TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் அமலாகுமா பூரண மதுவிலக்கு?

June 25 , 2024 6 days 107 0
  • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்வு தமிழ்நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்தத் தருணத்தில் கள்ளச்சாராய மரணங்கள், மதுவிலக்கு தொடர்பான விவாதங்கள் அவசியம்.
  • தமிழகத்தில் கள் இறக்குவதும், குடிப்பதும் தடைசெய்யப்பட்ட காலத்துக்கு முன்பு (1988), கள் குடித்துச் சலித்துப்போன நபர்கள் தங்களுக்கென்று தயாரித்துப் பயன்படுத்திய ஓர் உற்சாக பானத்தை ‘சுவர் முட்டி’ என்று திருநெல்வேலி வட்டாரங்களில் வேடிக்கையாகச் சொல்வது உண்டு. அதைக் குடித்த நபர் போதையில் தடுமாறி ஏதாவது ஒரு வீட்டின் சுவரில் முட்டி அப்படியே சாய்ந்துவிடுவதால், அப்படி ஒரு பெயர் வழங்கப்பட்டிருந்தது.
  • இன்றைக்கு மது தடையில்லாமல் கிடைத்தாலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவது, அதை அருந்தியவர்கள் மரணமடைவது முடிவுக்கு வரவில்லை. கள்ளச்சாராயத்தால் ஏற்படும் அகால மரணங்கள் ஊடகங்களிலும் சமுதாயத்திலும் முன்னுரிமை கொடுத்துப் பேசப்படும் அளவுக்கு, மது அருந்துவதால் தினமும் ஏற்படும் பாதிப்புகள் - பல மடங்காக இருந்தாலும் - அது அவ்வளவாகப் பேசப்படவில்லை. கள்ளச்சாராயம் விஷமாகி ஒரே நாளில் சில மரணங்களை ஏற்படுத்துகிறது; சாராயம் மெதுவான விஷமாகத் தனிநபரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் செல்லரித்துவருகிறது என்பதுதான் உண்மை. இதனால்தான் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசியல், சமூகச் செயல்பாட்டாளர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

பாதிப்பின் தீவிரம்:

  •  மது தங்குதடையின்றிக் கிடைப்பதால், முதல் முறை மது அருந்துபவர்களின் சராசரி வயதும் குறைந்துகொண்டே வருகிறது. மேலும், பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள், பாலியல் தாக்குதல்கள், சாலை விபத்துகள், குற்றச்செயல்கள் ஆகியவற்றுக்கும் மதுபோதைக்கும் நேரடித் தொடர்பு இருப்பது பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தற்கொலைக்கு முயலும் ஆண்களில், பத்தில் ஆறு பேர் மதுபோதையில் இருந்ததாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளால் மருத்துவத் துறை, காவல் துறை போன்றவற்றின் மனிதவளம் வீணாவது, உடல் - மனநலப் பாதிப்புகளால் தனிநபர், அரசாங்கத்துக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகள் ஆகியவை பொருளாதாரத்தின் மீது மறைமுகப் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. நெருக்கமான குடும்ப நபர்களால் பெண்கள் வன்முறைக்கு ஆளாவது உலக அளவில் 27% ஆக இருக்கும் நிலையில், இந்தியாவில் அது 35% ஆக இருப்பதற்கு மதுப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

பூரண மதுவிலக்கு சாத்தியமா?

  •  பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பது அரசியல்ரீதியான முக்கியக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் வேறு பல நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. மதுபானக் கடத்தல், பிற போதைப் பொருள்களின் பயன்பாடு, கள்ளச்சாராய நடமாட்டம் போன்றவை அதிகரிக்கச் சாத்தியம் உண்டு. அத்துடன் இந்தக் குற்றங்களைத் தடுக்கக் காவல் துறையின் மனிதவளம் அதிக அளவில் திசைதிருப்பப்படுவதால், மற்ற குற்றங்கள் பெருகவும் சாத்தியம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் உண்மை இருப்பதை மறுக்க முடியாது.
  • எனினும், டெங்குவை ஒழிக்க வேண்டுமானால் கொசுப்புழு உருவாவதைத் தடுத்தால்தான் முடியும் என்கிற பரப்புரை எவ்வளவு உண்மையோ, அதுபோலவே மது எளிதில் கிடைப்பதைத் தடுக்காமல் மதுவால் ஏற்படும் சமூக, பொருளாதார, உடல், மனநல பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டுவருவதும் சாத்தியமில்லை. ஒரு நபர் மிதமாக மது குடிப்பது உண்மையில் சாத்தியம் என்றால், அதற்குப் போதைப் பொருள் என்று பெயர் வைத்ததே தவறு என்றாகிவிடும். எந்த போதைப் பொருளும் அதற்குப் பழகியவர்களை அடிமையாக்காமல் விடுவதில்லை; அடிமையானவர்களை அழிக்காமலும் விடுவதில்லை.

பிஹாரில் எப்படிச் சாத்தியமாயிற்று?

  • பூரண மதுவிலக்கை விரும்பிய காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் ஆரம்பித்து மிசோரம், நாகாலாந்து போன்ற மாநிலங்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியுள்ளன. அந்த வரிசையில் 2016ஆம் ஆண்டு பிஹார் மாநிலமும் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியது. நிதிஷ் குமார் தலைமையிலான அரசால் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு, பெண்கள் மீதான குடும்ப வன்முறை சுமார் 7% முதல் 14% வரை குறைந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • ஆனால், மதுவிலக்கு மட்டுமே இந்த நேர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிட முடியாது. மனிதவளமாக மாறும் குடும்பப் பெண்கள், குடும்ப வன்முறை உள்ளிட்ட குற்றங்களுக்கு எளிதில் ஆளாகாதவர்களாக இருக்க முடியும் என்கிற கூற்றின் அடிப்படையில், பிஹாரில் சமகாலத்தில் சுயஉதவிக் குழுக்களில் பெண்களின் பங்கு அதிகரிக்கும்படி ஊக்குவிக்கப்பட்டது. இது பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதை எளிதாக்கியது. இதன்படி 2022இல் மட்டும் சுமார் 14 லட்சம் நுண் சுயஉதவிக் குழுக்கள் பிஹாரில் அமைக்கப்பட்டுள்ளதாக நிதிஷ் குமார் தெரிவித்திருந்தார்.
  • பூரண மதுவிலக்குக்குப் பின்பு, 2023ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, சுமார் 1.8 கோடி பேர் குடியை நிறுத்தியுள்ளதாக பிஹார் அரசு தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய மாற்றத்தைக் குடிபோதை மறுவாழ்வு மையங்களால் நிகழ்த்திவிட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கணக்கெடுப்பின்படி, மக்கள் தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும், தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்கும் சேமிக்கும் - செலவழிக்கும் பணத்தால் வருவாய் இழப்பு ஈடுசெய்யப்பட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. நிதிஷ் குமாரின் இந்த முடிவால் பெண்களிடையே கிடைத்த பேராதரவு, அவருக்கு அரசியல் வெற்றியையும் பெற்றுத் தந்ததை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
  • மது அருந்துவதைத் திடீரென்று நிறுத்தி விட்டால், உடல் - மனநலப் பாதிப்புகள் ஏற்பட்டுவிடும் என்று குடிக்கு அடிமையானவர்கள் கூறும் சாக்குபோக்கைப் போல, மதுவிலக்கு மீதான அரசின் கொள்கை முடிவுகள் இருந்துவிடக் கூடாது என்பதுதான் பெரும்பாலான சமூகச் செயல்பாட்டாளர்களின் கருத்து. மது அருந்துவது தினசரி வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும், பண்பாடாகவும் மாறி வருகிறதோ என்று அச்சம் ஏற்படும் வகையில், வயது, பாலின வரம்பின்றி எல்லா தரப்பினரையும் பாதித்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், அரசின் துணிச்சலான முடிவுகள் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவதுடன், அரசின் மீதான நம்பிக்கையையும் சேர்த்தே உறுதிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories