TNPSC Thervupettagam

தற்கொலைகளைத் தடுப்பது எப்படி?

July 2 , 2020 1664 days 1460 0
  • சில நாட்களுக்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி ஒருவர், தன்னிடமிருந்து தனது குடும்ப நபர்களுக்கு கரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
  • இத்தனைக்கும் அவருக்கு கரோனா தொற்று இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரை நான்கு பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
  • இதில் மூன்று பேருக்குத் தொற்று உறுதியாகி மருத்துவமனையில் இருந்தபோதே தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்; இதில் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல அல்வா கடை உரிமையாளரும் அடக்கம்.
  • பெங்களூருவில் ஒரு காவல் துறை அதிகாரி தொற்று உறுதியானதைக் கேள்விப்பட்டவுடன் தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே கரோனா நோய்த்தொற்றின் விளைவாகத் தற்கொலைகள் செய்துகொள்வது தொடர்ச்சியாக நடந்துவருகிறது.
  • இந்தத் தற்கொலைகளைத் தடுப்பதில் நாம் முனைப்புக் காட்டாவிட்டால் இதுவும் கரோனா போலவே ஒரு நெருக்கடியாக மாறிவிடக் கூடும்.

தனிமைப்படுத்துதல் ஏற்படுத்தும் மனவுளைச்சல்

  • கரோனா தொற்று ஒருவருக்கு உறுதியானவுடன் அவரின் வீடு உடனடியாகத் தனிமைப்படுத்தப்படுகிறது.
  • அந்த வீட்டைச் சுற்றிலும் தகரத் தடுப்புகள் போடப்பட்டு, நோட்டீஸ் ஒட்டப்படுகிறது.
  • இதன் விளைவாக, அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் அந்த வீட்டை ஒருவித அச்சத்துடனேயே கடந்துசெல்கின்றனர். அந்த வீட்டில் உள்ளவர்களை அருவருப்பான மனநிலையுடன் பார்ப்பதும் நடக்கிறது.
  • ஒருவேளை, அது வாடகை வீடாக இருந்தால் வீட்டைக் காலிசெய்ய நிர்ப்பந்தித்த சம்பவங்களும் உண்டு. அது மட்டுமில்லாமல், அந்த வீட்டுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தருவதற்குக்கூட யாரும் முன்வருவதில்லை. அந்த வீட்டிலுள்ள எல்லோரையும் – நோயால் பாதிக்கப்படாதவர்களைக்கூட – இதே வகையில்தான் நடத்துகிறார்கள்.
  • தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் பொதுமக்கள் காட்டும் இந்தப் பாகுபாடு நோயுற்றவர்களுக்கு மிகுந்த மனவுளைச்சலைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.
  • அவர்கள் இந்தச் சமூகத்தால் கைவிடப்பட்ட மனநிலையையும் அவநம்பிக்கையையும் அடைகிறார்கள். இந்த மனநிலைதான் சில பேரைத் தற்கொலைக்குத் தூண்டுவதாக இருக்கிறது.

நீடித்த ஊரடங்கும் பொருளாதார நெருக்கடிகளும்

  • உலகம் முழுவதுமே ஊரடங்கின் விளைவாக நிறைய பேர் வேலையை இழந்திருக்கிறார்கள்.
  • கணிசமானவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திடீர் வேலையிழப்புகளும் பொருளாதார நெருக்கடிகளும் எதிர்காலத்தின் மீது ஒரு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
  • இந்த நிலை இன்னும் எவ்வளவு நாட்கள் தொடரும் என்பது தெரியாத சூழலில், இதிலிருந்து மீள்வதற்கான எந்தத் தெளிவான அறிகுறிகளும் இல்லாத நிலையானது மிகப் பெரிய உளவியல் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.
  • இதுவும் தற்கொலை எண்ணங்களுக்கு மிக முக்கியக் காரணம்.

நோய் குறித்த அச்சம், குழப்பம், தெளிவின்மை

  • தொற்றுக்கு ஆளானவர்கள் நோய் குறித்துக் கிடைக்கும் பல்வேறு தகவல்களால் குழப்பமடைகிறார்கள்.
  • நோய் குறித்த உண்மையான சித்திரம் அவர்களுக்கு விளங்குவதில்லை. பல்வேறு முரண்பட்ட தகவல்கள் பல வகைகளில் அவர்களை வந்துசேர்கின்றன.
  • எவ்வளவு நாள் சிகிச்சை, கண்காணிப்பு, எப்போது டிஸ்சார்ஜ், டிஸ்சார்ஜுக்குப் பிறகு நோயைப் பரப்புவதற்கான வாய்ப்பு போன்றவை பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லப்படுவதில்லை.
  • நாளுக்கு நாள் மாறும் அரசின் வழிகாட்டுதல்கள் இன்னும் குழப்பமடையச் செய்கின்றன. திடீரென அதிகரிக்கும் இறப்பின் எண்ணிக்கைகள் இந்தக் குழப்பத்துடன் சேர்த்து பதற்றத்தையும் அதிகரிக்கிறது.
  • அதனால், அரசு இந்த நோய் குறித்த அத்தனை சந்தேகங்களையும் பதற்றத்தையும் போக்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
  • சிகிச்சை பெறுபவர்களுக்கு அந்தச் சிகிச்சை குறித்த, நோய் குறித்த அத்தனை தகவல்களும் முறையாகத் தினமும் சொல்ல வேண்டும். இதற்காகத் தனியாக ஆலோசகர்களைக்கூட நியமிக்கலாம்.

சமூகமாக ஒன்றிணைவோம்

  • ஒரு சமூகமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அரவணைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
  • சமூகத்தின் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நோயைப் பொறுத்தவரை அதற்கு எந்தப் பாகுபாடும் கிடையாது. நம் எல்லோருக்குமே கரோனா வருவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றன.
  • எப்போது வரப்போகிறது என்பதுதான் கேள்வி. அதனால், தொற்று வந்தவர்களை எந்தவித நெருக்கடிகளும் கொடுக்காமல் கண்ணியமாக நாம் நடத்த வேண்டும்.
  • ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றாக நின்று இந்த நோயை எதிர்த்தால்தான் நாம் முழுமையாக இதிலிருந்து மீள முடியும்.
  • நோய் வந்தவர், வராதவர், நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர், இல்லாதவர் எனப் பல குழுக்களாகச் சிதறி நமக்குள்ளேயே பாகுபாடுகளைக் கொண்டிருந்தால் எப்படி இந்த நோயை வலுவாக எதிர்க்க முடியும்?
  • அதனால், தொற்று வந்தவர்களுக்கு ஒரு பாதுகாப்புணர்வை, ஒரு நம்பிக்கையை ஒரு சமூகமாக நாம் கொடுக்க வேண்டும்.
  • அதேபோல, கரோனா தொற்று வந்தவரும்கூட இந்த நோய் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களையெல்லாம் படிப்பதைத் தவிர்த்து, அதிகாரபூர்வமான தகவல்களை மட்டும் பாருங்கள்.
  • அதில் நாம் நம்பிக்கை கொள்வதற்குப் பல செய்திகள் இருக்கின்றன. முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய மருந்துகள் பரிசீலனையில் இருக்கின்றன.
  • இந்த நோயை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாகச் சுருக்கிப் பார்க்க வேண்டாம். இது ஒட்டுமொத்த உலகத்துக்கான பிரச்சினை.
  • சரியான உணவு, சரியான தூக்கம், தினமும் உடற்பயிற்சி, வாசிப்பு, நண்பர்களுடனும் உறவினர்களுடனும் உரையாடல் எனத் தினமும் உங்களது தனிமைப்படுத்தல் நாட்களைத் திட்டமிடுங்கள்.
  • நோய் குறித்த சந்தேகங்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
  • உங்களது மனவுளைச்சல்களையும், எதிர்காலத்தின் மீதான அச்சத்தையும் நெருங்கியவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். ஏனென்றால், இதிலிருந்து நீங்கள் மீண்டுவருவது உங்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருவதாக இருக்கும்!

 

நன்றி: தி இந்து (02-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories