TNPSC Thervupettagam

தமிழ்ச் சிறார் நூல்களில் ஓவியம் சிறக்க வழி என்ன

February 17 , 2024 191 days 196 0
  • ஏன் புத்தகக் காட்சிகளுக்கு வரும் குழந்தைகள் ஆங்கிலப் புத்தகங்களையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள், ஏன் குழந்தைகளைச் சாப்பிடவைக்க, சமாதானப்படுத்த தொலைக்காட்சித் திரையிலோ, திறன்பேசியிலோ கார்ட்டூன் படங்களைப் பெற்றோர் போடுகிறார்கள்? தமிழைவிடப் பிற மொழிகளின் கதையம்சம் ஈர்ப்புடையதாக இருக்கிறதா? இல்லை என்பதே எல்லாவற்றுக்குமான பதில். உலகத்துக்கே சவால்விடும் கதைகள் எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் நம்மிடையே கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அவை அதே அளவுக்குக் காட்சிவயப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
  • சில சர்வதேசச் சிறார் இதழ்கள், புத்தகங்களுக்கு ஓவியங்களுக்கான உரிமை கோரிக் கடிதம் எழுதுகையில், அதற்கு அவர்கள் சொன்ன விலை கிட்டத்தட்ட எழுத்துக்கு நிகரான உரிமத்தொகையாக உள்ளது. ஓவியர்கள் புதுக் கதாபாத்திரங்களை வடிவமைக்கிறார்கள். அதற்கென்று பிரத்யேகமான உடை, உடல்மொழி எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். அதனால்தான் அங்கே ஓவியங்கள் கதையை வழிநடத்துகின்றன. ஆஸ்டிரிக்ஸ், டின்டின் ரசிகர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள்.
  • சிறாருக்கு மட்டுமல்ல. டிசி, மார்வல் என்று சித்திரக் கதைகளாகத் தொடங்கிய கதாபாத்திரங்கள்தாம் இன்று பெரிய பொருள்செலவில் திரைப்படங்களாக வெளிவருகின்றன. மங்கா சித்திரக் கதையில் கவரப்படாத தலைப்பே இல்லை. தமிழில் அப்படிக் கதாபாத்திரங்களை நாம் உருவாக்கவே இல்லையா?

இந்தியாவில் எப்படி

  • அமர் சித்திர கதா, லயன், முத்து சித்திரக் கதையின் மிகப் பெரிய சொத்து அவற்றின் ஓவியங்கள்தாம். பேச்சுவழக்குக்கு ஏற்ப, அச்சுக்குத் தோதான வடிவத்தில் வார்த்தைகளை இப்போது மாற்றியிருக்கிறார்கள். ஆனால், ஓவியங்களோ அப்படியேதான் இருக்கின்றன. நேரடியாகத் தமிழில் நல்ல ஓவியங்களோடு ஒரு புத்தகத்தைக் கொண்டுவர முடியும்.
  • ஆனால், அதற்கான காலம் தமிழ் பதிப்புச் சூழலில் இன்னும் உருவாகவில்லை. பெரியவர்களுக்கான புத்தகங்களை அதிக விலை கொடுத்து வாங்க முயலும் பலர், சிறார் நூல்களின் விலை இரண்டு இலக்கத்துக்கு மேல் இருந்தால் யோசிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கான நூல்களோ வார்த்தைகள் குறைந்து, ஓவியங்கள் நிறைந்து இருக்க வேண்டும். இதனால் விலையும் அதிகமாகும்.
  • மற்ற இந்திய மொழிகளிலெல்லாம் சிறார் புத்தகங்கள் எப்படி வருகின்றன? தூலிகா, கரடி டேல்ஸ் போன்ற பதிப்பகங்கள் பெரும் பொருள்செலவில் புத்தகங்களை ஆங்கிலம், தமிழ் உள்படப் பல இந்திய மொழிகளில் கொண்டுவருகின்றன. அவற்றை விலைகொடுத்து வாங்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
  • ஆனால், அதே தரத்தில் குறைந்த விலையில் பிரதம், ஏகலவ்யா போன்ற சில அமைப்புகள் வண்ண ஓவியங்களோடு புத்தகங்களை வெளியிடுகின்றன. குறைந்தது 15 மொழிகளில் இது எப்படிச் சாத்தியமாகிறது என்று ஆராய்ந்தபோதுதான், பெரும் ஐடி நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதிகளிலிருந்து ஓவியங்களுக்கான நல்கைகளைப் பெறுகின்றன என்பது தெரிந்தது.
  • பிரதம் சில ஓவியங்களுக்கான உரிமையை ஓவியர் ஒப்புதலுடன் யார் வேண்டுமானாலும் அவர்களது மொழியில் படத்தை ஒட்டி வேறு வேறு கதைகளை எழுதி அச்சிட்டுக் கொள்ளலாம் என்று படைப்பாக்கப் பொது உரிமத்தின் கீழ் வழங்குகிறது. அரசு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட், சி.பி.டி. எனும் Children Book Trust ஆகியவையும் நிறைய புத்தகங்களைப் பல இந்திய மொழிகளில் குறைந்த விலையில் வெளியிடுகின்றன.
  • மாற்றி யோசிக்கலாம்! ஏகலவ்யா குழந்தைகளுக்கான வடிவமாதிரி (texture), அட்டை (board) புத்தகங்களைத் தயாரிக்கிறது. Xact, Wise eagle, Brijwasi போன்ற டெல்லி பதிப்பகங்கள்டை கட்எனப்படும் மாறுபட்ட வடிவங்களில் அமைந்த புத்தகங்களுக்குப் பிரபலம். உலகம் முழுவதும் 60 மொழிகளில் அந்த வடிவமைப்புக்கான உரிமத்தை மட்டும் விற்க உலகப் புத்தகக் காட்சிகளில் அரங்கு அமைக்கின்றன.
  • சற்று முயன்றால் நம்மிடம் இருக்கும் அச்சகங்களிலேயே இதுபோன்றடை கட்’, வடிவமாதிரி, அட்டைப் புத்தகங்களை அச்சடிக்கலாம். குறைந்தது 4-5 தென்னிந்திய மொழிப் பதிப்பகங்கள் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம்) அதே வடிவமைப்பில் அவரவர் மொழியில் அச்சடிக்கும் சாத்தியம் இருக்கிறது. இந்தி, வங்காளம், குஜராத்தி, நேபாளி, ஒடிய மொழிகள் அப்படித்தான் கூட்டாகச் செயல்படுகின்றன.
  • எப்படி ஃபிராங்ஃபர்ட் புத்தகச் சந்தை அச்சுப் புத்தகங்களுக்கான உரிமம் வாங்குவது, விற்பதற்கான மெக்காவாகக் கருதப்படுகிறதோ அதேபோல்தான் இத்தாலியின் பொலோன்யா குழந்தைகளுக்கான புத்தகச் சந்தைதான் (Bologna Children's Book Fair) சிறார் புத்தக ஓவியர்கள், வடிவமைப்பாளர்களுக்கான மெக்கா. ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியம் செய்ததுபோல் உலகக் குழந்தை இலக்கியப் போக்குகளை பொலோன்யாதான் தீர்மானிக்கிறது. அதன் தழுவல்களாகத்தான் பல இந்திய மாதிரிகள், பிற மொழிகளில் உலாவுகின்றன.
  • ஓவியக் கல்லூரி மாணவ ஓவியர்களை ஒன்றிணைத்துச் சிறார் கதைகளுக்கு ஓவியம் வரையும் பயிற்சியை வழங்குவதன் மூலமும், பிற நாடுகள், மாநிலங்களுக்குப் பயணம் செய்து அங்குள்ள ஓவியத்தின் போக்குகளை அறிந்து வருவதன் மூலமும் இத்துறையில் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு நாமும் தயாராகலாம். கதாசிரியர்கள், ஓவியர்கள், குழந்தைகள் மூவரையும் ஒருங்கிணைத்துக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துவதன் மூலமும் ஓவியத்துக்கான புதிய திறப்புகளை உருவாக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories