TNPSC Thervupettagam

தமிழ்நாட்டுக்குத் தேவை தனித்துவக் கல்விக் கொள்கை

August 9 , 2023 478 days 320 0
  • இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் கல்வி நகரும் திசையைப் பார்க்கும்போது கவலைதான் மேலிடுகிறது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில் சந்திரயான் 3போன்ற விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி வெற்றிபெறுவதற்கு அடிப்படையான கட்டமைப்பை உருவாக்கியது கல்விக் கூடங்கள்தான்.
  • அண்ணா பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களால் உயர் கல்வித் துறையில் தமிழகம் வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ மத்திய அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்திவருகிறது. இதில் உயர் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
  • தேசிய உயர் கல்வித் தகுதி வரைவு அறிக்கையானது (National Higher Education Qualifications Framework) தனியார்மயம், வணிகமயம் ஆகியவற்றுடன் மத்திய அரசின் கீழ் உள்ள கல்வி அமைப்புகள் அனைத்தையும் மையப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் கல்வித் துறையில் மாணவர் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம், நுழையலாம் (Multiple exit/ Multiple entry) என்கிற கோட்பாட்டை வரைவு அறிக்கை வலியுறுத்துகிறது; இது ஆபத்தான போக்காகும்.
  • முதலாம் ஆண்டில், மாணவர் ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்தால், இரண்டாம் ஆண்டுக்குச் செல்ல அந்த மாணவர் தகுதி இல்லாதவராகக் கருதப்பட்டு, ஒரு சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டு வெளியேற்றப்படுவார். இரண்டாம் ஆண்டில் தேர்வில் தோல்வி அடையும் மாணவர் மூன்றாம் ஆண்டுக்கு அனுப்பப்படாமல், பட்டயச் சான்றிதழுடன் வெளியேற்றப்படுவார். இதே போல், மூன்றாம் ஆண்டு மாணவருக்குப் பட்டமும் நான்கு ஆண்டுகளை நிறைவுசெய்த மாணவர்களுக்கு ஆனர்ஸ்பட்டமும் வழங்கப்படும் என வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், மாணவர் ஒருவர் இடைநிற்றலுக்கு உள்ளானால், சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் மீண்டும் எப்படிக் கல்லூரிகளுக்கு வருவார்கள் என்பதை உளவியல், பொருளாதார, சமூக நோக்கில் வரைவு அறிக்கை தீர ஆராயவில்லை என்பது திண்ணமாகிறது. திறன் மேம்பாடு என்ற பெயரில், Bachelor of Vocational Degree (Bvoc) எனும் மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பைப் புதிதாக நடைமுறைப் படுத்துவது ஆபத்தான போக்காகும்.
  • தொழிலாளர் சந்தைத் தேவைக்கு மட்டுமே மாணவர்களை வடிவமைக்கும் திட்டமாகவே இதனைக் கருத முடியும். குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது பல தனியார் கல்லூரிகள் இப்பாடத்திட்டத்தைத் தொடங்கி கல்விக் கட்டணத்தை வெகுவாக ஈட்டவும் வழிவகுக்கும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கல்வியாளர்களைத் தவிர்த்துவிட்டு, பிர்லா-அம்பானியைத் தலைவராகக் கொண்டு அமைக்கப் பட்ட குழுவின் அறிக்கை, கல்வியை வணிகமயமாக்க அப்போதே பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  • மேலும், ‘இந்தியப் பாரம்பரிய அறிவுஎன்ற கோட்பாட்டை வரைவு அறிக்கை முன்னிறுத்துகிறது. இந்தியாவின் மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள், உணவு, உடை, சூழல், பொருளாதார-சமூகரீதியான சூழல் போன்றவற்றை இது கருத்தில் கொள்ளவில்லை. அறிவியலைப் புறந்தள்ளும் மதரீதியான கோட்பாடு ஆபத்தான போக்காகும். உயர் கல்வி மாணவர்களிடம் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கும் ஆற்றலை மட்டுப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
  • இந்நிலையில், தமிழ்நாட்டு மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையில் தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்கள் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது கல்வியாளர்களின் கவலையாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி: இந்து தமிழ் திசை (09– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories