- நாகாலாந்தில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழக்கக் காரணமான, தவறான ராணுவ நடவடிக்கையில் தொடர்புடைய ராணுவ வீரர்கள்மீது அம்மாநிலக் காவல் துறை குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்க மறுத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.
- 2021 டிசம்பர் 4 அன்று நாகாலாந்தின் மோன் மாவட்டத்திலுள்ள ஓடிங் கிராமத்தில், லாரியில் பயணித்துக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களைத் தீவிரவாதிகள் என நினைத்து ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
- இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பொதுமக்கள் ஏழு பேரும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர். தவறான தகவலின் அடிப்படையில் இந்தச் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டதாக ராணுவம் ஒப்புக்கொண்டது.
- இது குறித்து விசாரிக்க மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில், ஒரு அதிகாரி உட்பட 30 ராணுவ வீரர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவர்கள்மீது பல்வேறு சட்டங்களின்கீழ் நாகாலாந்து காவல் துறை வழக்குப் பதிவுசெய்தது.
- இது தவிர ராணுவத்தின் சார்பில் வழக்கை விசாரிக்க தனி விசாரணை நீதிமன்றம் அமைக்கப் பட்டது. தற்போது மாநிலக் காவல் துறை நடவடிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்ட நிலையில், ராணுவ நீதிமன்றத்தின் விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- 1963இல் நாகாலாந்து தனி மாநிலமாக உருவெடுத்தது. 1995இல் அம்மாநிலம் முழுவதிலும் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (AFSPA) அமல்படுத்தப்பட்டது.
- இந்தச் சட்டம் சந்தேகத்துக்குரிய யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்வதற்கு ராணுவத்தினருக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தச் சட்டத்தின்கீழ் பணியாற்றும் ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும்.
- நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், வன்முறையைத் தூண்டி அமைதியைச் சீர்குலைக்கும் பிரிவினைவாதக் குழுக்களை ஒடுக்குவதற்காகவே இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
- ஆனால், இந்தச் சட்டம் வழங்கும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அப்பாவி மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள், வன்முறையாளர்களுக்கு ஆதரவு அதிகரிப்பதற்கே வழிவகுக்கின்றன. வடகிழக்கு மாநிலத் தேர்தல்கள் வரை எதிரொலிக்கும் இந்த விவகாரம், முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.
- இம்மாநிலங்களில் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஆயுதப் படைச் சட்டம் முற்றிலும் விலக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ள மத்தியஅரசு, இச்சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ள பகுதிகளைப் படிபடியாகக் குறைத்துவருகிறது. நாகாலாந்தில் 18 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
- மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாகாலாந்திலிருந்து ஆயுதப் படைச் சட்டத்தை முற்றிலும் நீக்கசாத்தியம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.
- இடைப்பட்ட காலத்தில் ஓடிங் கிராம துப்பாக்கிச்சூடு போன்ற நிகழ்வுகளில் தொடர்புடையவர்களாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
- அதுவே வடகிழக்குப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் அரசின் முயற்சிகளுக்கு மக்களின் நம்பிக்கையையும் முழுமையான ஒத்துழைப்பையும் பெற்றுத்தரும்.
நன்றி: தி இந்து (20 – 04 – 2023)