TNPSC Thervupettagam

தமிழ்நாட்டுக்குத் தேவை புதிய அணைகளா... நீர்க் கட்டுமானப் புனரமைப்பா?

September 24 , 2019 1944 days 978 0
  • அடிப்படையில் தமிழ்நாடு ஒரு நீர்ப் பற்றாக்குறை மாநிலம். நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நாட்களில், பருவமழையும் பொய்த்து, அண்டை மாநிலங்களிலிருந்து வரும் தண்ணீரும் குறைந்து, நிலத்தடி நீரும் கீழே இறங்கிவிடும் சூழலில் கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறோம்.
  • சில ஆண்டுகளில் சூழல் கொஞ்சம் மாறுகிறது. ஒரு பெரும் தண்ணீர் நெருக்கடிக்குப் பின், இந்த ஆண்டில் பருவ மழை பரவலாகப் பெய்துவருவதைப் பார்க்கிறோம். அண்டை மாநிலங்களிலிருந்து நமக்குத் தண்ணீர் வருகிறது; மாநிலத்தின் பிரதான நதியான காவிரியும் இம்முறை கை கொடுத்திருக்கிறது. மாநிலத்தின் பெரிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணை நிரம்பியிருக்கிறது. ஆனால், இன்னமும் எல்லா விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் முழுமையாகச் சென்றடைந்திராத நிலையிலேயே நீர்த்தேக்கங்களிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் கடலுக்குச் செல்வதைப் பார்க்கிறோம்.
  • எப்பேர்ப்பட்டவர்களையும் கோபம் அடையச் செய்யும் விஷயம் இது - தண்ணீர்ப் பற்றாக்குறை மாநிலத்தை ஆளும் அரசு தண்ணீர் வந்தடையும் சூழலிலும் சுதாரித்து சேமித்து நிர்வகிக்காமல், கையாலாகாத்தனமாக நின்றுகொண்டிருப்பதைப் பார்ப்பது. ஆனால், இதற்கான தீர்வு என்று பேசும்போது பொதுப்புத்தியிலிருந்து பேசுபவர்கள் இரு விஷயங்களை இணைத்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஒன்று, ‘கொள்ளிடத்தில் திறந்து விடப்படுவதால் அந்தத் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கவிடப்படுகிறது’ என்று சொல்வது. மற்றொன்று, ‘இந்நிலையை மாற்ற புதிய அணைகள் வேண்டும்’ என்று சொல்வது.

நீர்நிலைகள்தான் உயிர் அணைகள்

  • மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட முயன்றுவரும் கர்நாடக மாநிலம், காவிரி உபரி நீர் கடலில் கலப்பதை ஒரு காரணமாகக் காட்டுகிறது. இதற்கு மாற்றாக, தமிழ்நாட்டுக்கு உட்பட்ட ராசிமணலில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இப்படியான முயற்சிகள் தேவைப்படும் இடங்களில் முன்னெடுக்கப்படுவதில் தவறில்லை. ஆனால், பொதுவான ஒரு உண்மை என்னவென்றால், போதுமான அளவுக்குத் தமிழ்நாட்டில் அணைகள் இருக்கின்றன என்பதும், பண்டைத் தமிழர் நீர் மேலாண்மையின் மிக முக்கியமான அம்சம், நீர்நிலைகளையே அவர்கள் உயிருள்ள அணைகளாகக் கட்டமைத்திருந்தார்கள் என்பதும் இதுகுறித்து இன்றைய தலைமுறை ஆட்சியாளர்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததன் விளைவாகவே இத்தகைய பேச்சுகள் தொடர்கின்றன என்பதும்தான்.
  • நாம் இன்றைய கட்டமைப்பிலிருந்து இதைப் புரிந்துகொள்ள முயல்வோம். மேட்டூருக்கு வரும் தண்ணீர் அந்த அணையை நிரப்பியதும் உபரி நீர் முக்கொம்பு, கல்லணை, அணைக்கரை வழியே கொள்ளிடத்தில் திறந்துவிடப்படுவது எந்த வகையில் வியூக முக்கியத்துவம் வாய்ந்தது? கொள்ளிடத்தில் திறந்துவிடப்படும் தண்ணீரைச் சேமித்து, நிர்வகிக்கும் நீர்க் கட்டமைப்புகளை நாம் எப்படியெல்லாம் வீணடிக்கிறோம்? பார்ப்போம்!

கொள்ளிடத்தின் முக்கியத்துவம்

  • மேட்டூர் அணையில் அதன் முழுக் கொள்ளளவை எட்டிய பிறகு, அங்கிருந்து காவிரியில் திறக்கப்படும் உபரி நீர் மேலணை எனப்படும் முக்கொம்பிலுள்ள நீர்த்தேக்கத்தை வந்தடைகிறது. அங்கு காவிரி, கொள்ளிடம் என்று காவிரியாறு இரண்டாகப் பிரிகிறது.
  • காவிரி மாவட்டங்களுக்குப் பாசனத்துக்குத் தேவையான அளவுக்கு காவிரியிலும், எஞ்சிய நீர் கொள்ளிடத்திலும் அனுப்பப்படுகிறது. இந்தத் தண்ணீர் அடுத்த நிலையில், கல்லணையிலும், அதற்கு அடுத்த நிலையில், கீழணை எனப்படும் அணைக்கரையிலும் மேலும் பல கிளைகளுக்குப் பிரித்து அனுப்பப்படுகிறது. இதற்குப் பின்னரே உபரி நீர் கடலை அடைகிறது.
  • காவிரிப் படுகையில் பாசனம் என்பது காவிரியிலிருந்து பிரியும் அதன் துணை ஆறுகள், வாய்க்கால்கள் மூலமாகவே நடக்கிறது. இதனால், காவிரியில் தண்ணீரைச் சேமித்து வைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. விளைவாகவே, கொள்ளிடத்தை ஒட்டி ஏராளமான ஏரிகள், அவற்றை இணைக்கும் வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டன. அவற்றை நாம் முறையாக நிர்வகிப்பது இல்லை.

ஐயன்பெருவளை வாய்க்கால்

  • முக்கொம்பிலிருந்தே நம் கணக்கைத் தொடங்குவோம். முக்கொம்பில் காவிரியும் கொள்ளிடமும் பிரியும் இடத்தில் இடதுபுறம் பிரிவது ஐயன்பெருவளை வாய்க்கால். இதுவே புள்ளம்பாடி வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது. சுமார்
    56 கிமீ பயணித்து, நான்கு பெரிய ஏரிகளையும் 22 சிறு ஏரிகளையும் நிரப்ப வல்லது இது.
  • இந்த புள்ளம்பாடி வாய்க்காலைத் துார்வாரி, கரைகளை முறையாகப் பராமரித்திருந்தால் மேற்கண்ட அனைத்து ஏரிகளிலும் நாம் தண்ணீர் நிரப்பியிருக்கலாம்.
    திருச்சி மாவட்டம், நத்தம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பிரியும் நந்தியாறு மூலம் திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட பெருவளநல்லுார் ஏரி, சங்கேந்தி ஏரி, கோமக்குடி ஏரி, ஆலங்குடி மகாஜன ஏரிக்குத் தண்ணீர் வருகிறது. இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது அரியலுார் மாவட்டத்தில் கண்டராதித்தம் கிராமத்தில் உள்ள செம்பியன்மாதேவி ஏரி.

புதர் மண்டிய கண்டராதித்தம் ஏரி

  • பிற்காலச் சோழர்களில் ராஜராஜ சோழனின் பாட்டனாரான கண்டராதித்த சோழன் தன் மனைவி செம்பியன்மாதேவி பெயரில் வெட்டிய ஏரி இது. இதற்கான நீர் கொள்ளிடம் ஆற்றில் அன்பில் கிராமம் அருகே பிரியும் கால்வாய் வழியாகவும், புள்ளம்பாடி கால்வாய் வழியாகவும் கிடைக்க வேண்டியது. ஆனால், இன்று அதன் நிலை என்ன?
  • சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் ஏரியின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய இடம் பல ஆண்டுகளாகத் துார்வாரப்படாததால் புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த ஏரிக்குத் தண்ணீரைக் கொண்டுவர வேண்டிய இரு வாய்க்கால்களைத் துார்வாரி, கரை கட்டிப் பராமரித்திருந்தால், ஒரு தாலுகாவுக்கு ஒரு பருவ நெல் சாகுபடிக்குத் தண்ணீர் தரலாம். கண்டராதித்தம் ஏரி இந்த ஆண்டு மட்டுமல்ல; பல ஆண்டுகளாகக் காய்ந்து கிடக்கிறது.

காய்ந்து கிடக்கும் பொன்னேரி

  • அரியலுார் மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி ஏரியின் நிலையும் இதுதான். இந்த மாவட்டத்தில் உள்ள சோழகங்கம் எனப்படும் பொன்னேரி ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து வென்றதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரத்தை அமைத்தபோது, அதன் அருகே உருவாக்கிய ஏரி இது.
  • கொள்ளிடம் ஆற்றிலிருந்து இந்த ஏரிக்குத் தண்ணீர் வரக்கூடிய கால்வாய் இருக்கிறது. மிக முக்கியமான இந்தக் கால்வாய், பல ஆண்டுகளாக தமிழக ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெறவே இல்லை. விளைவு, கொள்ளிடத்தில் உபரி நீர் கடலுக்குச் சென்றுகொண்டிருக்க, அதிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பொன்னேரியின் பெரும் பகுதி காய்ந்து கிடக்கிறது.
  • பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்குப் பாசனத் தண்ணீர் தர வேண்டிய ஏரி கால்நடைகளின் மேய்ச்சல் காடாகக் காட்சியளிக்கிறது. பொன்னேரி நிரம்பினால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் வட்டம் செழித்திருக்கும்.

ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் வீராணம் ஏரி

  • இவை எல்லாவற்றையும்விடப் பெரியது, முக்கியமானது வீராணம் ஏரி. கொள்ளிடம் ஆற்றில் கீழணை எனப்படும் அணைக்கரையிலிருந்து வடவாறு வழியே வீராணம் ஏரிக்கும், அதன் இருபுறங்களிலும் உள்ள ராசன் வாய்க்கால்களுக்கும் தண்ணீர் வருகிறது. கடல் போன்று பரந்து கிடக்கும் வீராணம் ஏரியின் ஒரு பகுதி மட்டுமே இரண்டு ஆண்டுகளுக்கு முன் துார்வாரப்பட்டது.
  • இங்குள்ள வண்டல் மண்ணையும் ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்றினால், வீராணத்தில் ஐந்து டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். தற்போது அதன் முழுக் கொள்ளளவில் பாதி அளவு தண்ணீர் மட்டுமே தேக்கிவைக்கப்பட்டிருக்கிறது.

நாரை ஏரி, பெருமாள் ஏரி நிலையும் மோசம்

  • வீராணம் ஏரிக்குத் தண்ணீர் கொண்டுவரும் வடவாற்றின் மூலம் நிரம்பும் மற்றொரு ஏரி நாரை ஏரி. காட்டுமன்னார்கோவிலுக்கு மேற்கே உள்ள இந்த ஏரி என் வாழ்நாளில் துார்வாரப்பட்டு நான் கண்டதில்லை. வீராணம் ஏரி நிரம்பிய பிறகு, சேத்தியாதோப்பு கால்வாய் வழியாக நிரம்பக்கூடியது பெருமாள் ஏரி.
  • கடலுார் மாவட்டத்தில் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள ஏரி தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று. ஒரு லட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி தரக்கூடியது. ஏரியின் மூன்றில் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய பரப்பும் துார்வாரப்படாமல் உள்ளது. வீராணம் ஏரியை இதனுடன் இணைக்கும் கால்வாய் ஆகாயத்தாமரையால் மூடிக்கிடக்கிறது.

அதிகாரிகளின் அறியாமையும் அலட்சியமும்

  • அதிகாரிகள்தான் ஆட்சியாளர்களுக்கு வழி கூற வேண்டும்; நிலைமையை விளக்க வேண்டும். ஆனால், நம்மூரில் இன்றுள்ள பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு எந்த அளவுக்கு நீர்நிலைகளைப் பற்றிய கள நிலவரம் தெரிந்திருக்கும் என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால், அவர்களுடைய செயல்பாடு அந்த நிலையில்தான் இருக்கிறது.
  • இது இயந்திரங்களின் காலம். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் நினைத்தால், இயந்திரங்களைக் கொண்டு ஒவ்வொரு ஏரியையும் சில வாரங்களுக்குள் துார்வாரி முடித்துவிடலாம். முன்கூட்டிச் செயல்பட்டால் தண்ணீர் வீண் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. ஆனால், ஏன் இந்த நீர்நிலைகளையெல்லாம் தூர்வாருவதில், கரைகளை முறையாகப் பராமரிப்பதில் அக்கறை காட்டுவதில்லை? மேலும், அவர்களாகத் தேர்ந்தெடுத்து மேற்கொள்ளும் தூர்வாரலையும் எந்தக் கதியில் நடத்துகிறார்கள்?
  • முறையாகப் பருவமழை பெய்து அணை நிரம்பினால், மேட்டூர் அணையை ஜூன், ஜூலையில் திறந்துவிட வேண்டியிருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும்தானே? அப்படியென்றால், கோடைக்கு முன்பே நம்முடைய சீரமைப்புப் பணிகள் முடிந்திருக்க வேண்டும்தானே? ஏன் ஜூன், ஜூலையில் பணிகள் நடக்கும் விதத்தில் தூர்வாரும் பணியைத் தொடங்குகின்றனர்? இந்தத் தாமதம் முழுமையான தூர்வாரலுக்கு அல்ல;
  • பகுதியான கொள்ளைக்கே வழிவகுக்கிறது. தாமதமாகப் பணிகளைத் தொடங்கும்போது ஆற்றைத் தாண்டி, வாய்க்கால்களைக்கூடப் பணி தொட்டிருக்காது. இதற்குள் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால், ‘துார்வாரும் வேலைகள் நடக்கின்றன’ என்று கூறி, வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்படாது.
  • ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதைக் காணும் விவசாயிகள் வாய்க்கால் காய்ந்து கிடப்பதைப் பார்த்து, வயல்களுக்காகத் தண்ணீர் திறந்துவிடுமாறு அதிகாரிகளை வலியுறுத்துவார்கள். இதையே சாக்காக வைத்து, வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்படும்போது துார்வாரும் பணி நிறுத்தப்பட்டுவிடும். ஆக, துார்வாரும் பணி எந்த அளவுக்கு நடந்திருக்கிறது என்பதை யாரும் அளவிடவோ மதிப்பிடவோ இயலாது. ஆக, இது கொள்ளைக்கே வழிவகுக்கிறது என்ற விவசாயிகளின் குற்றச்சாட்டில் நியாயம் இல்லை என்று எவரால் கூற முடியும்?

உயிருள்ள நீராதாரங்களைப் பராமரிப்போம்

  • கொள்ளிடம் என்பது பொங்கிவரும் காவிரி நீரை, அது வெள்ளமாகி ஊரை அடித்துச் செல்வதிலிருந்து காக்கும் அரண் மட்டும் அல்ல; வறட்சிக் காலத்தில் நீரின்றித் தவிக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட உயிருள்ள நீர்த்தேக்கங்களுக்கு உயிர் நீரைப் பகிர்ந்து தருவதற்கான கட்டமைப்பும்தான். ஆனால், கொள்ளிடத்தை இன்றைய நாட்களில் உபரி நீரை வெளியேற்றுவதற்கான பாதையாக மட்டுமே நாம் பயன்படுத்திவருகிறோம்.
  • கொள்ளிடத்திலிருந்து உபரி நீர் ஏன் நேராகக் கடலுக்குச் செல்கிறது என்றால், அங்கிருந்து தண்ணீர் செல்ல வேண்டிய ஏரிகளும் கால்வாய்களும் அவற்றுக்கு தண்ணீரைக் கொண்டுசேர்க்கும் நரம்புகளான வாய்க்கால்களும் தூர்ந்துகிடக்கின்றன என்பதால்தான். பழிக்கு உரியது கொள்ளிடம் அல்ல; அது அள்ளித்தரும் இடம்!

நன்றி: இந்து தமிழ் திசை (24-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories