TNPSC Thervupettagam

தற்கொலைத் தடுப்பு: சமூகத்தின் கடமை என்ன?

September 10 , 2024 128 days 161 0

தற்கொலைத் தடுப்பு: சமூகத்தின் கடமை என்ன?

  • தற்​கொலைகள் குறித்து உரையாடுவதே தற்கொலைகளைத் தூண்டும் என்கிற கருத்து பலரிடம் இருக்​கிறது. தற்கொலைகள் குறித்து நாம் வெளிப்​படையாக உரையாடாமல் இருப்​ப​தற்கு இந்த எண்ணமே காரணம். இதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை. தற்கொலைகள் குறித்து - எந்த முன்முடிவும் இல்லாமல் ஒரு சமூகமாக வெளிப்​படையாக உரையாட வேண்டும். உலகச் சுகாதார நிறுவனம் அதைத்தான் ஊக்கு​விக்​கிறது. அந்த வகையில், தற்கொலை எண்ணங்​களி​லிருந்து விடுபடுவதன் அவசியத்தை நாம் பேசியே ஆக வேண்டும்​!

அதிகரிக்கும் தற்கொலைகள்:

  • 2003 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10 அன்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாள் அனுசரிக்​கப்​படு​கிறது. அதிகரித்து​வரும் தற்கொலைகளைத் தடுப்​பதில் வெவ்வேறு வழிமுறை​களும் செயல்​பாடு​களும் கடந்த 20 ஆண்டுகளாக உறுதி​யாகக் கடைப்​பிடிக்​கப்​பட்டு வந்தா​லும், தற்கொலைகளின் எண்ணிக்கை கவலைக்​குரிய வகையில் தொடர்ந்து அதிகரித்து​வரு​கிறது.
  • உலகச் சுகாதார நிறுவனத்தின் வழிகாட்​டலுடன் அனைத்து நாடுகளும் தற்கொலைகளைத் தடுப்​ப​தற்கான பல்வேறு செயல்​திட்​டங்களை வகுத்துப் பின்பற்றிவரும் நிலையில், அதிகரித்து​வரும் தற்கொலைகளைத் தடுக்க முடியாமல் போவதற்கு என்ன காரணம்? தற்கொலை என்பது ஒரு சிக்கலான பிரச்​சினை. அதற்கான தீர்வுமே கூடச் சிக்கலான ஒன்று​தான். தற்கொலைகளைத் தடுப்​பதில் இதுவரை மிக எளிமையான தீர்வுகளே முன்வைக்​கப்​பட்​டிருக்​கின்றன.
  • உதாரணமாக, இந்தியாவில் அதிகரித்து​வரும் விவசா​யிகளின் தற்கொலைகளுக்குத் தீர்வாக முன்வைக்​கப்​பட்டது என்ன தெரியுமா? பூச்சிமருந்​துகளை விவசா​யிகளிட​மிருந்து ஒளித்து​வைப்பது. விவசா​யிகளின் தற்கொலை என்பது மிகவும் ஆழமான சமூக, பொருளா​தாரப் பிரச்​சினை. ஆனால், அதற்குத் தீர்வாக முன்வைக்​கப்​பட்டது எந்தவித சமூக, பொருளாதார, அரசியல் பார்வையும் இல்லாத மிகவும் மேம்போக்கான வழிமுறை.
  • தற்கொலைகள் தடுக்க முடியாமல் அதிகரித்து​வரு​வதற்கு, அதன் மீதான ஆழமான பார்வை சர்வதேச அமைப்பு​களிடம் இல்லாமல் இருப்பதே முதன்​மையான காரணம். இதுவரை தற்கொலை குறித்து நாம் கொண்டிருக்கும் இந்த மேலோட்டமான பார்வை​களை​யெல்லாம் உதறிவிட்டு, உண்மையில் தற்கொலைகள் நடப்ப​தற்கான சமூக, பொருளாதார, உளவியல் காரணங்களை உள்ளது உள்ளபடியே புரிந்​து​கொண்டு, அதற்கான தீர்வையும் இந்த மூன்று பரிமாணங்​களிலும் முன்வைப்பது மட்டுமே தற்கொலைகளைத் தடுப்​ப​தற்கான முழுமையான வழி.

செயல்​திட்டம் அவசியம்:

  • தற்கொலைகள் எல்லாக் காலத்​திலும் இருந்​திருக்​கின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டு​களுக்கான தற்கொலைகளின் புள்ளி​விவரங்​களைப் பார்க்​கும்​போது, தற்கொலைகள் சமீப காலங்​களில் புதிய வடிவத்தை அடைந்​திருப்​பதைப் புரிந்​து​கொள்ள முடியும். உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஏழு லட்சத்​துக்கும் மேற்பட்ட தற்கொலைகள் நடக்கின்றன. முன்பெல்லாம் தற்கொலைகள் நடுத்தர வயதினரிடையேதான் அதிகமாக இருந்தது. தற்போது மிக அதிகமான தற்கொலைகள் 15இல் இருந்து 29 வயதில் இருப்​போரிடையேதான் நடக்கின்றன. குறிப்பாக, மாணவர்​களின் தற்கொலைகள்தான் அதிகமாக உள்ளன.
  • 70 சதவீதத்​துக்கும் மேற்பட்ட தற்கொலைகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளில்தான் நடக்கின்றன. தனிநபரின் மனநலச் சீர்கேடு​களைவிட, வேலையிழப்பு, ஓய்வற்ற பணி நேரம், அதிகரிக்கும் பாகுபாடுகள், போதைப் பொருள் பழக்கம், புலம்​பெயர்வு தொடர்பான பிரச்​சினைகள், இயற்கைப் பேரிடர்கள் போன்ற சமூக, பொருளா​தாரக் காரணி​கள்தான் வளரும் நாடுகளில் தற்கொலைகளுக்கு முதன்​மையான காரணிகளாக இருக்​கின்றன.
  • வளரும் நாடுகளில், தற்கொலைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்​தவரை, இந்தப் புள்ளி​விவரங்​களைக் கருத்தில் கொண்டு, இவற்றுக்கான தீர்வுகளை உள்ளடக்கிக் கொண்டு​வரப்​படும் செயல் திட்டங்களே முழுமை​யானதாக இருக்​கும். மாறாகத் தற்கொலைகள் மீதான நமது வழமையான சிந்தனை​களின்படி, செயல்​திட்​டங்​களைக் கொண்டு​வந்தால் அதனால் எந்தப் பயனும் ஏற்படாது.

மனமாற்றம் தேவை:

  • தற்கொலைகள் தொடர்பாக நம்மிடம் இருக்கும் தவறான சிந்தனை​களைக் கட்டுடைப்பது முதலில் அவசியம். தற்கொலை என்பது தனிப்பட்ட ஒருவரின் பலவீனம் எனப் பொதுவான கருத்து உண்டு. அது தவறு. அப்படி நினைத்தால் இதன் பின்னால் உள்ள மற்ற பிரச்​சினைகளை அலட்சியம் செய்ய நேரிடும். ஒவ்வொரு தற்கொலைக்கும் பின்னால் பல்வேறு சமூக, பொருளாதார, உளவியல் காரணங்கள் இருக்​கின்றன.
  • தற்கொலைகளைப் பொதுமைப்​படுத்த முடியாது. சில தற்கொலைகள் முழுக்க முழுக்கச் சமூக அவலங்​களின் விளைவாக நடப்பவை. சில தற்கொலைகள் முழுக்க முழுக்க மனநலச் சீர்கேடு​களினால் நடப்பவை. பெரும்​பாலான தற்கொலைகள் இவை இரண்டின் விளைவினாலும் நடப்பவை. சரி, உளவியல் ஆலோசனைகள் கொடுப்​பதால் தற்கொலைகளை முழுமை​யாகத் தடுத்துவிட முடியும்? இல்லை.
  • உளவியல் ஆலோசனை ஒரு பிரச்சினை குறித்துத் தனிநபருக்கு இருக்​கக்​கூடிய எதிர்​மறையான பார்வையை மாற்ற மட்டுமே உதவுகிறது. ஆனால், அது மட்டுமே தீர்வல்ல. உதாரணத்​துக்கு, பல்வேறு தேர்வுகள் மாணவர்​களுக்கு நெருக்​கடியைக் கொடுக்​கும்​போது, மாணவர்​களின் இந்த நெருக்​கடியைக் குறைக்கும் செயல்​திட்​டங்களை அரசு வகுக்க வேண்டும். அதுதான் முக்கியம். அதனுடன் உளவியல் ஆலோசனை​களையும் கொடுக்​கலாமே தவிர, மாணவர்​களுக்​குள்ள நெருக்​கடியைக் குறைக்க எந்தச் செயல்​திட்​டங்​களும் இல்லாமல் வெறும் உளவியல் ஆலோசனை​களின் வழி மட்டுமே அனைத்துத் தற்கொலைகளையும் தடுத்துவிட முடியாது.
  • அதேபோல உங்களுக்கு நெருக்​க​மானவர்களில் யாராவது தற்கொலை எண்ணத்​துடன் இருக்​கிறார் எனத் தோன்றினால், அவரிடம் இது குறித்து உரையாடுவது அவசியம். இப்படிப்பட்ட உரையாடல்​கள்தான் தற்கொலைக்கான மனநிலையை மாற்று​வதில் உதவிகரமாக இருக்​கும்.

மாணவர்​களைக் காப்பது எப்படி?

  • மாணவர்​களின் தற்கொலைகளைப் பொறுத்​தவரை, இரண்டு முக்கியமான மனநிலைகள்தான் காரணமாக இருக்​கின்றன. ஒன்று, மிகவும் தனிமையாக உணர்வது; இரண்டாவது, மற்றவர்​களுக்குப் பாரமாக இருப்பதாக நினைப்பது. இந்த இரண்டு எண்ணங்களே மாணவர்​களைத் தற்கொலையை நோக்கி உந்துகின்றன.
  • இந்த மனநிலையில் இருந்து வெளிவர வேண்டு​மென்றால் அல்லது இந்த மனநிலை வராமல் இருக்க வேண்டு​மென்​றால், மாணவர்கள் ஒரு சமூகமாகத் தங்களை உணர வேண்டும். மற்றவர்​களுக்குப் பயனுள்ள வகையில் தங்களது நடவடிக்கைகளை அமைத்​துக்​கொள்ள வேண்டும்.
  • தங்களைச் சுற்றி நல்ல சமூகப் பிணைப்பை ஏற்படுத்​திக்​கொள்ள வேண்டும். சமூக அவலங்​களுக்கு, பாகுபாடு​களுக்கு, உரிமை​களுக்​காகப் போராடும் மனநிலையை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். சமூகத்தோடு அவர்களின் பிணைப்பு மிகவும் வலுவாக இருக்​கும்போது அவர்களின் தனிப்பட்ட நெருக்​கடிகள் பெரிதாகத் தெரியாது. தனிப்பட்ட தோல்வி​களுக்​காகவோ, இயலாமை​களுக்​காகவோ மனமுடைந்து தங்கள் மீது பழிபோட்டுக்​கொள்ளும் மனநிலை​யி​லிருந்து அவர்கள் வெளியேறுவதன் மூலம், சமூகத்​துடன் இணைந்​திருப்​பதும் சமூகத்​துக்காக வாழ்வதும் சாத்தி​ய​மாகும்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

  • அரசின் பல்வேறு கொள்கை முடிவுகள், நிலைப்​பாடுகள், சட்ட திட்டங்கள் தனிமனிதர்​களின் வாழ்க்கையோடு நேரடித் தொடர்​புடையவை. அரசின் எதிர்​மறையான நிலைப்​பாடு​களினால் அந்தச் சமூகத்தின் அத்தனை பேரும் பாதிக்​கப்​பட்​டாலும், விளிம்பு நிலையில் இருப்​பவர்​களையே அது முதலில் பாதிக்​கிறது.
  • அவர்களுக்​குத்தான் அதிகப் பாதிப்பும் ஏற்படும். அதனால், அவர்களைப் பாதுகாப்பதை அரசு முதன்மை நோக்க​மாகக் கொள்ள வேண்டும். அதிகரிக்கும் தற்கொலைகளுக்கும் அரசின் கொள்கை முடிவு​களுக்கும் உள்ள தொடர்பை நேர்மையாக ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்க்கும் மனநிலையை ஆட்சி​யாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.
  • ஒரு சமூகம் தன்னளவில் எப்படி அதன் மக்களின் மீதும் அவர்களின் நல்வாழ்க்கையின் மீதும் அக்கறை கொண்டிருக்​கிறது என்பதைக் காட்டும் கண்ணாடி தற்கொலைகள். அதனால், தற்கொலைகளைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்​கும், ஒரு சிவில் சமூகமாக நம் அனைவருக்கும் இருக்​கிறது. தற்கொலைகள் இல்லாத சமூகத்தைக் கட்டி​யெழுப்பத் தேவையான செங்கல் நம் ஒவ்வொரு​வரின் கையிலும் இருக்​கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்​தினால்தான் தற்கொலைகளைத் தடுப்பது சாத்திய​மாகும்!
  • செப்​டம்பர் 10: உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories