தயார்நிலைக்குத் தயாராகுங்கள்
- கட்டுப்பாடான மாணவப் பருவம் என்றால்கூட அதில் பலவித சுதந்திரம் உண்டு. அவற்றில் பெரும்பாலானவற்றைத் தொலைத்துவிடும் கட்டாயம் பணியில் சேரும்போது ஏற்படும். குறிப்பாக, சம வயதுத் தோழர்கள் இல்லாமல் சீனியர்களுடன் பணியாற்ற வேண்டிய சூழல் அமையலாம். சிரிப்பு, கொண்டாட்டம் போன்றவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உருவாகலாம். வரையறுக்கப்பட்ட பணி நேரம் முடிந்த பிறகும்கூடச் சிறிது நேரம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம்.
- கல்லூரிப் பருவம் முடிந்து வேலைக்குச் செல்லும் பலரும் இந்தச் சோதனையான கட்டத்தைத் தாண்டித்தான் வந்திருப்பார்கள். புதிய சூழலை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வில்லை என்றால் இந்தக் காலக் கட்டம், அளவுக்கு அதிகமான மன இறுக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, மனதைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள், ஒரு கதையில் வரும் முதியவரைப் போல!
மனநிலையில் மாற்றம்:
- எண்பது வயதான முதியவர் ஒருவரின் மனைவி இறந்துவிட்டார். மகனுக்கோ அவரைத் தன்னோடு தங்க வைப்பதில் விருப்பமில்லை. வெளியேறச் சொல்லிவிட்டான். இதன் காரணமாக, தனக்கு வரும் ஓய்வூதியத்தைக் கொண்டு அவரே ஓர் இடத்தில் தங்க வேண்டிய கட்டாயம். அப்படி ஒரு முதியோர் இல்லத்தை அவர் தேர்வு செய்து வாடகையையும் கொடுத்து விட்டார். அவசரமாக அங்கே குடியேற வேண்டுமென்பதால் தான் தங்கும் அறையைக்கூட அவர் பார்க்க வில்லை.
- வரவேற்பறையில் அவர் சிறிது நேரம் தங்க வைக்கப்பட்டிருந்தார். ஒருவழியாக அவர் தங்க வேண்டிய அறை சுத்தப்படுத்தப்பட்டபின், அந்த விடுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் அவரிடம், “வாருங்கள் ஐயா. உங்கள் அறைக்குச் செல்லலாம்” என்று அழைத்துச் சென்றான். போகும்போது, “உங்கள் அறையின் ஜன்னல் வடக்குத் திசையில் உள்ளது. படுக்கை ஒருவர் தாராளமாகப் படுத்து உறங்க ஏதுவானதாக இருக்கும். அதற்குப் பச்சை நிற விரிப்பு போடப்பட்டிருக்கிறது.
- அந்த வண்ணம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகி றேன்” என்று பேசிக்கொண்டிருக்க முதியவர் புன்னகையுடன் குறுக் கிட்டார். “என் அறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று முதியவர் கூறும்போது அவரது முகத்தில் மகிழ்ச்சி படர்ந்திருந்தது. சிறுவனுக்குக் குழப்பம். “ஐயா, இதுவரை நீங்கள் உங்கள் அறையைப் பார்த்ததில் லையே, பிறகு எப்படி இப்படிக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டான்.
- அதற்கு அந்த முதியவர், “அந்த அறை எப்படி இருந்தாலும், நான் அங்கு மகிழ்ச்சியோடு இருக்கப்போவதாகத் தீர்மானித்துவிட்டேன். கட்டிலின் அளவு, திரைச்சீலையின் நிறம் போன் றவை என் மகிழ்ச்சியைக் குறைக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார். வாழ்க்கையின் சோதனையான ஒரு காலக்கட்டத்தில் எப்படி ஒரு விவேகம்! இந்த முதியவரின் மன நிலையைப் பணிகளில் புதிதாகச் செல்பவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களது வாழ்க்கையில் மன இறுக்கம் தோன்றாது. இந்த மனநிலை புதிய பணிச் சூழலில் எப்படியெல்லாம் உதவலாம் என்று பார்ப்போம்.
மாற்றம் நல்லது:
- வேலை இடத்தில் உங்கள் குழுவில் உள்ள பிறர் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அது உங்களுக்குத் துன்பம் தராது. சில நாள்களில் ஒரு குழுவில் இருந்து இன்னொரு குழுவுக்கு உங்களை இடம் மாற்றி னாலும் உங்கள் மனம் தளராது. எந்தச் சூழலிலும் மன அமைதியை இழக்க மாட்டேன் என்று தீர்மானித்திருந்தால் நீங்கள் பணிக்குச் செல்லும் நிறுவனத்தின் எதிர்மறைச் சூழல்கள் உங்களை நிலைகுலைந்து போக வைக்காது. எந்த வேலையையும் மனமுவந்து செய்வீர்கள். “இது ‘போர்’ அடிக்கும் வேலை.
- இது எனக்கான வேலை அல்ல” என்றெல்லாம் எண்ண மாட்டீர்கள். மற்றவர்களின் பாராட்டுகள் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்றால், அதற்காக இடிந்து போக மாட்டீர்கள். எந்தச் சூழலிலும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நம்புபவர்கள் உற்சாகம் பொருந்திய வர்களாக இருப்பார்கள்.
- சொல்லப்போனால் உங்களது திறமையான ஆற்றலைவிட எதையும் அனுசரித்துச் செயல்படும் மன நிலையைத்தான் நிறுவனங்கள் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கும்.காரணம் இந்தக் காலக்கட்டத்தில் பணிகளின் தன்மை என்பது வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.
- புதிதாக ஒரு நிறுவனத்தில் சேர்ந்த சில நாள்களில், “எப்படி இருக்கிறது உங்கள் பணியும் பணியிடமும்?” என்று யாராவது உங்களிடம் கேட்டால், நல்லவிதமாக ஐந்தாறு வாக்கியங்கள் சொல்ல முடிகிறதா? அப்படி யானால் ‘adaptability’ எனப்படும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு வந்துவிட்டது எனப் புரிந்து கொள்ளலாம். இந்தப் பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள்.
- மாறாகக் கோபமும் வருத்தமுமாக அடுத்தடுத்து எதிர்மறை விஷயங்கள்தான் உங்களிடமிருந்து பதிலாக வருகிறதா? அப்படியானால் (அவை உண்மையாகவே இருந்தாலும் கூட) உங்கள் மனப்போக்கை நீங்கள் பண் படுத்திக்கொள்ளவில்லை என்று பொருள். மாற்றிக்கொள்ளுங்கள். மாற்றங்களில் உள்ள சிறப்புகளும் புலப்படும்.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 03 – 2025)