தவிர்க்க முடியாத தமிழ்க்கவி
September 21 , 2023
424 days
280
- இந்தியாவில் முதன்முதலில் மே நாளைக் கொண்டாடியவர் சிங்காரவேலர் என்று நாம் பெருமிதம் கொள்ளலாம். அதைப் போல், மே நாளை முதன்முதலில் வரவேற்றுக் கவிதை பாடிய கவிஞன் என்று தமிழ் ஒளியைக் கொண்டாடுவது அவசியம். தமிழ் ஒளி மே நாளை வரவேற்று 1949 மே மாதம் ‘முன்னணி’ இதழில் எழுதினார்.
- ‘கோழிக்கு முன் எழுந்து / கொத்தடிமை போல் உழைத்து / பாடுபட்ட ஏழை முகம் பார்த்து / பதைபதைத்து / கண்ணீர் துடைக்க வந்த / காலமே நீ வருக’ என்று தொடங்கிய நீண்ட கவிதை இப்படி முடிந்தது: ‘அன்பே இருட் கடலில் / ஆழ்ந்திருந்த வந்த முத்தே / முழு நிலவே மே தினமே / வாராய் நீ / வாராய் உனக்கென்றன் / வாழ்த்தை இசைக்கின்றேன்’
பாரதி வழியில்
- பாவேந்தர் பாரதிதாசனுக்குப் பிறகு போற்றப்பட வேண்டிய தமிழ்க் கவிஞர் தமிழ் ஒளி பாரதி. 21.09.1924 அன்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் என்னும் சிற்றூரில் பிறந்து, புதுச்சேரியில் வளர்ந்து, வாழ்ந்து அங்கேயே 23.03.1965 அன்று மறைந்தவர் தமிழ் ஒளி பாரதி.
- இடையில் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேல் அவர் சென்னையில் வாழ்ந்தார். பன்முகத்தன்மை கொண்ட அவர் 41 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தபோதும், தமிழ்க் கவிதைத் துறையில் நிலையான இடத்தைப் பிடித்துவிட்டார். விஜயரங்கம் என்பது அவருடைய இயற்பெயர். அதைத் தமிழ் ஒளி என்று மாற்றியவர் பாரதிதாசன் என்று சொல்லப்படுகிறது. தேசியக் கவி பாரதியையும், திராவிடக் கவி பாரதிதாசனையும் தன் முன்னோடிகளாக ஏற்றுக்கொண்டவர் அவர்.எனினும், அவரது இதயத்திலிருந்தது மார்க்சியமே. அது அவருடைய சென்னை வாழ்க்கையில் வெளிப்பட்டது.
மார்க்சியக் கவி
- ஆங்கிலப் பயிற்சி இல்லாத போதிலும், தமிழ் வழியே மார்க்சியம் அறிந்தஅவருக்கு, அதில் மிக ஆழமான புலமை இருந்தது. அகில இந்திய அளவில், அன்று தோன்றிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்குச் சென்னையில் ஒரு கிளையை எற்படுத்திச் செயல்பட்ட அவர், தன் நண்பருக்கு (பாலசுந்தரம்) மார்க்சியம் பற்றி விளக்கி எழுதிய 12.12.1949 தேதியிட்ட கடிதம், அவர் மார்க்சியத்தை உணர்வுபூர்வமாக மட்டும் உள்வாங்காமல், அறிவுபூர்வமாகவும் உள்வாங்கியிருப்பதைக் காட்டுகிறது.
- புதுச்சேரியிலிருந்து சென்னை வந்து, பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் ஜீவாவைச் சந்தித்து, ‘ஜனசக்தி’யில் கவிதைகள் எழுதினார். 1948 மார்ச் மாதம் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. ‘ஜனசக்தி’ நிறுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், கவிஞர் குயிலன் ‘முன்னணி’ பத்திரிகையை ஆரம்பித்தார். அதில் தமிழ் ஒளி எழுதினார். பின்னர், அந்தப் பத்திரிகையும் தடை செய்யப்பட்டது. சிறிது காலம் அவர் தலைமறைவு வாழ்க்கையும் வாழ நேரிட்டது.
மாறுபட்ட கவனம்
- அந்த நாள்களில் பொதுவுடைமைக் கட்சி அதிக முக்கியத்துவம் காட்டாத இரண்டு பிரச்சினைகள் பற்றி ஆர்வத்துடன் கவிதைகள் படைத்தார். பொதுவுடைமை இயக்கம் வர்க்கப் போராட்டத்தில் நம்பிக்கையுள்ள இயக்கம். வர்க்கப் போராட்டம் சாதியக் கட்டமைப்பை உடைத்துவிடும் என்பது அந்த இயக்கத்தின் பார்வை. அதனால்தான் சாதிப் பிரச்சினைகளில் அன்று முனைப்புக் காட்டவில்லை.
- ஆனால், தமிழ் ஒளி சாதிப் பிரச்சினையை முன்வைத்துக் காவியமே எழுதினார். அதுதான் ‘வீராயி’ காவியம். இந்தி எதிர்ப்பு திராவிடக் கட்சிகளின் வலுலான குரலாக இருந்தபோது, இந்தி எதிர்ப்புக் கவிதைகளை அப்போதே எழுதிய மார்க்சியவாதி அவர். தமிழ் ஒளி என்கிற பெயரை அவர் ஏற்றுக்கொண்டதே அவருடைய தமிழ்ப் பற்றுக்கு, உணர்வுக்குச் சான்றாகும். தன்னைத் தமிழன் என்று பெருமையோடு முன்வைத்தவர் அவர். அவருடைய ஒரு கவிதை ‘தமிழனே கேள்’ என்றுதான் தொடங்கும்.
- தமிழ் ஒளி கருத்தால் மட்டும் போராடியவர் அல்லர். களத்திலும் போராடியவர். தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அதைத் தன் கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார். அவர் கவிஞராக மட்டும் இல்லாமல் கூர்மையான விமர்சகராகவும் ஆய்வாளராகவும் விளங்கியிருக்கிறார். சிறார் இலக்கியத்திலும் தடம் பதித்திருக்கிறார். ஒன்பது காவியங்களுக்குச் சொந்தக்காரர் அவர். வறுமையில் வாடியபோதும், தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தார்.
- தமிழுலகம் தமிழ் ஒளியைப் பேச வேண்டும். அவர் காலத்தில் வாழ்ந்த பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை சொன்னதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்: “என்னுடைய காலத்தில், என் அருகில் இப்படி ஒரு மகத்தான கவிஞர் இருந்திருக்கிறார் என்பதை என்னால் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டதே!”
- தமிழ் ஒளியின் படைப்புகளைப் படியுங்கள். “இவ்வளவு காலம் படிக்காமல் போய்விட்டோமே” என்று நீங்களும் நிச்சயமாக நினைப்பீர்கள்!
- செப். 21: கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டுத் தொடக்கம்
- நன்றி: இந்து தமிழ் திசை (21 – 09 – 2023)
Post Views:
280