- கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் (12.01.1907), ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி, ‘யாவர் ஜனத் தலைவர்களாவார்?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அதில், ‘எவனொருவன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது, இந்த வறிய நிலையிலிருப்பதைக் கண்டு இராப்பகலாய் வருந்துகிறானோ; எவனொருவன் முப்பது கோடி இந்தியரும் வயிறார உண்பதற்கு உணவும், உடுக்க ஆடையுமின்றித் தவிக்கிறார்களே என்று மனமிரங்கிக் கண்ணீர் சொரிகிறானோ; எவனொருவன் பொது ஜனங்களுக்கு வந்த சுக துக்கங்களும், கஷ்ட நஷ்டங்களும் தனக்கு வந்ததாய் எண்ணி அநுதாபிக்கிறானோ; எவனொருவன் இவ்வகைத் துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டு தமது அரிய உயிரையுமிழக்கத் தயாராயிருக்கிறானோ, அவன் ஒருவனே ‘ஜனத் தலைவன்’; அவன் ஒருவனே ‘தேசாபிமானி’; அவன் ஒருவனே இத்தேசத்தார் வணங்கும் கண்கண்ட தெய்வம்’ என்று எழுதியிருந்தார்.
- மக்கள் தலைவர்களுக்காக பாரதி வரையறுத்த இலக்கணம் பின்னாள்களில் காமராஜருக்கு மிகச் சரியாகப் பொருந்தியது. மிக எளிமையான பின்னணியிலிருந்து வந்து, தேசம் முழுமைக்கான பெருந்தலைவராக உயர்ந்தவர் காமராஜர்.
தோல்வியிலும் துவளாத செல்வாக்கு:
- காமராஜர் 1940இல் இருந்து 1967 வரை தமிழக அரசியல் பயண வெற்றிப்படிகளில் தலைநிமிர்ந்து நடைபோட்டார். 1967 முதல் 1975 வரை தோல்விக்கு மேல் தோல்வியை அவர் சந்திக்க நேர்ந்தாலும், தமிழக மக்கள் அவரை நேசித்தார்கள்.
- 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 63,35,774 (41.38%) காங்கிரஸ் பிளவுக்குப் பின் 1971 பொதுத்தேர்தலில் அவர் சார்ந்த ஸ்தாபன காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 55,13,743 (34.99%). இந்த இரண்டு தேர்தல்களிலும் காமராஜர் எடுத்த அரசியல் நிலையைத் தமிழக மக்கள் எந்த அளவுக்கு ஆதரித்தார்கள் என்பதை இந்தத் தகவலே வெட்ட வெளிச்சமாக்கும்.
- தமிழக மக்கள் காமராஜர் மீது என்றைக்குமே அளவற்ற அன்பைப் பொழிந்தனர். அவர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களில், அவர் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர்.
- ‘தெய்வமே அழைக்கிறது!’ என்ற தலைப்பில் ‘நவசக்தி’யில் கவிஞர் கண்ணதாசன் கடிதம் எழுதுவார். உடனே காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டெழுவார்கள். 1968இல் தேவதாஸ் மறைவை யொட்டி சென்னையில் நடத்தப்பட்ட மௌன ஊர்வலத்தைப் போல், ஒரு பிரம்மாண்ட ஊர்வலம் எப்போது நடக்கும்?
- 1971 தேர்தலுக்குச் சில நாள்களுக்கு முன், சென்னைக் கடற்கரையில் காமராஜரும் ராஜாஜியும் பங்கேற்ற கூட்டத்திற்கு வந்த ஜன சமுத்திரத்தைப் போல் இன்னொரு கூட்டம் தமிழகம் என்றைக்குக் காணும்?
வரலாற்று ஆவணங்களான பேச்சுகள்:
- சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தொடர்ந்து பத்தாண்டுகள் பதவி வகித்தவர் காமராஜர். ஆரம்ப காலத்தில் மேடை நிகழ்ச்சிகளில் பேசும்போது ஓரிரு வார்த்தை மட்டுமே காமராஜர் பேசுவார். முதலமைச்சரான பின்னர்தான் மேடைகளில் அதிக நேரம் பேசும் பழக்கத்தை அவர் ஏற்படுத்திக்கொண்டார்.
- சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பலமுறை காமராஜர் பேசியிருக்கிறார். அவரது மேடைப் பேச்சுகள் வரலாற்று ஏடுகளில் ஆவணங்களாகப் பதிவாகியிருக்கின்றன. பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமெரிக்கா, இந்தியாவை அச்சுறுத்தியபோது, “அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவி இல்லாமல், சுதந்திர இந்தியா தனது சொந்தக்காலில் நிற்கும் வல்லமை படைத்தது” என்பதை விளக்கிக் கூறி, ‘மானத்தோடு வாழ்வோம்’ என்றவர் காமராஜர்.
- 1965இல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றபோது, “தமிழ்நாட்டில் இந்தி என்னை மீறி வந்துவிடுமா? வராது... வந்தால் அந்த உத்தரவைக் கிழித்து எறிவேன்” என்று பேசினார். இவையெல்லாம் காமராஜரின் மறக்க முடியாத பேருரைகள்.
- ‘ஆகட்டும் பார்க்கலாம்!’ - பதவியில் இருப்பவர்கள், பெரும் தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நாள்தோறும் ஏதாவது ஓர் உதவி கேட்டு காமராஜரிடம் வருவார்கள். தம்மை நாடி வருபவர்களிடம் அப்போதே உதவி ‘செய்ய முடியும்’, ‘செய்ய முடியாது’ என்று முகத்துக்கு நேரே உடனே சொல்லிவிட முடியாது.
- அதேபோல், செய்வதாக ஒப்புக்கொண்ட பின், அதைச் செய்ய முடியாமல் போய்விட்டால் வருத்தம் வருமே? அதேபோல் ‘முடியாது’ என்று சொன்னாலும் வருத்தப்படுவார்கள். அதனால், உதவிகேட்டு வருபவர்களிடம் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று மட்டுமே சொல்வார். அவரால் செய்யக்கூடிய உதவியாக இருந்தால் உடனே செய்துகொடுப்பார். செய்ய முடியாத உதவி என்றால், “அவர்தான் அப்போதே சொன்னாரே ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று” என உதவி கேட்டு வந்தவர்கள் ஆறுதல் அடைவார்கள்.
மருத்துவக் கல்லூரி கட்ட வழி:
- நாட்டில் நிலவும் எந்தப் பிரச்சினையானாலும் அது பற்றித் தெரிந்துகொள்ள தம்மைச் சந்திக்க வருபவர்களிடம் கருத்துக் கேட்பார் காமராஜர். அவ்வாறு கேட்டறிவதன் மூலம் மக்களின் எண்ணத்தைக் கணித்துவிடுவார். ஒருமுறை கோவையில் அரசின் உதவியோடு தனியார் மருத்துவக் கல்லூரி திறக்க முயற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதுதொடர்பான கோப்பு காமராஜர் பார்வைக்கு வந்தது.
- “லாப நோக்கத்தோடு தனியார் மருத்துவக் கல்லூரி நடத்த, அரசாங்கம் ஏன் பணத்தை வழங்க வேண்டும்? அதற்கு அரசாங்கமே ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கலாமே” என்று கூறி, அரசாங்கமே புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க வழிவகுத்தார். அவ்வாறு உருவானதுதான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி.
- காமராஜர் எதைச் செய்தாலும் அதை விளம்பரப்படுத்த மாட்டார். அவரது மறைவுக்குப் பிறகு அதுதான் புகழாக உருவெடுத்தது. பேரையும்புகழையும் அவர் விரும்பாவிடினும், அவரைத் தேடி அவை வந்தன. மேடை நிகழ்ச்சியின்போது காமராஜரைப் பேச்சாளர்கள் அதீதமாகப் புகழ்ந்தால், அவர் கூச்சப்படுவார். இருப்புக்கொள்ளாமல் நெளிவார். ‘அப்பா...! வேறு ஏதாவது பேசு... போதும்!’ என்று நறுக்கென்று கூறிவிடுவார். ‘அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு!’ என்றார் வள்ளுவர். அதற்கு இலக்கணமானவர் காமராஜர்.
பத்திரிகையாளர் சுதந்திரம்:
- பத்திரிகைகளில் நாள்தோறும் தங்கள் பெயர், ஒளிப்படம் வர வேண்டும் எனப் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ஆசைப்படுவார்கள். அதற்காகச் சிலர் பத்திரிகை அலுவலகங்களைத் தொடர்புகொண்டு, “என் செய்தியை வெளியிடவில்லையே, ஏன்?” என்று கேட்பார்கள். அதை வெளியிடச் சொல்லி ஆசிரியர் குழுவிடம் கெஞ்சுவார்கள்.
- ஆனால், காமராஜர் அப்படிப்பட்டவர் அல்ல. அவரைச் சந்திக்க, அவரைப் பேட்டி எடுக்க பத்திரிகை நிருபர்கள் எப்போது வேண்டுமானாலும் அவர் இல்லத்திற்கு வரலாம். அவர்களுக்கு அவர் அனுமதி அளித்திருந்தார். கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி சண்டை, கருத்து வேறுபாடு என எதைப் பற்றியும் அவரிடம் கேள்வி கேட்கலாம். நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்குக் கோபப்படாமல் நிதானமாகப் பதிலளிப்பார்.
- எந்த விஷயமானாலும் ஒளிவுமறைவின்றி விளக்கமாகச் சொல்வார். ஆனால், ஒரு நிபந்தனை விதிப்பார். அது, “நீங்கள் பத்திரிகைக்காரர்கள். நாட்டில் நிகழும் எல்லா விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவும் சொல்கிறேன். ஆனால், இதையெல்லாம் ‘பேட்டி’ என்றோ, ‘தகவல்’ என்றோ என் பெயரில் பிரசுரிக்கக் கூடாது. எனக்குப் பெயரும் வேண்டாம், புகைப்படமும் வேண்டாம்” என்ற நிபந்தனையுடன் ஒளிவுமறைவில்லாமல் மனம்விட்டுப் பேசுவார்.
நாட்டையே சொத்தாக மதித்தவர்:
- தமிழ்நாட்டு முதலமைச்சராக காமராஜர் இருந்தாலும்கூட, வாடகை வீட்டில்தான் அவர் வாழ்ந்தார். அரசாங்க வீடு கேட்டுத் தன் இருப்பிடத்தை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. அதன் சுகபோகத்தை அவர் அனுபவித்ததில்லை. அதேபோல், அவ்வப்போது வாகனத்தையும் மாற்றிக்கொண்டதில்லை. கடைசிக் காலம் வரை எம்.டி.டி. 2727 காரைத்தான் அவர் பயன்படுத்தி வந்தார்.
- காமராஜர் மறைந்தவுடனே அவர் வசித்த வீட்டை, அந்த வீட்டின் சொந்தக்காரர் எடுத்துக்கொண்டார். அவர் பயன்படுத்தி வந்த காரை காங்கிரஸ் கட்சி எடுத்துக்கொண்டது. புகழுடலை அக்னி வாங்கிக்கொண்டது. ‘நாட்டையே சொத்தாக மதித்த தலைவர்’ என்று காமராஜரின் பெயர் மட்டும் வரலாற்றில் பதிந்துவிட்டது.
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 07 – 2024)