையார் ஆகிய புலவர்களின் மொத்தப் பாடல்களையும் மனனம் செய்துகொண்டு மகிழ்ந்த மாணவர்கள் உண்டு. அப்புலவர்களின் பாடல்கள் அனைத்தும் மனனமாக எனக்குத் தெரியாது; என் மாணவர்களுக்குத் தெரியும். குறுந்தொகைப் பாடல்களையும் கம்பராமாயணப் பாடல்களையும் நேர்முகத் தேர்வில் சொல்லிக் காட்டி உயர்கல்வி வாய்ப்பையும் வேலைவாய்ப்பையும் பெற்றோர் உண்டு.
- இன்றைய தமிழ் இலக்கியக் கல்விப் பாடத்திட்டத்தில் மனனத்திற்கு இடமில்லை என்றாலும் நுகர்ச்சி, அறிவு, நடைமுறைப் பயன்பாடு ஆகியவற்றுக்காகச் சுயவிருப்ப அடிப்படையில் தேர்வுசெய்துகொண்ட பாடல்களை மனனம் செய்வது தேவை. அது தனிநபருக்கும் இலக்கியக் கல்விக்கும் ஒருசேர உதவும் என்று நம்புகிறேன்.
பயன்பட்ட நூல்
- உ.வே.சாமிநாதையர், திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் (இருபாகங்கள்), 1986, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், மறுபதிப்பு.
நன்றி: அருஞ்சொல் (08 – 07 – 2023)