TNPSC Thervupettagam

தற்சார்புள்ள பசுமைக் கிராமங்களை இலக்காகக் கொள்ளுங்கள்!

February 20 , 2020 1792 days 1545 0
  • விவசாயம் தொடர்பாக அரசுத் தரப்பிலும் விவசாயிகள் தரப்பிலும் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய ஆக்கபூர்வமான திட்டங்களைப் பற்றி தொடர்ந்து விவாதித்துவருபவர் ஆறுபாதி ப.கல்யாணம்.
  • வேளாண் துறை சார்ந்த தகவல்களின் பெருங்களஞ்சியம். காவிரிப் படுகை மாவட்ட விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலரும், தற்சார்ப்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான அவரிடம் பாதுகாக்கப்பட்ட வேளாண் பொருளாதார மண்டலம் குறித்து உரையாடியதிலிருந்து...

வேளாண் மண்டலத்தின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?

  • காவிரிப் படுகை விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்ற, தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்புக்குரியது.
  • அமையவிருக்கும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமானது, சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலமாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் விருப்பமும்.
  • வேளாண் மண்டலத்தில் விளைகிற எந்தப் பொருளும் அப்படியே சந்தைக்குப் போகாமல் மதிப்புக் கூட்டப்பட்டுச் செல்ல வேண்டும்.
  • இதற்கு வேளாண் மண்டலம் முழுவதிலும் குடிசைத் தொழில்களையும் சிறு குறு தொழில்களையும் வளர்த்தெடுக்க வேண்டும்.
  • அப்போதுதான் தற்சார்புள்ள கிராமங்களை உருவாக்க முடியும். அதுதான், வேளாண் மண்டலத்தின் நோக்கமாகவும் இருக்க வேண்டும்.
  • விவசாயத் துறையுடன் இணைந்து சிறு குறு தொழில்களை வளர்த்தெடுத்தோம் என்றால், லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். விவசாயத் துறையில் மட்டும்தான் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
  • விவசாயத்தையே ஆதாரமாகக் கொண்டிருக்கும் காவிரிப் படுகையில் நிலையான, நீடித்த வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றால், விவசாயம் சார்ந்த சிறு குறு தொழில்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

விவசாயிகளின் அனுபவ அறிவை எப்படி அரசு பயன்படுத்தலாம்?

  • விவசாயிகளின் குழுக்களை இன்னும் பலப்படுத்த வேண்டும். அரசு மேலிருந்து கீழே திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் திட்டம் தீட்டுவதில் விவசாயிகளின் பங்கேற்பையும் பெற வேண்டும்.
  • விவசாயிகளின் அனுபவ அறிவையும் அவர்களின் தேவைகளையும் அறிந்துகொள்ளும் வகையில் ‘விவசாயிகளின் அறிவு வங்கி’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டும். அரசு எந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னாலும் அந்த அமைப்புடன் ஆலோசிக்க வேண்டும்.

பண்ணைக் குட்டைகள் குறித்து

  • ஒவ்வொரு ஊரிலும் குறைந்தபட்சம் ஐந்து சதவீதப் பரப்பிலாவது பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். சிறு குறு விவசாயிகள் தங்களுடைய விளைநிலத்தின் அளவு குறைந்துவிடக்கூடும் என்று அச்சப்படலாம்.
  • ஆனால், பண்ணைக்குட்டைகளை உருவாக்கும்போது மூன்று அடுக்குகளில் ஒரே நேரத்தில் வெவ்வேறு பயிர் வகைகளை வளர்க்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேடான அடுக்கில் நீண்ட கால மரப் பயிர்களை விளைவிக்கலாம்.
  • காவிரிப் படுகையானது லேசாகச் சரிந்துசெல்லும் தன்மை கொண்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து 100 மிமீ மழை பெய்தாலே, பயிர்கள் நீரில் மூழ்கிவிடக்கூடிய அபாயம் உள்ளது.
  • எதிர்பாராத மழையைச் சமாளிக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கவும் கடற்கரையோரங்கள் உவர் நிலமாவதைத் தடுக்கவும் பண்ணைக்குட்டைகள்தான் சரியான தீர்வு.
  • விவசாயிகள் பரிந்துரைத்த இத்திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தினார். அதை விரிவுபடுத்த வேண்டும்.

உள்கட்டமைப்பை மேம்படுத்த உங்கள் யோசனை?

  • வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறை மாவட்டமும், தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணம் மாவட்டமும் உருவாக்கப்பட வேண்டும்.
  • இது மாவட்ட, ஒன்றிய அளவில் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பாக இருக்கும். கிடப்பில் போடப்பட்டுள்ள ‘மயிலாடுதுறை - திருக்கடையூர் - தரங்கம்பாடி - திருநள்ளாறு - காரைக்கால்’ இணைப்பை விரைவுபடுத்த வேண்டும்.
  • அதனால், 213 கிமீ சுற்றுவட்ட ரயில் பாதை மூலமாகக் காவிரிப் படுகையை இணைக்க முடியும்.
  • விவசாய இடுபொருட்களையும் விளைபொருட்களையும் எடுத்துச்செல்ல இந்தப் போக்குவரத்து உள்கட்டமைப்பு மிக அவசியமானது.

வேளாண் மண்டலத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம்?

  • இந்தியா முழுவதும் 11 லட்சம் மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு நம்மிடம் புதுப்பிக்கத்தக்க வளங்கள் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • கிராமங்களிலிருந்து கிடைக்கக்கூடிய ‘பயோமாஸ்’ எனப்படும் தாவர எரிபொருள் இன்னும் சரியாக் கணக்கிடப்படவில்லை என்பது உறுதியான கருத்து.
  • ‘பயோமாஸ்’ மூலமாகவே 3 அல்லது 4 லட்சம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும்.
  • கரும்புச்சக்கை, வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டு ‘பயோமாஸ்’ தயாரிப்பதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
  • இந்தியாவில் கிடைக்கக்கூடிய கச்சா எண்ணெயில் 2%-தான் தமிழ்நாட்டில் கிடைக்கிறது. இயற்கை எரிவாயுவில் 3% மட்டும்தான் தமிழ்நாட்டில் கிடைக்கிறது. இவ்வளவு குறைவான எரிசக்திக்காகப் பசுமையான விளைநிலங்களைப் பலிகொடுப்பது அறிவார்ந்த செயலாகக் கருத முடியாது.
  • ஹைட்ரோகார்பன் திட்டங்களைக் காட்டிலும் கூடுதலான மின்னாற்றலைப் புதுப்பிக்கத்தக்க வளங்களைக் கொண்டே பெற முடியும்.
  • மோட்டார் மின் இணைப்புக்காக விவசாயிகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு சூரிய மின் சக்தியில் இயங்கக்கூடிய மோட்டார்களை வழங்க வேண்டும்.
  • முதல்கட்டமாக, வேளாண் மண்டலம் உருவாகும் காவிரிப் படுகையில் அதைப் பெரிய அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். விவசாயத் துறையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்.
  • சுதேசி தற்சார்புதான் விவசாயத்தையும் இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்கும். இந்த விஷயத்தில், நாம் ஜே.சி.குமரப்பாவை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.
  • தஞ்சை மண்ணில் பிறந்த குமரப்பாவின் சிந்தனைகள் செயல்வடிவம் பெற வேண்டும். கூடவே, காலம் கொடுத்த வாய்ப்பாக நமக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து நவீன தகவல்தொடர்பு வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நன்றி : இந்து தமிழ் திசை (20-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories