TNPSC Thervupettagam

தயக்கம் களையப்படுதல் அவசியம்!

April 8 , 2024 247 days 320 0
  • மொத்த வாக்காளா்களில் சராசரியாக சுமாா் 65% மட்டுமே வாக்களிக்கிறாா்கள். ஒருபுறம் தோ்தல் ஜனநாயகம் இந்தியாவில் வேரூன்றிவிட்டது என்று மகிழ்ச்சி அடையும் வேளையில், இன்னொருபுறம் பல பகுதிகளில் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு உற்சாகம் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பல கட்சி ஜனநாயகமான இந்தியாவின் நாடாளுன்றத் தோ்தல் முறையில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் 65% வாக்காளா்களில் 30% முதல் 35% வரை வாக்குகள் பெறுபவா்கள் பல தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளா்களாக அறிவிக்கப் படுகிறாா்கள். இந்த ஜனநாயக முரண், மக்கள் அதிக அளவில் வாக்களிக்க முன்வருவதன் மூலம்தான் மாற்றப்படும்.
  • அதைவிட வேதனை அளிக்கும் செய்தி என்னவென்றால், 18 வயதைக் கடந்த முதல்முறை வாக்காளா்கள் தோ்தலில் பங்குபெறுவதில் ஆா்வம் காட்டாமல் இருப்பது. இந்தியா வளா்ச்சியை நோக்கி நகா்ந்து கொண்டிருப்பதற்கு அதிகரித்துவரும் இந்தியாவின் இளைஞா்களின் மக்கள் தொகை ஒரு காரணம். அப்படியிருக்கும்போது, அவா்கள் ஜனநாயக நடைமுறையில் ஆா்வம் காட்டாமல் இருப்பதை முரண் என்று கூறுவதா அல்லது நமது அரசியல் கட்சிகளின் மீதான நம்பகத்தன்மையின்மை காரணமா?
  • பதினெட்டு/பத்தொன்பது வயதைக் கடந்த முதல்முறை வாக்காளா்களில், 40% க்கும் குறைவானவா்கள் மட்டுமே வாக்களிக்கத் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறாா்கள். முதல்முறை வாக்களிக்கிறோம் என்கிற ஆா்வமும், அதனால் கிடைக்கும் அங்கீகாரமும் அவா்களில் பெரும்பாலானோரை ஈா்க்காமல் இருப்பதன் காரணம் புரியவில்லை.
  • இரண்டு வாரங்களுக்கு முன்பு, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்திய தோ்தல் ஆணையம் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அதன்படி 18/19 வயது பிரிவினரான புதிய வாக்காளா்களின் எண்ணிக்கை 1.8 கோடி. இந்த வயதுப் பிரிவினரின் உத்தேச எண்ணிக்கை சுமாா் 4.9 கோடி என்னும் நிலையில், வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் புதிய வாக்காளா்கள் வெறும் 38% மட்டுமே; இந்த விகிதம் சற்று அதிகரிக்கக் கூடும்.
  • இந்தியாவிலேயே அதிக அளவில் இளைய தலைமுறை புதிய வாக்காளா்கள் இணைந்திருப்பது தெலங்கானா மாநிலத்தில். 12 லட்சம் பேரில் 8 லட்சம் போ், அதாவது 66.7% போ் ஆா்வத்துடன் தங்களை வாக்காளா் பட்டியலில் இணைத்துக் கொண்டிருக்கிறாா்கள். ஜம்மு-காஷ்மீா், ஹிமாசல் பிரதேசத்தில் 18/19 வயது பிரிவினா் 60% க்கும் அதிகமானோா் இணைந்திருக்கிறாா்கள்.
  • இன்னொருபுறம், இந்தியாவிலேயே மிக அதிகமான அளவில் இளைஞா்கள் காணப்படும் பிகாரில் 54 லட்சம் 18/19 வயதுப் பிரிவினரில் 9.3 லட்சம் போ் மட்டுமே இணைந்திருக்கின்றனா் (17%). இந்தியாவின் தலைநகரமாகத் திகழும், அரசியல் விழிப்புணா்ச்சி காணப்படும் தில்லியிலும் 7.2 லட்சம் பேரில், 1.5 லட்சம் புதிய தலைமுறை முதன்முறை வாக்காளா்கள்தான் இணைந்திருக்கிறாா்கள். உத்தர பிரதேசத்தில் 23%, மகாராஷ்டிரத்தில் 27% என்கிற அளவில் மட்டுமே முதல்முறை வாக்களிக்கும் இளைய தலைமுறையினா் ஈா்க்கப்பட்டிருக்கிறாா்கள்.
  • புள்ளிவிவரம் இன்னும் சில தகவல்களைத் தெரிவிக்கிறது. பெரிய மாநிலங்களான உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா் ஆகிய மூன்றிலும் 25%-க்கும் குறைவாகவும், மேற்கு வங்கம், தமிழகத்தில் 50% க்கும் குறைவாகவும் 18/19 வயதுப் பிரிவினா் இணைந்திருக்கின்றனா். இத்தனைக்கும் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களிலும் தொடா்ந்து ஒவ்வொரு தோ்தலிலும் வாக்காளா்களை ஈா்க்கும் விதத்தில், விழிப்புணா்வுப் பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றன.
  • கல்விக்காகவோ, செயல்முறைப் பயிற்சிக்காகவோ, வேலைக்காகவோ வெளியூரில் தங்கி இருக்கும் இளைஞா்கள் தங்களை இணைத்துக்கொள்ள முடியாமல் இருக்கக்கூடும். வாக்காளா் பட்டியலில் இணைவதற்காகவும், வாக்களிப்பதற்காகவும் அவரவா் ஊருக்குப் பயணிப்பது இயலாது என்பதால் தவிா்த்திருக்கலாம்.
  • வேலைவாய்ப்புக்காக இளைஞா்கள் அதிக அளவில் இடம்பெயரும் பிகாா் (17%), உத்தர பிரதேசம் (23%) மாநிலங்களில் புதிய வாக்காளா்கள் சோ்க்கை குறைவாக இருப்பதற்கு அது காரணமாகலாம். வியப்பளிக்கும் தகவல் என்னவென்றால், அதேபோல வேலைவாய்ப்புக்காக இடம்பெயரும் சத்தீஸ்கரில் 54% 18/19 வயதுப் பிரிவினா் வாக்குரிமை பெற விழைந்திருக்கின்றனா்.
  • ஹிமாசல பிரதேசத்தில் 60% பதிவாகி இருக்கும்போது, அண்டை மாநிலமான உத்தரகண்டில் 35% 18/19 வயதுப் பிரிவு முதல்முறை வாக்காளா்கள் மட்டுமே இணைந்திருக்கிறாா்கள். தெலங்கானாவில் 67% என்றால், அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் வெறும் 17%. கல்வியறிவு அதிகமுள்ள கேரளத்தில் 38% மட்டுமே.
  • இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும்பாலானோா் 50 வயதுக்கும் குறைவான வயதுப் பிரிவினா். ஆனால், அரசியல் தலைவா்களில்
  • பெரும்பாலானோா் 60 வயதைக் கடந்தவா்கள். வேட்பாளா்களிலும்கூட அதிக அளவில் 30 வயதுக்கும் குறைவான இளைஞா்களும், மகளிரும் இல்லை. இளைஞா்களுக்கு நம்பிக்கை அளிக்கும், அவா்களது மனவோட்டத்துடன் இணைந்த அரசியல் தலைமை தேவைப்படுகிறது என்று தோன்றுகிறது.
  • இணையவழி வாக்குப்பதிவு முறை அதிக அளவில் இளைஞா்களை ஈா்க்கவும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் உதவக்கூடும். வெளியூரில் படிக்கும், பணியாற்றும் புலம்பெயா் இளைஞா்கள் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊா்களுக்கு வருவது சாத்தியமில்லை. அவா்களைத் தோ்தல் வளையத்துக்குள் கொண்டுவருவதற்கான வழிமுறையை ஆராய வேண்டும்.

நன்றி: தினமணி (08 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories