TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் போர்யானைகள்

August 12 , 2023 522 days 634 0
  • வேழமுடைத்து மலைநாடு என்றார் ஒளவையார். தமிழ்நாட்டிலுள்ள இரண்டு மலைத் தொடர்களிலும் மேற்குத்தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி - உள்ள காடுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக யானைகளுக்கு உகந்த வாழிடமாக இருந்தன. இம் மலைகளைப் போர்த்தியிருக்கும் காடுகளில் இன்றும் யானைகள் வாழ்கின்றன. அண்மைக்காலம் வரை சமவெளிக் காடுகளிலும் இருந்தன.
  • வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவை நம் காடுகளை உறைவிடமாகக் கொண்டிருந்தன. தூத்துக்குடிக்கு அருகிலுள்ள ஆயனடைப்பு என்கிற இடத்தில் 30,000 ஆண்டு பழமையான யானை தொல்லெச்சம் (fossil) ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. இமயத்தின் அடிவாரக் காடுகளிலிருந்து இலங்கை வரையில் காட்டானைகள் வாழ்ந்தன என்பதை இங்கு கண்டறியப்பட்ட தொல்லெச்சங்கள் காட்டுகின்றன.
  • அமெரிக்க பல்கலைக்கழம் ஒன்றில் பணியாற்றும் வரலாற்றாசிரியர் தாமஸ் டிரவுட்மன் இந்தியாவில் போர்யானைகளைப் பற்றி யானைகளும் அரசர்களும் (2022, காலச்சுவடு) என்கிற நூலை எழுதியுள்ளார். போர்யானை உருவானது தென்னிந்தியாவில்தான் என்கின்றார் டிரவுட்மன். இங்கிருந்து ஐரோப்பாவிற்கு யானைகள் போரில் பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுடன் யானைப்பாகன்களும் சென்றிருக்கின்றனர்.

முதன்மை ஆயுதம்

  • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரோம் நாட்டின் மீது படையெடுத்த கார்தேஜினிய நாட்டு தளபதி ஹன்னிபல், பல யானைகளுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரைக் கடந்து சென்று ரோம் நகரைத் தாக்கி வென்றார் என்பது ஐரோப்பிய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. அவரது படையிலிருந்த யானைகள் இந்தியாவிலிருந்து சென்றவையே. ஆசிய யானைகளை மட்டுமே பழக்கப்படுத்த முடியும். அவை பல சடங்குகளிலும் பங்கெடுக்கின்றன. அண்மைக் காலம் வரை சர்க்கஸ்களிலும் இவை பயன்படுத்தப்பட்டன. ஆப்பிரிக்க யானைகளுக்கு எந்த வேலை செய்யவும் பயிற்றுவிக்க முடியாது.
  • பண்டைய தமிழ்நாட்டில் காட்டில் வளர்ந்த காட்டானைகளைப் பிடித்து போருக்கு பழக்கினார்கள். குட்டிகளைப் பிடித்து வளர்க்கவில்லை. ஏனென்றால் அவை முழு வளர்ச்சி அடைவதற்குத் தேவையான சுமார் இருபது ஆண்டுகள் வரை, இரை கொடுத்து பராமரிப்பது மிகச் சிரமமான வேலை. ஆகவே வளர்ந்த யானைகளைப் பிடித்தே பழக்கியிருக்கிறார்கள். ஆனால், பிடிப்பதற்கு எந்த உத்தியைப் பயன்படுத்தினார்கள் என்கிற விவரம் இல்லை. குழி பறித்து பிடித்ததாகப் புறநானூற்றில் ஒரு குறிப்பு உண்டு. பிடிக்கப்பட்ட யானைகளுக்குப் போர்ப்பயிற்சி கொடுக்கப்பட்டதைப் பற்றி கபிலர் எழுதியுள்ளார்
  • படையில் ஒரு முக்கிய அங்கமாக இருந்த குதிரைகளை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஆனால், யானைகள் நம் காட்டிலேயே இருந்தன. ஆகவே, இந்தக் காடுகளைக் காப்பதில் அரசர்கள் ஆர்வம் காட்டினார்கள். காட்டில் வாழும் பழங்குடியினரை, யானைகளைப் பிடிப்பதற்கும் பழக்குவதற்கும் அரசர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

தமிழ்நாட்டுப் போர்களில்

  • இன்று பல கோயில் யானைகள் மக்களுக்கு அருகில் இருந்தாலும், நம்முடன் பழகினாலும் அவற்றில் வீட்டினம் கிடையாது. மாடு, குதிரை போன்ற ஒரு வளர்ப்பு விலங்கு அல்ல யானை. பழக்கப்பட்ட காட்டு விலங்குதான். இதற்கென்றே கஜசாஸ்திரம்என்றொரு நூலும் உள்ளது.
  • பயிற்றுவிக்கும் முறை, யானைகளுக்குச் செய்ய வேண்டிய மருத்துவம், கொடுக்க வேண்டிய இரை இவை பற்றிய விவரங்கள் அடக்கிய நூல். பலகாப்ய முனி எழுதிய இந்நூலின் தமிழ் வடிவம் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ளது. போரில் மட்டுமல்ல, வேறு சில வேலைகளைச் செய்யவும் யானைகள் பயன்தரு விலங்காகப் பழக்கப்படுத்தப்பட்டன.
  • இன்றைய ராணுவத்தில் டாங்கிகள் வகிக்கும் இடத்தை அன்று யானைகள் நிரப்பின என்று சொல்லலாம். கோட்டைகளைத் தகர்ப்பதற்கு, போர்க்களத்தில் குதிரைப்படையையும் காலாட்படையையும் துவசம் செய்ய இவை பயன்படுத்தப்பட்டன. ஒளவையார் (1953) படத்தில் ஒரு யானைத்திரள் தோன்றி சோழ மன்னனின் கோட்டையொன்றின் பெருங்கதவுகளை உடைக்கும் காட்சி தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பெற்ற ஒன்று. புறநானூற்றில் கோட்டைக் கதவுகளைத் தகர்க்கும்யானைகளைப் பற்றிய குறிப்பு ஒன்று உண்டு.
  • பல சிற்பங்களில் போர்யானை சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் குதிரைவீரன் ஒருவனைத் தாக்கும் போர்யானை ஒன்றின் புடைப்புச் சிற்பம் உண்டு. ஆலயங்களில் மட்டுமல்ல சில நடுகற்களிலும் போர்யானை காட்டப்பட்டுள்ளது. இலக்கியத்தில் போர்யானைகளைப்பற்றி பல குறிப்புகள் காணப்படுகின்றன. பரணி என்கிற சிற்றிலக்கிய வகை ஆயிரம் போர் யானைகளைக் கொன்ற ஒரு வீரனைப் போற்றிப் பாடுகின்றது. புறநானூற்றுப்பாடல்களில் வெகுவாக குறிப்பிடப்படும் விலங்கு யானைதான். பொன்முடியார் என்கிற கவிஞர் எழுதிய புறநானூற்றுப்பாடல் ஒன்றில்

ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கு

களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே.

  • என்கிற வரிகள் உள்ளன.
  • போர்ப் பயன்பாடு சரிவு
  • குறிஞ்சி நிலத்தில் உள்ள காடுகளில் காட்டானைகள் அதிகமாக வாழ்ந்ததையும், அவற்றை காடுவாழ் மக்கள் வேட்டையாடி இறைச்சியை உண்டது பற்றியும், தந்தங்களை எடுத்துக் கொண்டது பற்றியும் குறிப்புகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. யானைக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் இருந்த நெருக்கத்தைக் காட்டுவதுபோல பல ஊர்ப்பெயர்கள் அமைந்துள்ளன. .ஆனைமலை, ஆனைக்காரன்சத்திரம், திருவானைக்காவைப் போன்று. இதில் எனக்கு பிடித்த பெயர் கரிவலம்வந்த நல்லூர்
  • பீரங்கியும் துப்பாக்கியும் புழக்கத்துக்கு வந்த பின்னர், போர்யானைகளின் பயன்பாடு குறைந்தது. ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு துப்பாக்கியுடன் வந்த பின் சாகச வேட்டை என்கிற பெயரில் யானைகளைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொல்லத் தொடங்கினர். தந்தத்திற்காகவும் இவை கொல்லப்பட்டன. இதைக் கவனித்த பிரிட்டிஷ் அரசு 1879இல் யானைகளை சுடுவதைத் தடை செய்து ஒரு சட்டம் இயற்றியது. நம் நாட்டில் அரசு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட முதல் காட்டுயிர் யானைதான்.
  • வெட்டுமரத் தொழிலில் யானைகளை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுவிட்டது. உலகிலேயே ஆசிய யானைகள் அதிகமாக வாழ்வது இந்தியாவில்தான். இக்காட்டுயிரின் எதிர்காலம் இந்தியாவில் தானிருக்கின்றது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்நாடு ஏறக்குறைய 3,000 யானைகளுக்கு வாழிடமாக உள்ளது என்று ஒரு கணிப்பு (2023) கூறுகின்றது.

உலக யானை நாள் ஆக:12

நன்றி: இந்து தமிழ் திசை (12– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories