TNPSC Thervupettagam

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்: ஜெயலலிதாவின் அறிவிப்பு எப்போது நிறைவேறும்?

November 8 , 2019 1898 days 1052 0
  • கடந்த ஆண்டு, சென்னை புத்தகக்காட்சியில் வாசகர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயங்களில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் அரங்கமும் ஒன்று. அங்கு புத்தகங்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. விலைப்பட்டியல் மட்டுமே விநியோகிக்கப்பட்டது.
  • விரும்பும் புத்தகங்களுக்கு விலையைச் செலுத்தினால் போதும், புத்தகங்கள் வீடு தேடி வரும் என்றார்கள். அதை நம்பி, ஆயிரக்கணக்கான மாணவர்களும் வாசகர்களும் புத்தகங்களுக்கு விலையைச் செலுத்தினார்கள். இரண்டு ஆண்டுகள் முடியப்போகின்றன. இன்னும் புத்தகங்கள் அச்சேறியபாடில்லை.
  • 1960-களில் தமிழ் வழியில் பள்ளி முடித்து, கல்லூரி செல்லும் மாணவர்களுக்காக உயர் கல்வி நூல்களைத் தமிழில் கொண்டுவர தமிழக அரசு முடிவெடுத்தது. இதற்காகத் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் இன்று தமிழ்நாடு பாடநூல் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
  • இந்நிறுவனம், தமிழில் உயர் கல்வி படிப்பதற்கு அளித்திருக்கும் பங்களிப்பு என்பது தமிழர்கள் காலமெல்லாம் நன்றிகூர வேண்டியது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே உயர் கல்வியில் கலைப் பாடங்களைத் தமிழில் கற்பிப்பது நடைமுறைக்கு வந்துவிட்டது.
  • அதற்காக வரலாறு, பொருளாதாரம், சமூகவியல் என்று ஒவ்வொரு துறைசார்ந்தும் முக்கியமான ஆங்கில நூல்களை மொழிபெயர்த்து வெளியிடும் பணிகள் தொடங்கப்பட்டன. அண்ணா ஆட்சிக்கு வந்ததும் அறிவியல் பாடங்களையும் தமிழில் கற்கும் வாய்ப்பு உருவானது.
  • கலை, அறிவியல், சட்டம், மருத்துவம், பொறியியல், உளவியல் என 40-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு நேரடியாகவும் மொழிபெயர்ப்பாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பேராசிரியர்கள் எழுதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுவந்தது. ஒரு பெரும் அறிவுக் களஞ்சியத்தையே அந்நிறுவனம் உருவாக்கிக்கொடுத்தது.

உயர் கல்வியில் திருப்புமுனை

  • ஒவ்வொரு துறைசார்ந்தும் ஆங்கிலத்தில் மட்டுமே அதுவரை வெளிவந்த நூல்களை முதன்முறையாகத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்ததும், முக்கியமான நூல்களைத் தழுவி தமிழில் எழுதியதும் உயர் கல்வித் துறையில் ஒரு திருப்பமாகவே அமைந்தது.
  • 1970-களுக்குப் பிறகு, தமிழிலேயே உயர் கல்வி பயின்றவர்கள் அந்தந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெறவும், மேலதிக ஆய்வுகளைத் தொடரவும் பாடநூல் நிறுவன வெளியீடுகள் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தன. தமிழகத்தில் முக்கியமான அறிவாளுமைகள் பெரும்பாலானவர்களின் வளர்ச்சியில் இந்த வெளியீடுகள் முக்கிய வினையாற்றியிருக்கின்றன.
  • உயர் கல்விக்கு வெளியே அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளிலும் இந்த வெளியீடுகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. குடிமைப் பணி முதன்மைத் தேர்வை தமிழிலேயே எழுதலாம் என்ற நிலையில், இரண்டு விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அப்போது இருந்தது. கலைப் பாடங்களை விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த வெளியீடுகள் வெற்றியைப் பரிசாக அளித்திருக்கின்றன. இப்போது உயர் கல்வியின் தேவைகளும் அதிகரித்துவிட்டன.
  • போட்டித் தேர்வுகளின் தன்மைகளும் மாறிவிட்டன. உயர் கல்வி அர்த்தமுள்ளதாக அமைய, குறிப்பாகக் கிராமப்புற மாணவர்கள் தொழில் கல்வி பெறவும், அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பியிருக்கும் மாணவர்களிடமிருந்து அறிவியலாளர்களும் ஆய்வாளர்களும் ஆளுமைகளும் உருவாகவும் உயர் கல்வித் துறையில் ஆதார நூல்கள் தமிழில் வருவது அவசியம். ஆனால், பாடநூல் நிறுவனம் அதற்குத் தயாராகவே இல்லை.

ஜெயலலிதாவின் முன்னெடுப்பு

  • காமராஜர் தொடங்கி பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி காலம் வரையிலும் தீவிரமாகச் செயல்பட்டுவந்த பாடநூல் நிறுவனம், அதன் பிறகு சுணங்கிவிட்டது என்ற குற்றச்சாட்டு நிலவிவந்தது. இந்நிலையில், பள்ளி மாணவர்களின் மேலதிக அறிவுத் தேடலுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், அகில இந்திய போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையிலும் அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்படும் என்றும் புதிய நூல்கள் மொழிபெயர்க்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா 2015-ல் அறிவித்தார்.
  • அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தப் பணிக்காகக் கல்வியமைச்சர் செங்கோட்டையனும் ரூ.10 கோடி தொகையை ஒதுக்கியிருப்பதாக அறிவித்தார். அரிய தமிழ் நூல்களை மறுபதிப்பு செய்யவும், புதிய மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்து ஆலோசனை வழங்கவும் ஒரு ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை, முன்னாள் துணைவேந்தர்கள் ஆனந்த கிருஷ்ணன், பாலகுருசாமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
  • ஒவ்வொரு துறையிலும் மூத்த பேராசிரியர்களையும் முன்னணி மொழிபெயர்ப்பாளர்களையும் கொண்டு புதிய மொழிபெயர்ப்பு நூல்கள் கொண்டுவரவிருப்பதாக வெளியான தகவல்கள், உயர் கல்வித் துறை மட்டுமின்றி தீவிர வாசகர்களையும் எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
  • அமர்த்திய சென், யுவால் நோவா ஹராரி, சித்தார்த் முகர்ஜி, நொபொரு கரோஷிமா, ரொமிலா தாப்பர் என்று உலகின் முக்கிய அறிவாளுமைகளின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்றும், முதற்கட்டமாக குறைந்தபட்சம் 50 நூல்கள் வெளியாகும் என்றும் பேசப்பட்டது. இதைத் தவிர, போட்டித் தேர்வு மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஆங்கில நூல்களும் தமிழில் வெளியிடப்படும் என்றும், அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது.
  • தமிழக மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் பாடப் புத்தகத்துக்கு வெளியிலும் திறன்கள் பெற புதிய புத்தகங்கள் கொண்டுவரப்போகிறோம் என்று அறிவித்ததோடு நம்ப முடியாத சுறுசுறுப்புடனும் இயங்கினார்கள்.
  • இவ்வாறு இழந்த பெருமையை மீட்டுக்கொள்ளும் வாய்ப்பு பாடநூல் நிறுவனத்துக்கு வந்தது. இதில் அதிமுக அரசு காட்டிய அக்கறையும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், இப்போது காற்றுபோன பலூன்போல கிடக்கிறது பாடநூல் நிறுவனம்.

என்னதான் நடக்கிறது?

  • ஆண்டுகள் உருண்டோடுகின்றன. புதிய மொழி பெயர்ப்பு நூல்கள் எதுவும் வெளிவருவதாகத் தெரியவில்லை. மொழிபெயர்ப்பாளர்களுக்குப் புத்தகத் தலைப்புகளை அனுப்பி, அவர்கள் மொழிபெயர்க்க விரும்பும் நூல்களைக் குறிப்பிட்டு அனுப்புமாறு கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
  • அரசின் முக்கியமான முயற்சியில் தங்களது பங்கும் இருக்க வேண்டும் என்று மொழிபெயர்ப்பாளர்கள் உடனடியாகத் தங்களது விருப்பங்களைத் தெரிவித்து பதில் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இதெல்லாம் நடந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், இன்னும் அரசிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்று அலுத்துக்கொண்டார் ஒரு மூத்த மொழிபெயர்ப்பாளர்.
  • ‘நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மறுபதிப்பு வரிசையில் சுமார் 100 படைப்பாளிகளின் படைப்புகளைப் பரிந்துரைத்தோம். தமிழில் காணாமல்போன அரிய நூல்களைக் கண்டுபிடித்து மறுபதிப்பு செய்யவும் நூல்களைப் பரிந்துரைத்தோம். சில நூல்களைக் காலத்துக்கு ஏற்பப் புதுப்பிக்கும் வகையில் உரிய அணிந்துரைகள் சேர்த்துப் பரிந்துரைக்கலாம் என்றோம். உயர் கல்விக்கான நூல்கள் தமிழில் இல்லை. அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாம் என்றோம். இவ்வாறு சுமார் 500 தலைப்புகளைப் பரிந்துரைத்தோம்.
  • பிறகு, என்ன ஆனது என்று தெரியவில்லை’ என்கிறார் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர் ஒருவர். தொடக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கி ஆயிரம் நூல்கள் வரையில் மின்னாக்கம் செய்து, இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கின்றன. இவற்றை ஆவணப்பதிப்பாக வெளியிடுவதில் சுமார் 500 மட்டும் இதுவரை வந்துள்ளதாகவும் தெரிகிறது.
  • இப்புத்தகங்கள் புத்தகக்காட்சிகளில் வைக்கப்பட்டு நல்ல வரவேற்பும் பெற்றுள்ளன. போட்டித் தேர்வு மாணவர்களும் ஆய்வாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். 15 நாட்களில் புத்தகங்கள் வீட்டுக்கு வரும் என்று கூறினார்கள். ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் புத்தகங்கள் செல்லவில்லை. இப்படியாக, ஜெயலலிதாவின் முக்கியமான அறிவிப்பு ஒன்று, அவரது பெயரால் நடக்கிற ஆட்சியிலேயே கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது.

நன்றி: இந்து தமிழ் திசை (08-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories