TNPSC Thervupettagam

தமிழ் கட்டாயப் பாடமானால் போதுமா

August 3 , 2023 398 days 431 0
  • தமிழ்நாட்டில் அனைத்து விதமான பள்ளிகளிலும் 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்கிற சட்டத்தைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியது. அதன்படி, 2015–16 கல்வியாண்டில் அனைத்து விதமான பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமானது. 2016–17 கல்வி ஆண்டில் 2ஆம் வகுப்புக்கும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாகப் படிப்படியாக அமலானது.
  • அதன்படி 2022–23 கல்வியாண்டில், 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக நடை முறைக்குவந்தது. இந்நிலையில், 2023–24 கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு வரையும், 2024–25 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு வரையும் தமிழ்ப் பாடம் கட்டாயமாகிறது. இது மாநிலப் பாடத் திட்டப் பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் செயல்படும் சிபிஎஸ்இ உள்பட அனைத்துவிதப் பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆனால், பல தனியார் பள்ளிகள், குறிப்பாக மத்திய அரசுப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப் படவில்லை.
  • இதனால் தமிழ் கற்காமலேயே ஒன்பதாம் வகுப்பு வரை வந்துவிட்ட மாணவர் களுக்கும் 2024-25 கல்வி ஆண்டு முதல் தமிழ் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த மே மாதம் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. இதற்காக அனைத்து தனியார் பள்ளிகளிலும் தகுதிவாய்ந்த தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
  • அறிவிப்புகள் போதுமா? அறிக்கைகள், அறிவிப்புகள், சுற்றிக்கைகள் மட்டுமே அனைத்து விதமான பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாகக் கொண்டுபோய்ச் சேர்க்குமா? அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் ஒரே தமிழ்ப் பாடத்திட்டம் இருந்தாலும் அந்தப் பாடத் திட்டத்தை மாணவர்களிடம் கொண்டுசேர்ப்பதில் ஏகப்பட்ட முரண்கள் இருக்கின்றன. தமிழிலும் தமிழ் இலக்கணத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த, 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஆசிரியர்களைப் போல் அரசு / தனியார் பள்ளிகளின் இன்றைய ஆசிரியர்கள் இல்லை.
  • தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் விரும்பும் வகையில் எளிமைப்படுத்திக் கொண்டு சேர்க்கும் பணி தமிழாசிரியர்களுக்கு அடிப்படை. ஆனால், இங்கே யார் தமிழ்ப் பாடத்தை நடத்துகிறார்கள்? தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் தமிழில் பட்டம் பெறாதவர்களே தொடக்கப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கிறார்கள்.
  • அவர்களால் எப்படித் தமிழைச் சரியாகச் சொல்லித் தந்துவிட முடியும்? ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், குறைந்த ஊதியத்துக்கு யார் தமிழைச் சொல்லிக் கொடுக்க முன்வந்தாலும், எந்தச் சோதனையும் இன்றித் தமிழாசிரியர்களாக அமர்த்திவிடுகிறார்கள். அதிலும் முதன்மைப் பாடங்களுக்குக் கூடுதலாகப் பாடவேளைகள் ஒதுக்கப்பட்ட பின்பு, மீதமிருக்கும் நேரத்தில் தேர்ச்சி நோக்கில் தமிழ்ப் பாடம் நடத்துகிற பள்ளிகள் அதிகம்.
  • தீர்வு எப்போது? முதலில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் அனைத்து விதமான பள்ளிகளிலும் தமிழ் கட்டாய மொழிப்பாடமாக நடத்தப்பட்டது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எல்லா பள்ளிகளிலும் தமிழ்ப் பாடம் நடத்தத் தகுதியுள்ள தமிழாசிரியர்கள் எவ்வளவு பேர் பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்கள், தனியார் பள்ளிகளில் பிற மொழி ஆசிரியர்களுக்கு இணையாகத் தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதும் ஆராயப்பட வேண்டும்.
  • தமிழ் படித்த ஆசிரியர்களின் நிலையைப் பார்த்து மாணவர்களே பரிதாபப்படும் நிலையில் தான் இன்றைய தனியார் பள்ளித் தமிழாசிரியர்களின் நிலை இருக்கிறது. இப்படியான சூழலில், தமிழ் ஏற்றம் பெறும் என்பது கானல்நீர். தமிழ் வளர்ச்சி என வரும்போது மாணவர்களைப் பற்றி மட்டுமல்லாமல் அனைத்து வகையான பள்ளிகளின் ஆசிரியர்களையும் மனதில் வைத்து அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories