TNPSC Thervupettagam

தமிழ்க் காசுவும் தந்தை பெரியாரும்

November 4 , 2023 434 days 477 0
  • தமிழ்க் காசு என்றழைக்கப்பட்ட கா.சுப்பிரமணியனார் (கா.சு.: பொ.ஆ. 1888 – 1945) தமிழையும் சைவ நெறியையும் தனது இரு கண்களாகப் போற்றியவர். அந்தக் காலத்திலேயே எம்.எல். பட்டம் பெற்றதோடு, தாகூர் சட்ட விரிவுரையாளர் என்கிற சிறப்புத் தகுதியையும் பெற்றவர். சமயம், நீதி, வரலாறு, இலக்கியம் என்று பல்வேறு துறைகளிலும் தனது தடத்தைப் பதியச் செய்தவர்.
  • 1920களில் தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின்னர் எழுந்த கடவுள் மறுப்புப் பரப்புரைக்கு, கா.சுப்பிரமணியனார், மறைமலையடிகளார், திரு.வி.கல்யாணசுந்தரனார் உள்ளிட்டோர் கடுமையான எதிர்வினை ஆற்றினர். 1929ஆம் ஆண்டு மே மாதம் திருப்பாதிரிப்புலியூரில் மறைமலையடிகள் தலைமையில் சைவர் மாநாடு கூட்டப்பெற்றது.
  • அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே ‘கடவுள் உண்டென்னும் கொள்கை இன்றியமையாதது’ என்பதுதான். கோயிலில் வழிபடுவதற்கு உயர்வு, தாழ்வு பாராட்டுதல் கூடாது, தேவதாசிகளுக்குப் பொட்டுக் கட்டுதல் கூடாது என்பன போன்ற முற்போக்கான தீர்மானங்களும் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
  • இம்மாநாட்டுக்குச் சில மாதங்கள் முன்னர்தான் தந்தை பெரியார் முதல் சுயமரியாதை மாநாட்டைச் செங்கல்பட்டில் கூட்டியிருந்தார். அதில் கோயில்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளில் தீண்டாமை என்பதை ஒழித்து, அனைவரும் பயன்படுத்துவதற்கான உரிமையைக் கொடுக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
  • அப்போது தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கோயில் நுழைவுப் போராட்டங்களைச் சுயமரியாதை இயக்கத்தினர் முன்னெடுத்து வந்தனர். மேலும், தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற பரப்புரையினையும் பெரியார் தனது ‘குடிஅரசு’ இதழின் வாயிலாகத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
  • சைவர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பார்க்கும்போது, சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் சைவர் மாநாட்டிலும் எதிரொலித்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. 1937ஆம் ஆண்டு திருச்சியில் ‘சென்னை மாகாண 3ஆவது தமிழர் மாநாடு’ நடைபெற்றது. அம்மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசியவர் கா.சுப்பிரமணியனார்.
  • தமிழர் மொழி, கலை, நாகரிகம் ஆகிய விஷயங்களில் யாவரும் ஒப்புக்கொள்ளத்தக்க முடிவு கூற உரிமையும், ஆற்றலும் உடையவர்” என்ற பாராட்டுரையோடு விடுதலை நாளிதழ் இவரது மாநாட்டு உரை முழுவதையும் வெளியிட்டது (விடுதலை – 28.12.1937, 29.12.1937).
  • இம்மாநாட்டில் தமிழர் என்பதற்கான வரையறையைக் கா.சு. அளித்தார். “தமிழர் என்பவர் தமிழைத் தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழைத் தாய்மொழி எனக் கருதாதவர் தமிழர் ஆக மாட்டார். தமிழ்நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழிபோல் போற்றுபவரைத் தமிழர் என்பது இழுக்காகாது” என்றார்.
  • மறைமலையடிகளும், கா.சுப்பிரமணியனாரும் எனது வலது கையும் இடது கையும் போன்றவர்கள் என்றார் பெரியார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தோடு கைகோத்தவர் கா.சு. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணி புரிந்தபோது, தந்தை பெரியாரைப் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துப் பேச வைத்தார்.
  • தனது இறுதிக் காலத்தில் நோயுற்று அவதிப்பட்டார் கா.சு. அப்போது அவருக்கு உதவியாக மாதந்தோறும் 50 ரூபாய் அனுப்பி உதவியவர் பெரியார். இவ்விரு ஆளுமைகளும் கடவுள் ஏற்பு-மறுப்புக் கொள்கையில் இருவேறு துருவங்களாக முரண்பட்டு இருந்தபோதும், தமிழ் மொழிப் பாதுகாப்பு, தமிழர் நலன் ஆகியவற்றில் ஒன்றிணைந்து செயல்பட்டது நினைவுகூரத்தக்கது.
  • (நவ. 5: கா.சுப்பிரமணியனார் 135ஆவது பிறந்த நாள்)

நன்றி: தி இந்து (04 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories