TNPSC Thervupettagam

தரவுப் பாதுகாப்பு மசோதா யாரைப் பாதுகாக்கிறது

August 11 , 2023 524 days 293 0
  • நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இரண்டு அவைகளிலும் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா 2023 (Digital Personal Data Protection Bill 2023) நிறைவேற்றப் பட்டு விட்டது. இந்த மசோதா குறித்த பல முக்கியப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. தனிநபர் தகவல்களைச் சேகரிப்பவர்கள், அந்தத் தகவல்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்காகவும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தச் சட்டத்தின் குறிக்கோளுக்கும் அதன் சட்ட வடிவத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளதாக நாடு முழுக்க பல வல்லுநர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
  • இந்தச் சட்டமானது, மக்களிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்கு உள்ள தடைகளிலிருந்து அரசு விலக்கு பெற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. அத்துடன், அரசிடம் இருந்து மக்கள் தகவல் பெறுவதற்கான உரிமையை வழங்கியிருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மிகப்பெரிய அளவில் வலுவிழக்கச் செய்யும் திருத்தமும் இந்த டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவின் ஓர் அங்கமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பில் பின்னடைவு

  • தனிநபர்களின் தனியுரிமைத் (Right to Privacy) தகவல்களுக்கும் தனிநபர் பொதுத் தகவல்களுக்கும் (Right to personal information in public interest) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஏற்கெனவே நல்ல சமநிலை உள்ளது. இன்றைய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பிரிவு 8(1)(j)-இல் பொது வேலைக்கும் பொது நலனுக்கும் முற்றிலும் சம்பந்தம் இல்லாத தனிநபரின் தகவல்களாக இருந்தாலோ; ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையின் அந்தரங்க விவகாரத்தில் தலையிடுவதுபோல் இருந்தாலோ தகவல்கள் தரத் தேவையில்லை என்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • அதாவது, அரசிடம் உள்ள தனிநபர் சார்ந்த தகவல் ஒன்றை அளிப்பது, தனிநபர் உரிமையை மீறாத வண்ணம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஏற்கெனவே வழிவகை செய்யப் பட்டுள்ளது. ஆனால், தனிநபர் சார்ந்த தகவல் என்றாலே தரத் தேவையில்லை என்று இந்தச் சட்டப் பிரிவில் தற்போது திருத்தம் மேற்கொண்டிருப்பது ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கும்.
  • இந்தத் திருத்தம் பல முக்கியக் கேள்விகளை எழுப்புகிறது. இன்று பல பெரிய தனியார் நிறுவனங்கள்/ நபர்கள் பல வங்கிகளில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் வாராக் கடனாக ஏமாற்றியிருப்பது நமக்குத் தெரியும். வங்கியில் உள்ளது மக்கள் பணம்தானே? பொது நலனில் யார் ஏமாற்றியது என மக்களுக்குத் தெரிய வேண்டாமா? மக்கள் வரிப் பணத்தில் தான் வீடு கட்டும் திட்டம்நடைபெறுகிறது; ‘நூறு நாள்வேலைத் திட்டம்நடைபெறுகிறது.
  • சரியான பயனர்களுக்குத்தான் இந்தத் திட்டம் போய்ச் சேர்கிறதா என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? தங்களுடைய வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அரசு ஊழியர் ஒருவரின் சொத்து விவரம், வருகைப் பதிவேடுகளைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு இல்லையா? இந்த வெளிப்படைத்தன்மை இருந்தால்தானே ஊழல் குறையும்; நிர்வாகச் சீர்கேடு குறையும்? இப்படி தனிநபர் சார்ந்த அனைத்துத் தகவல்களையும் தர முடியாது என்பதன் மூலமாக, அரசில் வெளிப்படைத்தன்மை மிகப்பெரிய அளவில் குறைந்து, ஊழல் மேலும் அதிகரிக்கும். ஊழல், ஊழல்வாதிகள் குறித்த தகவல்களை மக்கள் பெற முடியாத நிலை ஏற்படும். இந்தச் சட்டத் திருத்தத்துக்கும் இச்சட்டத்தின் குறிக்கோளான தனிநபர் உரிமைப் பாதுகாப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பறிபோகும் உரிமை

  • தனிநபர் சார்ந்தது என்றாலும் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் கொடுக்கக்கூடிய தகவல்களை மக்களுக்கும் கொடுத்தாக வேண்டும் என்கிற பிரிவும் சட்டத் திருத்தம் மூலம் நீக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் தெரிவிக்கப்படும் தகவல்கள் சாதாரண மனிதருக்கும் தெரிய வேண்டும் என்பதே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சமாகும். 2005 க்கு முன்பு வரை நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே குறிப்பிட்ட தகவலைப் பெற முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால், இந்தச் சட்டம் வந்த பிறகு அந்த அதிகாரம் ஒவ்வொரு சாமானிய மனிதரின் கைக்கும் வந்தது.
  • இந்த சாராம்சம் விதிவிலக்கின் கடைசிப் பிரிவான 8(1)(j)க்குப் பிறகு உள்ள ஒன்று. அதாவது, அனைத்து விதிவிலக்குக்கும் பொதுவானது என்றுதான் தகவல் அறியும் உரிமைச் சட்ட வடிவை உருவாக்கிய அருணா ராய் போன்றவர்கள் கூறுகின்றனர். எந்தத் தகவல் விதிவிலக்கின் கீழ் வந்தாலும், அது நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தரக்கூடிய தகவலாயின் அது மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
  • ஆனால், இதை 8(1)(j)-இன் அங்கம் மட்டுமே என்று தவறாகக் கருதி, 8(1)(j) பிரிவுத் திருத்தத்தின் அங்கமாக இதையும் சேர்த்து நீக்குகிறோம் என அரசு தெரிவித்திருக்கிறது. தற்போது இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெறக்கூடிய தகவல்களைச் சாமானிய மனிதர் பெற முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தன்னாட்சியற்ற ஆணையம்

  • டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா 2023இன் வேறு சில அம்சங்களும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளன. தனிநபர் ஒவ்வொருவரிடமும் இணையதளம் வழியாகப் பெறப்படும் தகவல்கள் அனைத்துக்கும் இனி அவர்களது ஒப்புதலைப் பெற்று, எதற்காகப் பெறப் படுகிறதோ அதைத் தெரிவித்து, அதற்கு மட்டும்தான் அந்தத் தகவலை நிறுவனம் பயன்படுத்த வேண்டும்; வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால் எந்த ஒரு தனிநபரும் தரவுப் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் கொடுக்கலாம் என்றும் சொல்லப் பட்டுள்ளது. ஆனால், இதில் கவலை அளிக்கக்கூடியது இந்த ஆணையம் தன்னாட்சி உடையது அல்ல. இதில் நியமிக்கப்படுபவர்களை மத்திய அரசுதான் முடிவு செய்யும்.
  • பல்லாயிரக்கணக்கான புகார்கள் வந்தால் எந்தப் புகார்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்? இந்த முழு அதிகாரத்தையும் மத்திய அரசு நியமிக்கும் அதிகாரிகளின் கைகளில் குவிப்பதன் மூலம், தனக்குப் பிடிக்காதவர்கள், தன்னை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் அரசு நடத்தும் தாக்குதலுக்கு மேலும் வழிவகுக்கும் என்பது ஒரு முக்கியக் கவலை.
  • இந்த ஆணையம் ரூ.250 கோடி வரை விதிமீறும் நிறுவனங்கள் மீது அபராதமாக விதிக்க முடியும். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அரசு நிறுவனங்கள் அனைத்துக்கும் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆதார் விவரங்கள் திருட்டுப் போனால் அரசைக் கேள்வி கேட்க முடியாது.
  • ஒரு சட்டம் சரியாகச் செயல்பட மக்கள் கையில் அதிகாரத்தைக் கொண்டுசேர்க்க வேண்டும். ஆனால், இந்த மசோதா அரசின் அதிகாரக் குவியலுக்கு வழிவகுக்கிறது. ஏற்கெனவே, மக்கள் கையில் அதிகாரமாக உள்ள தகவல் அறியும் உரிமையைப் பறிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இந்த மசோதா சட்டமாகிவிட்டால், வெளிப்படைத் தன்மையில் இந்தியா கண்ட முன்னேற்றம் 20 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (11– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories