TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலா

May 27 , 2024 230 days 289 0
  • தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்து பாரதியார், ‘திருமேனி செழித்த தமிழ்நாடு’ என குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு மேனியாவும் செழித்திருக்கும் தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலாவுக்கு என்று தகுந்த இடமளிக்க வேண்டிய தருணம் இது. அதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை வேளாண் சுற்றுலா தொடர்பான கொள்கையை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.
  • அது தொடர்பான இணையவழி ஆலோசனைக் கூட்டத்தை அண்மையில் தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒருங்கிணைத்து இருந்தது. அதில் பேசிய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சமயமூர்த்தி IAS, "குழந்தைகள், நகர்ப்புற மாணவர்கள், சுற்றுலாவாசிகள் ஆகியோருக்கு இயற்கை தொடர்பான புரிதலை ஏற்படுத்தவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கச் செய்யவும், தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலா தொடர்பான திட்டத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்" என்று கூறியிருந்தார். அதற்கு கைகொடுக்கும் நோக்கில் ஏற்கெனவே தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலாவை நடத்தி வரும் வேளாண் பண்ணையின் உரிமையாளர்கள் சிலர் முன்னெடுத்த நகர்வு பாராட்டுக்குரியது ஆகும்.
  • சுற்றுலாத் துறையின் புள்ளிவிவர கணக்குப்படி 2023-ம் ஆண்டில் மட்டும் உள்நாட்டு சுற்றுலாவாசிகளின் வருகை 28.61 கோடி ஆகும். அதுவே வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் கிட்டதட்ட 11.75 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் உள்நாட்டு சுற்றுலாவாசிகளின் வரவு 33 சதவீதமும், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் வரவு 97 சதவீதமும் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 முதல் 12 சதவீதம் சுற்றுலா மூலம் வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

முன்னெடுக்க சில யோசனைகள்:

  • ஐவகை நிலங்களை உள்ளடக்கி கலாச்சாராத்துக்கும், உழைப்புக்கும், வேளாண்மைக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலாவை வளர்த்தெடுக்க சில யோசனைகள்:
  • முதலில் வேளாண் சுற்றுலாவுக்கு என்றுதனிக் கொள்கையை உருவாக்க அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை சார்பில் ஒரு குழுவை நியமிக்க வேண்டும். அத்துடன் வேளாண் சுற்றுலாவை ஆரம்பிக்கப்போகும் பண்ணைகளுக்கு தனி அங்கீகாரம் மற்றும் வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.
  • வேளாண் சுற்றுலாவை ஆரம்பிக்க விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் மற்றும் வரி விலக்கு போன்ற சலுகைகளை தருவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இதில் கூட்டுறவு வங்கிகளையும் ஈடுபடுத்த வேண்டும்.
  • கிராம பஞ்சாயத்துகள் அந்தந்த கிராமங்களில் வேளாண் சுற்றுலாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க முன்வர வேண்டும்.
  • தோட்டக்கலைத் துறையின் கீழ் இருக்கும் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் வேளாண் சுற்றுலாவை முன்மாதிரியாக செயல்படுத்த வேண்டும். மேலும் அவ்வப்போது விவசாயிகளுக்கு வேளாண் சுற்றுலாவில் கைதேர்ந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சி தர வேண்டும். அத்துடன் சுற்றுலாத் துறை சார்பில் இளைஞர்களுக்கு வேளாண் சுற்றுலா தொடர்பான பட்டயப்படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
  • பொங்கல் விழாவை கிராமங்களில் வேளாண் சுற்றுலாவுடன் இணைத்துக் கொண்டாடும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும்.
  • பள்ளிக் கல்வித்துறை வேளாண் சுற்றுலா மூலம் மாணவர்களுக்கு வேளாண் கல்வியை எடுத்துச்செல்லும் வகையில் அந்தந்த ஊர்களில் இருக்கும் விவசாயிகளுடன் கைகோர்க்க வேண்டும்.
  • வேளாண் சுற்றுலாவை அனைவரிடத்திலும் தெரியப்படுத்த தனியார் சுற்றுலா இணைய தளங்களோடு ஒப்பந்தம் செய்திட வேண்டும்.
  • வேளாண் சுற்றுலாவை கிராமங்களில் சீரும் சிறப்புமாக மேற்கொள்ளும் வகையில் சாலை வசதி உருவாக்கிட வேண்டும். ஆகவே, தற்போதைய காலகட்டத்தில் பலரும் இயற்கையை விட்டு நம் வேளாண் தொழிலை விட்டு விலகியிருக்கும் சூழ்நிலையில் வேளாண்மைச் சுற்றுலா என்பது காந்தியின், ‘இந்தியா அதன் கிராமங்களில் தான் வாழ்கிறது’ என்ற கூற்றை மெய்ப்பித்துக் காட்டுவதுடன், விவசாயிகளின் சீரான வருமானத்துக்கும் வழிவகுக்கும்.
  • எனவே, சுற்றுலாவாசிகளுக்காக வேளாண் சுற்றுலா வழியே காத்திருக்கும் ஓர் அழகிய விடியலைக் காண தமிழ்நாடு அரசு இக்கணமே முனையும் என்று நம்புவோமாக.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories