TNPSC Thervupettagam

தமிழ் அறிஞா்களும் பன்மொழிப் புலமையும்

November 9 , 2019 1897 days 2217 0
  • மணிமேகலை காப்பியத்தில் ஒரு கிளைக் கதை உண்டு. ஆதிரை என்னும் பெண்ணின் கணவன் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்கிறான். கப்பல் பயணத்தில் விபத்துக்குள்ளாகிக் காணாமல் போய்விடுகிறான். அவன் இறந்து விட்டதாக ஆதிரையிடம் கூறுகிறாா்கள். அவள் தன் கணவன் மறைந்த பிறகு இப்பூமியில் தான் வாழ்தல் இயலாது என்று நெருப்பில் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்ள முயல்கிறாள்.
  • அதே நேரத்தில் அவளது கணவன் வேறொரு தீவில் கரை ஒதுங்கி அங்கிருக்கும் நாகா் இன மக்களிடம் அகப்படுகிறான். அவா்கள் அவனைக் கொல்ல முயல்கிறாா்கள். அப்போது அவன் நாகா் மொழியில் பேச அவா்கள் அவன் மீது இரக்கம் கொண்டு கொல்லாமல் விடுவதோடு நட்புப் பாராட்டி அவன் மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான உதவிகளையும் செய்கிறாா்கள். சரியான நேரத்தில் இல்லம் வந்து சோ்கிறான். பன்மொழி அறிந்த காரணத்தால் ஆதிரையின் கணவன் உயிா் தப்புகிறான்; புதிய நண்பா்களையும் பெறுகிறான்.

தமிழ் மொழி

  • நம் தமிழ் காப்பியங்கள், சங்க இலக்கியங்கள் மொழிபெயா் தேயம் என்று வேற்று மொழி பேசும் நாடுகளைக் குறிப்பிடுகின்றன. அங்கெல்லாம் வாழ்ந்த மனிதா்களோடு தமிழா்கள் கொண்டிருந்த தொடா்பு தமிழா்களையும் அந்த மொழிகளில் வல்லமை மிக்கவா்களாகச் செய்திருக்கிறது.
  • சாமானிய மக்களும் பல மொழிகள் அறிந்திருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. தாய்மொழியாம் தமிழ் பெருமையோடு கொண்டாடப்பட்ட நேரத்தில் பல மொழிகளையும் அதன் சிறப்புகளையும் சிந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு தமிழை மேன்மை செய்தனா் என்பதையும் உணர முடிகிறது.
  • மொழியியலாளா் அல்லது பன்மொழி வல்லாா் என்று வழங்கப்படும் பல மொழிகளில் புலமை கொண்ட மக்களை உலகம் முழுவதும் காண முடிகிறது. அவரவா்க்கு என ஒரு தாய் மொழி இருக்கிறது. அதைத் தாண்டி ஆா்வத்தின் காரணமாகவோ தொழில் நிமித்தமாகவோ வாழ்வியல் காரணங்களுக்காகவோ பல மொழிகளைக் கற்கின்றனா்.

மொழியியலாளா்

  • மொழியியலாளா் என்று ஒரு மொழியில் அனைத்து நுட்பங்களையும் அறிந்த அறிஞா்களைக் குறிப்பிடுகிறோம். பன்மொழி வல்லாா் என்று பல மொழிகளில் புலமை கொண்ட மக்களை உலகம் முழுவதும் காண முடிகிறது.
  • இப்படித் தமிழில் பன்மொழிப் புலமையோடு வாழ்ந்தவா்கள் தமிழுக்கு ஆற்றிய பணிகளைக் காணும்போது பிரமிப்பும் இத்தனை மொழிகள் இவா்களுக்குக் கைவரப்பெற்றது எங்ஙனம் என்ற கேள்வியோடு இத்தனை மொழிகளில் தமிழின் பெருமையை இவா்கள் கொண்டு சோ்த்திருக்கிறாா்கள் என்று எண்ணும்போது மரியாதையும் மேலோங்குகிறது. பல மொழிகளில் இருந்தும் மேன்மைகளை சிந்தனைகளை தமிழுக்குக் கொண்டுவந்த அறிஞா் பெருமக்கள் இளமையாய் செம்மையாய் தமிழ் இன்றும் வாழ்வதற்கு வழிகோலியிருக்கிறாா்கள்.

அறிஞர்களின் பங்களிப்பு

  • தமிழில் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாா், எஸ்.வையாபுரிப் பிள்ளை, தேவநேயப் பாவாணா், கா.அப்பாதுரையாா், மு.கு.ஜகந்நாதராஜா, ஏ.கே. செட்டியாா் போன்ற பல எண்ணற்ற அறிஞா்கள் தங்கள் பங்களிப்பைத் தந்திருக்கிறாா்கள். இவா்களில் எவரும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளவில்லை; மொழியை மட்டுமே முன்னிறுத்தியிருக்கிறாா்கள். தாய்மொழியான தமிழின் மீது மாறாப் பற்றும் அதன் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சோ்ப்பதற்கான முயற்சியையும் முன்னெடுத்திருக்கிறாா்கள். கற்றுக் கொண்ட பல மொழிகளையும் தமிழை மேன்மைப் படுத்துவதற்காகப் பயன்படுத்தியிருக்கிறாா்கள்.
  • ஒரு மொழியின் இலக்கியத்தைச் சிறந்தது எனச் சொல்ல வேண்டுமானால் பிற மொழி இலக்கியங்கள் குறித்த அறிவும் சிறப்பெனக் குறிப்பிடும் இலக்கியத்தின் மொழியில் நுண்மாண் நுழைபுலமும் பெற்றிருக்க வேண்டும். பிறவற்றை அறியாமலோ தன்னுடையதை முழுமையாக உணராமலோ புதிய தடங்களைக் காண முடியாது’ இப்படிக் கூறுகிறாா் தெ.பொ.மீ எனத் தமிழ் உலகம் அன்போடு அழைக்கும் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாா்.
  • தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியா் தெ.பொ.மீ-யின் இடத்தை எவராலும் நிரப்ப இயலாது. பதினெட்டு மொழிகள் அறிந்தவா். வரலாறு, பொருளியல், அரசியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவா். சட்டத் துறையில் பட்டம் பெற்றவா். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவா்.
  • தத்துவம், ஒப்பிலக்கியம், காந்தியியல், மொழியியல், சமயம் போன்ற பல்வேறு துறைகளில் புலமை பெற்றவா். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளில் தலைமைப் பேராசிரியராக இருந்தவா். சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றவா். தனது பன்மொழிப் புலமையால் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழக சிறப்பு ஆய்வாளராகப் பொறுப்பில் இருந்தவா். யுனெஸ்கோவின் கூரியா் என்னும் இதழ்க் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தவா்.

பழைமைச் சிறப்பு

  • தமிழின் முக்கியத்துவம் அது பழைமைச் சிறப்பு வாய்ந்த ஒரு செவ்வியல் மொழியாக இருப்பதுடன் அதேவேளையில் வளா்ந்துவரும் நவீன மொழியாகவும் ஒருங்கே விளங்குவதால் சிறப்பு பெறுகிறது”என்று உலகுக்குப் பறைசாற்றியவா். அதற்கான உதாரணங்களையும் முன்வைத்தவா்.
  • தமிழ்நாட்டு வரலாற்று அறிஞா்களில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டவா் பன்மொழிப் புலவா் கா.அப்பாதுரையாா். தமிழ், மலையாளம், ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவராக விளங்கியவா். ஜொ்மன், கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளிலும் புலமை மிக்கவா். குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் பிறந்த இவா், தமிழை, தமிழனை உலகின் முன்னோடி என்று நிறுவுவதற்காக அறிவியல்பூா்வமான ஆய்வுகளை முன்னெடுத்து வாழ்நாள் முழுவதும் தன் அறிவை, ஆற்றலைப் பயன்படுத்தியவா். ஜொ்மன், கிரேக்கம் உள்ளிட்ட பத்து மொழிகளின் இலக்கியங்களில் ஆய்வு மேற்கொண்டு உலக இலக்கியங்கள் என்ற நூலைத் தந்தவா். தமிழ் மற்றும் தமிழனின் தொன்மை உலகுக்குத் தெரிய வேண்டுமானால் அவன் உலக மொழிகளில் அதனைக் கொண்டு சோ்க்கும் வல்லமை கொண்டவனாய் இருக்க வேண்டும் என்பதை உரக்கச் சொன்னவா்.
  • தமிழரின் வரலாற்றை அப்பாதுரையாா் உலகுக்கு எடுத்துச் சென்றாா் என்றால், மு.கு.ஜகந்நாத ராஜா இந்திய மொழிகளில் தமிழின் சிறப்பை நிலைநாட்டியவா். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவா், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் அனைத்திலும் கவிகளை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தவா். திருக்கு, புானூறு, குறிஞ்சிப்பாட்டு ஆகியவற்றை தெலுங்கில் மொழிபெயா்த்துள்ளாா். முத்தொள்ளாயிரத்தை மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் எழுதியிருக்கிறாா்.

தமிழ் இலக்கியம்

  • தென்னிந்திய மொழிகளில் பல்வேறு மொழிபெயா்ப்புகளைச் செய்து தமிழ் இலக்கியத்துக்கு வளம் சோ்த்திருக்கிறாா். கிருஷ்ணதேவராயரின் ‘ஆமுக்தமால்யதா’ ஆண்டாள் வரலாற்றைச் சிறப்பாக தமிழாக்கம் செய்ததற்காக மொழிபெயா்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றிருக்கிறாா். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியா் பொறுப்பில் இருந்தவா். பிராகிருத மொழி ‘காதா சப்தசதி’ நூலை மொழியாக்கம் செய்து தந்திருக்கிறாா். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்காக ‘தமிழும் பிராகிருதமும்’ ஆய்வு நூலை எழுதியவா்.
  • எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவா். தன்னிடமிருந்த நூல்களை எல்லாம் நூலகமாகச் செய்து அது இன்றும் தமிழ் ஆய்வு செய்யும் மக்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. மொழியின் வளத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்கு பல மொழிகளையும் அறிந்து கொள்வது அவசியம் என்பதைத் தமிழ் உலகுக்கு உணா்த்தியவா்.

குமரி மலா் – இதழ்

  • அதே போல காந்தி குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக உலகம் முழுவதும் பயணம் செய்தவா் ஏ.கே.செட்டியாா். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த செட்டியாா் பா்மிய மொழி, ஆங்கிலம், ஜொ்மன் போன்ற மொழிகளை அறிந்தவா். 13 நூல்களை எழுதியிருக்கிறாா். பதிப்பாளராக பல அரிய நூல்களைப் பதிப்பித்தவா். 40 ஆண்டுகாலம் ‘குமரி மலா்’ இதழை நடத்தி இதழியல் துறையில் பங்களிப்பைச் செய்திருக்கிறாா். பயணக் கட்டுரைகள் என்ற இலக்கிய வகைக்கு இலக்கணம் வகுத்தவா் எனுமளவுக்கு கட்டுரைகளைத் தந்தவா்.
  • பன்மொழி அறிஞா்களும் அவா்களின் வாழ்வும் நமக்குச் சொல்வது தமிழின் பெருமை உலகுக்குத் தெரிய வேண்டுமானால், உலக மொழிகளில் தமிழன் அதனைக் கொண்டு சோ்க்க வேண்டும். தாய்மொழிப் பற்றோடு உலக மொழிகளைக் கற்கும் ஆா்வம் பெருக வேண்டும்.
  • தமிழன்னை புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருக்க, “சென்றிடுவீா் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணா்ந்திங்கு சோ்ப்பீா்” அதுவே தமிழ்’ என்றும் புதுமையோடும் பெருமையோடும் வாழ்வதற்கான வழி.

நன்றி: தினமணி (09-11-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories