TNPSC Thervupettagam

தயார் நிலையில் இந்தியா: இந்திய - சீன எல்லை பிரச்னை

July 11 , 2023 422 days 267 0
  • எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள கல்வானில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட சம்பவம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் இந்திய - சீன எல்லை பிரச்னைக்கு எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் தொடர்வது இரு நாடுகளின் ராஜாங்க உறவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது. எல்லை பேச்சுவார்த்தைகளில், சீனா முட்டுக்கட்டை போடுவது தீர்வு எட்டப்படாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம்.
  • திசைதிருப்பும் உத்திகளின் மூலம் எல்லைகளை ஆக்கிரமிப்பதும், எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தி இந்தியா மீது உளவியல் ரீதியான மறைமுகப் போரை முன்னெடுப்பதும் சீனாவின் உத்தியாக இருந்து வருகிறது. 1993-இல் சமாதான ஒப்பந்தம், 1996-இல் பரஸ்பர நம்பிக்கை முயற்சிகள், 2005, 2013 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகிய இவற்றில் எதையுமே சீனா பின்பற்றவோ, அதன்படி நடக்கவோ தயாராக இல்லாமல் இருப்பது தான் மோதல் தொடர்வதற்கு முக்கிய காரணம். அந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப் பட்டவாறு பின்பற்றப்பட்டால் மட்டுமே மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு ஏற்பட முடியும் என்பது இந்தியாவின் தீர்மானமான முடிவு.
  • எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தன்னிச்சையாக மீறுவதும், மாற்றங்களை ஏற்படுத்துவதும் சீனாவின் சூழ்ச்சியாக இருந்து வருகிறது. ஐந்து மோதல் பகுதிகளில் படை திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. ஜூன் 15, 2020 தாக்குதல் நிகழ்ந்த கல்வான் பகுதி, பிப்ரவரி 2021-இல் பாங்காங் ஏரியின் தெற்குக் கரை, ஆகஸ்ட் 2021-இல் கோஹ்ரா வெந்நீர் ஊற்று பகுதியிலுள்ள 17-ஆவது கண்காணிப்பு மையம், செப்டம்பர் 2022-இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட 15-ஆவது கண்காணிப்பு மையம் ஆகியவற்றில் இரு நாட்டு ராணுவ கமாண்டர்களின் 18 சுற்று பேச்சுவார்த்தைகளின் விளைவாக துருப்புகள் திரும்பப் பெறப்பட்டன.
  • துருப்புகள் திரும்பப் பெறப்பட்டனவே தவிர அங்கெல்லாம் பதற்றம் தணியவோ, நிலைமை முற்றிலும் சீராகவோ இல்லை. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்திக் கொண்டே போகும் சீனாவின் போக்கு, எல்லை பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படும் என்கிற நம்பிக்கையை குறைக்கிறது.
  • 2020 ஜூன் 17-ஆம் தேதி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே இருநாட்டு உறவு மேம்படும் என்று மிகத் தெளிவாகக் கூறியும்கூட சீனா அதை பொருட்படுத்துவதாக இல்லை. 1949-இல் காணப்பட்ட அடிப்படை பிரச்னைகள், எந்தவித மாற்றமோ, தீர்வோ காணப்படாமல் தொடர்கின்றன என்பதுதான் நிஜம்.
  • இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை 30 சுற்றுகளுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. எல்லை பிரச்னை குறித்து சிறப்பு பிரதிநிதிகள்; இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள்; இருநாட்டு நிதியமைச்சர்கள் சந்தித்து விவாதித்தனர் - அப்படியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவும், ஐந்தாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவும் அவரவர் மண்ணில் மற்றவரின் ஊடகவியலாளர்களுக்குக்கூட இடமளிக்காத நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
  • 18 சுற்று பேச்சுவார்த்தைக்குப் பிறகும்கூட எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியத் துருப்புகள் வழக்கமாக கண்காணிப்பு நடத்திவந்த டெப்சாங் சமவெளி, டெம்சோக் பகுதிகளில் இருந்து வெளியேற சீனா தயாராக இல்லை.
  • ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்தப் பகுதிகளை சமாதான ஒப்பந்தத்தின் மூலம் தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. எல்லை பிரச்னையில் இடைக்கால ஒப்பந்தத்தின் பகுதியாக அந்த இரு பகுதிகளையும் இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் சீனாவின் நிபந்தனை.
  • சீன வெளியுறவு அமைச்சர் கின் காங், பாதுகாப்பு அமைச்சர் லீ ஷங்பூ இருவரும் ஜி-20 மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றில் கலந்துகொண்டபோது, ஆயிரக்கணக்கான இருநாட்டு வீரர்களும் குவிந்துகிடக்கும் எல்லையில் அமைதி நிலவுவதாக தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்தியா - சீனா இரு நாட்டு உறவு மேம்படவும், சர்வதேச அமைப்புகளில் ஒருங்கிணைந்து செயல்படவும், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவும் எல்லா முயற்சிகளையும் சீனா முன்னெடுப்பதாக இருவருமே தெரிவித்திருக்கிறார்கள்.
  • "இருதரப்பும் தொலைநோக்குப் பார்வையுடன் எல்லை பிரச்னையை அணுகி இரு நாட்டு உறவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என்று கூறும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் லீ சொல்லாமல் சொல்வது என்னவென்றால், சீனாவின் ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.
  • நல்லவேளையாக, சீனாவின் அந்த வலையில் இந்தியா சிக்கிக்கொள்ளவில்லை என்பதைத்தான் எல்லையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலை கட்டமைப்பு மேம்பாடு தெரிவிக்கிறது. சாலை கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய போர்த்தளவாடங்கள், கூடுதல் துருப்புகள் ஆகியவற்றை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா தயார் நிலையில் வைத்திருப்பது சீனாவுக்கு தெரியாமல் இல்லை.
  • கிழக்கு லடாக் பகுதியிலுள்ள காரகோரம் மலைப்பகுதியில் 17,800 அடி உயரத்தில் இருக்கும் சாஷர்லா கணவாய் பகுதியில் 4 கி.மீ. நீளமுள்ள கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது. சஷோமா, சாஷர்லா, முர்கோ ஆகியவற்றை இணைக்கும் 56 கி.மீ. சாலை டெப்சாங் சமவெளி, டெம்சோக் ஆகிய சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பகுதிகளுக்கு துருப்புகளை எளிதாக நகர்த்த உதவும். நாமும் தயார் நிலையில்தான் இருக்கிறோம் என்பதன் அடையாளம் இது.

நன்றி: தினமணி (11  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories