TNPSC Thervupettagam

தற்காலிக நீதிபதி நியமனம் வரவேற்கப்பட வேண்டும்!

February 5 , 2025 2 hrs 0 min 13 0

தற்காலிக நீதிபதி நியமனம் வரவேற்கப்பட வேண்டும்!

  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகளைத் தற்காலிக நீதிபதிகளாக உயர் நீதிமன்றங்கள் பணியமர்த்திக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பிரச்சினைக்கு நீதிமன்றத்தில் தீர்வு கிடைக்கப் பல ஆண்டுகள் அலைய வேண்டியிருக்கும் என்கிற அவநம்பிக்கை இந்தியச் சமூகத்தின் ஆழ்மனத்தில் பதிந்துவிட்டது என்றே கூறலாம்.
  • நீதிமன்றங்களில் பல்வேறு பொறுப்புகளுக்கான காலிப் பணியிடங்கள் அப்படியே தொடர்வது இதற்கு முக்கியக் காரணம். குறிப்பாக, நீதிபதிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லாதது வழக்குகளைத் தேங்கவைக்கிறது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 18 லட்சம் குற்றவியல் வழக்குகளும் 44 லட்சம் சிவில் வழக்குகளுமாக 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • இந்தச் சிக்கலுக்கு ஒரு தீர்வாக, 2021இல் உச்ச நீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, தற்காலிக நீதிபதிகளை நியமிப்பதற்கான சில வழிகாட்டல்களை ஒரு தீர்ப்பில் வழங்கினார். இந்திய அரசமைப்பு(15ஆம் திருத்தம்) சட்டம்,1963இன் 224ஏ பிரிவு இவ்வகை நியமனங்களைச் சாத்தியப்படுத்துகிறது எனவும் ஓய்வுபெற்ற நீதிபதிகளை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், இடைக்கால அல்லது குறிப்பிட்ட நோக்கத்துக்கான நீதிபதியாக (ad hoc judge) சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு நியமித்துக்கொள்ளலாம் எனவும் அப்போது கூறப்பட்டது. பணியில் இருக்கும் நீதிபதியின் விசாரணை அதிகாரம், சிறப்புரிமை ஆகியவை தற்காலிக நீதிபதிக்கும் வழங்கப்படவும் 224ஏ வழிவகை செய்கிறது.
  • இந்த வழிகாட்டல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆன பின்னரும், சூழல் மாறவில்லை. உயர் நீதிமன்றங்களில் ஏறக்குறைய 40 சதவீதப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், பல குற்றவியல் வழக்குகள் தேங்கி நிற்பது தொடர்கதையாகவே உள்ளது. இந்நிலையில், குறிப்பிட்டதொரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு, 2021 தீர்ப்பைச் சுட்டிக்காட்டித் தற்காலிக நீதிபதி நியமனத்தை வலியுறுத்தியிருக்கிறது.
  • தற்காலிக நீதிபதிகளை நியமிப்பதில் இருந்த பல நிபந்தனைகளை இந்த அமர்வு தளர்த்தவும் செய்திருக்கிறது. உயர் நீதிமன்றத்துக்கான ஒதுக்கீட்டில் 20 சதவீதத்துக்கும் அதிகமாகக் காலிப்பணியிடங்கள் இருக்கும்போது, ஒதுக்கீட்டில் 10 சதவீதத்துக்கு மிகாதபடி கிரிமினல் வழக்குகளில் மட்டும் தற்காலிக நீதிபதிகள் நியமிக்கப்படலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • நாள்பட்ட வழக்குகளைத் தீர்க்கவும் நீதிமன்ற அமைப்பின் மீதான சராசரிக் குடிமகனின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் இந்த வழிகாட்டல் உதவும். எனினும், இதை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது. இரு தரப்பிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி புரியும் நிலையில், இந்த வழிகாட்டல் மறைமுகமாகப் புறக்கணிக்கப்படுவதற்குச் சாத்தியம் இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.
  • நீதிமன்ற சம்பிரதாயங்கள், காவல் துறையின் செயல்பாடுகள், அத்துறையிலும் உள்ள காலிப்பணியிடங்கள், சட்டத்தில் இருக்கும் போதாமைகள், வாதிக்கோ பிரதிவாதிக்கோ இருக்கும் அதீதத் தன்முனைப்பு, சமரசத்தின் மீதான நாட்டத்தைக் குறைக்கும் வகையிலான சமூகச்சூழல் போன்றவையும் வழக்குகளின் தேக்கத்தின் பின்புலத்தில் உள்ளன. நீண்ட காலம் தேவைப்பட்டாலும் இவையும் சரிசெய்யப்பட வேண்டும். வழக்கமான நீதிபதிகள் நியமனமும் தற்காலிக நீதிபதி முறையால் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  • ஆண்டுக்கணக்கில் வழக்கு நீடிக்கும் நிலையில், ஏழ்மையான குடும்பங்கள்கூட, வழக்கு நடத்தத் தங்கள் மொத்த வாழ்வாதாரத்தையும் இழக்கும் அவலம் நீடிக்கக் கூடாது. தற்காலிக நீதிபதிகளுக்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டலை மத்திய - மாநில ஆட்சியாளர்கள் நன்கு பயன்படுத்தி, குடிமக்கள் மீதான தங்களது அக்கறையை நிலைநாட்ட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories