- உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினம் இன்று (செப்.10) கடைப்பிடிக்கப்படுகிறது. உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய பிரச்னை தற்கொலை. ஓர் உயிர் உருவாவது என்பது போற்றுதற்குரிய செயலாகும். பிள்ளைப்பேறு என்பது பெற்றோர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரமாகும். அப்படி கிடைத்த அற்புதமான உயிரை அற்பக் காரணங்களுக்காக மாய்த்துக் கொள்வது வேதனை அளிப்பதாகும்.
தற்கொலை
- இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 1,35,000 நபர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது உலகின் தற்கொலை செய்து கொள்வோர் சதவீதத்தில் 17 சதவீதம் ஆகும். இந்தியாவில் தற்கொலை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது என்பது மற்றொரு அதிர்ச்சியான விஷயம். ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் 2 மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் குழந்தைகள் மீது திணிக்கப்படும் எதிர்பார்ப்புகள் ஒரு முதன்மையான காரணமாகும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களது ஆசைகளையும், கருத்துகளையும் குழந்தைகள் மீது காட்டுகின்ற அளவுகடந்த எதிர்பார்ப்பு அவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது.
- இதில் பெரும்பாலான குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாததாலும், தாங்கள் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால்கூட தற்கொலை செய்து கொள்கின்றனர்.
- ஒரு சிலருக்குப் பிடிக்காத பள்ளி, பிடிக்காத கல்லூரி, விருப்பமில்லாத படிப்பு இவற்றால் மனச் சோர்வு ஏற்படுகிறது. அதன் விளைவு, தற்கொலை எண்ணங்கள் தோன்றக் காரணமாக அமைகின்றன.
ஒப்பீடு
- ஒரு சில குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பீடு செய்யும்போது மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நன்றாகப் படிக்கும் குழந்தை மீது மட்டும் பாசத்தைக் காட்டியும் குறைவான மதிப்பெண் பெற்ற குழந்தைகளை சில பெற்றோர் வெறுக்கவும் செய்கின்றனர். ஆனால், பலவீனமான குழந்தைகளுக்குத்தான் பாசம் அதிகமாகத் தேவைப்படுகிறது. படிப்பை வைத்து பாசத்தைச் செலுத்துவது குடும்பத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
- ஒரு சில குழந்தைகள் குடும்பச் சூழ்நிலையாலும், சமுதாயப் புறக்கணிப்புகளாலும் தாழ்வு மனப்பான்மையாலும் அவதிப்படுவர். மன நோயால் பாதிக்கப்பட்டோர், போதைப்பொருள் பழக்கம் கொண்டவர்கள், குடும்பத்தில் தற்கொலை பின்னணி உள்ளவர்கள், தேவையின்றி உணர்ச்சிவசப்படுபவர்கள், பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சுயமரியாதையில் அவமதிப்பு ஏற்பட்டவர்கள், பெற்றோர்களிடையே தினசரி ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை வாய்ப்புள்ளவர்களாகக் கருதப்பட வேண்டும்.
- எந்த நிகழ்வையும் இவர்கள் தனக்கு மட்டுமே நிகழ்ந்ததாக விரக்தியடைவார்கள். சுய பச்சாதாபத்தை தேடிக்கொள்ள முயற்சிப்பார்கள். சிறிய பிரச்னைக்குக்கூட சிறகொடிந்து விடுவார்கள். இவர்கள் மூளையில் சில ரசாயன உற்பத்தி குறைவாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.
- தற்கொலை முயற்சியில் ஒரு முறை ஈடுபட்ட ஒருவர், மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்கொலை எண்ணமுடையவர்கள், தனிமையில் இருக்கும்போது தனக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்தி தற்கொலைக்கு பெரும்பாலும் பின்வரும் முறைகளைக் கையாள்வார்கள். தூக்கு மாட்டிக் கொள்ளுதல், விஷம் அருந்துதல், மருந்துப் பொருள்களைச் சாப்பிடுதல், விவசாய வீடுகளில் வைக்கப்பட்டுள்ள பூச்சி மருந்துகளைச் சாப்பிடுதல், வாகனங்கள் முன்பு விழுந்து தற்கொலை செய்தல் ஆயுதங்களால் தன்னைத் தானே தண்டித்துக் கொள்ளுதல் என முயற்சிக்கின்றனர்.
தடுத்தல்
- தற்கொலையைத் தடுப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. தற்கொலை எண்ணம் கொண்டவர்களை தீவிரமான மனநல ஆலோசனைக்கு உட்படுத்தி அவர்களிடமிருக்கும் எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். மேலும், மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். பிரச்னைகளுக்கான காரணங்களை அகற்றினாலே அவர்கள் இயல்பு நிலையை அடைவர்.
- பெரும்பாலும் இது வற்புறுத்தலால் ஏற்படும் விளைவாகும். எனவே, வற்புறுத்தலைத் தவிர்க்க வேண்டும். உலக அளவில் சாதித்த மனிதர்களுடைய வாழ்க்கைச் சரித்திரங்களை பாதிப்புள்ளோரிடம் கூற வேண்டும். அவர்கள் சந்தித்த சோதனைகளுக்கு முன்பு நமது சோதனைகள் பெரிதல்ல என்பதை உணர்த்த வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்தால் அல்லது சாதிக்க முடியாமல் போனவர்களைக் குத்திக் காட்டுவதோ, கடிந்து கொள்வதோ கூடாது; ஏனெனில், அது தன்னம்பிக்கையை தகர்த்து விடும்.
- ஒருவரை அவமானப்படுத்தி அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வர முடியாது. நம்பிக்கையூட்டி அவர்களை ஆசுவாசப்படுத்துவதன் மூலம்தான் அவர்கள் நேர்மறையாக சிந்திக்கத் தொடங்குவார்கள். திறமை குறைவான நபர்களுக்கு, அவர்களுக்கு இருக்கும் பிற வாய்ப்புகளைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
- பள்ளிகளில் வித்தியாசமாக நடந்துகொள்ளும் மாணவர்களை ஆசிரியர்கள் அறிந்து, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் மனம் விட்டுப் பேச வேண்டும்.
விழிப்புணர்வு
- பள்ளிகளில் தற்கொலைத் தடுப்புக்கான வழிகாட்டுதல் மையம் அமைக்குமாறு தற்போது பள்ளிக் கல்வித் துறை வலியுறுத்தி வருகிறது. வெளிநாடுகளைப் போல அடிக்கடி மனநல மருத்துவர்களைக் கண்டறிந்து சந்தித்து பிரச்னைகளைப் பேசுகிற பழக்கம் இருந்தால் மிகவும் நல்லது. மேலும், குழந்தைகளை வளர்க்கும்போதே சூழ்நிலைக்கேற்றவாறு வாழுதல், தன்னம்பிக்கையுடன் செயல்படுதல், சிக்கல்களை எதிர்கொள்ளுதல், தேவை ஏற்படின் பிறர் உதவியை நாடுதல் போன்ற பண்புகளை விதைக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு ஏமாற்றங்களையும், தோல்விகளையும் தாங்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் நினைத்தவுடன் அந்தச் செயல் நடக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் போக்க வேண்டும். தற்கொலை என்பது ஒரு சமூகக் குற்றம் என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
- நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை விதைக்க வேண்டும். எப்போதும் அவர்களை தனிமையில் இருக்க அனுமதிக்கக் கூடாது. அவர்களோடு தினமும் மனம் விட்டுப் பேசவேண்டும். மொத்தத்தில் அவர்களுக்கு சாதிக்கும் உணர்வை ஏற்படுத்தி, வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்த்த வேண்டும்.
நன்றி: தினமணி (10-09-2019)