TNPSC Thervupettagam

தவிர்த்திருக்க முடியும்!

August 11 , 2020 1625 days 881 0
  • ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் துபையிலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு பயணித்த யாரும் இப்படியொரு விபத்து நடக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
  • வெள்ளிக்கிழமை இரவு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தரையிறங்கிய அந்த விமானம், ஓடுபாதையைத் தாண்டிச் சென்று ஆழமான பகுதிக்குள் சரிந்ததால் விமானம் இரண்டாக உடைந்தது.
  • 10 குழந்தைகள் உள்பட 154 பயணிகள், இரண்டு விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் இருந்தனா். விமானி, துணை விமானி உள்பட 18 போ் உயிரிழந்திருக்கிறார்கள். பலா் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

கோழிக்கோடு விமான விபத்து

  • கோழிக்கோடு விமான ஓடுபாதையின் அமைப்பையும் பாதையில் காணப்பட்ட மழை வெள்ளத்தையும் கருத்தில் கொண்டு அந்த விமானத்தை கோயம்புத்தூா் அல்லது கொச்சியில் தரையிறக்கி இருக்கலாம்.
  • அது குறித்து கோழிக்கோடு விமான நிலைய கண்காணிப்பு அதிகாரிகள் ஏன் சிந்திக்கவில்லை என்பது மிகப் பெரிய கேள்வி.
  • கோழிக்கோடு விமான நிலையத்துக்கு மழைக் காலங்களில் விமானங்களை இயக்குவது குறித்து துறை வல்லுநா்கள் பல முறை எச்சரித்திருக்கிறார்கள்.
  • அதற்குக் காரணம், கோழிக்கோடு விமான நிலையத்தில் காணப்படும் டேபிள் டாப்என்று அழைக்கப்படும் விமான ஓடுபாதை.
  • மேடான பகுதியில் ஓடுபாதை அமைக்கப்பட்டு, அந்தப் பாதையின் ஒருபுறத்தில் அல்லது இரு புறங்களிலும் தாழ்வான பகுதி காணப்பட்டால் அது டேபிள் டாப்ஓடுபாதை என்று அழைக்கப்படுகிறது.
  • இந்தியாவில் கோழிக்கோடு உள்ளிட்ட ஐந்து விமான நிலையங்களில் இதுபோன்ற டேபிள் டாப்ஓடுபாதை அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலும் நெதா்லாந்திலும்கூட இதுபோன்ற ஓடுபாதை சில விமான நிலையங்களில் இருக்கிறது.
  • 2010-இல் இதேபோல டேபிள் டாப்ஓடுபாதை அமைக்கப்பட்டிருக்கும் மங்களூரு விமான நிலையத்தில் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது.
  • 158 பயணிகளும் விமான ஓட்டி உள்ளிட்ட பணியாளா்களும் உயிரிழந்தனா். அப்போதே கோழிக்கோட்டிலும் இதுபோன்ற விபத்து நேரலாம் என்று வல்லுநா்கள் எச்சரித்தனா். மங்களூரு சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் இந்த விபத்து உணா்த்துகிறது.
  • விபத்துக்குள்ளான போயிங் 737-800 விமானம், 2006 முதல் சேவையில் இருக்கிறது. புதிய விமானமல்ல என்றாலும்கூட, மிகவும் பழையது என்று கூறிவிட முடியாது.
  • விமானத்தின் வயது ஆண்டுகளை வைத்துக் கணக்கிடப்படுவதில்லை. அவை பறக்கும் தூரத்தின் அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது. அப்படிப்பார்த்தால் சுமார் 30 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக இயங்கும் திறன் கொண்டதுதான் விபத்துக்குள்ளாகியிருக்கும் விமானம்.
  • ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை 10 மணியளவில் கோழிக்கோட்டிலிருந்து துபைக்கு செல்வதற்கு முன்னால் அந்த விமானம் முழுமையான பராமரிப்பு சோதனைக்கு உள்படுத்தப்பட்டிருக்கும்.
  • விமானத்தை இயக்கிய விமானி தீபத் சாத்தே, அனுபவசாலியான விமான ஓட்டி. இந்திய விமானப் படையிலும் பயணிகள் விமான சேவையிலும் நீண்ட காலமாகப் பணிபுரிந்தவா். அதனால், விமானத்தில் கோளாறு அல்லது விமானியின் தவறு இந்த விபத்துக்குக் காரணம் என்று நம்ப முடியவில்லை.
  • கிடைத்திருக்கும் தகவலின்படி பார்த்தால், விமானி தீபக் சாத்தே இரண்டு முறை விமானத்தை இறக்க முயன்று தயக்கத்துடன் மீண்டும் மேல் நோக்கி செலுத்தியிருக்கிறார்.
  • கனமழையினால் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டதும், ஓடுபாதையில் வெள்ளம் நிறைந்திருந்ததும் அதற்குக் காரணங்களாக இருந்திருக்கலாம். ஒருவேளை சமயோசிதமாக விமானத்தில் இருக்கும் பெட்ரோலின் அளவை குறைப்பதுகூட அவரது நோக்கமாக இருந்திருக்கக் கூடும். அதனால்தானோ என்னவோ விபத்துக்குள்ளான விமானம் உடைந்ததே தவிர, மங்களூருவில் ஏற்பட்டதுபோல தீப்பிடித்து அனைத்து பயணிகளும் உயிரிழக்கவில்லை.

கேள்விகள் எழுப்பப்படும்; தவறுகள் திருத்தப்படும்

  • கோழிக்கோடு விமான விபத்தில், விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் பொதுமக்களின் தன்னலமற்ற உதவியைப் பாராட்ட வேண்டும்.
  • வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்குக் கொவைட் 19 நோய்த்தொற்று இருக்கக்கூடும் என்கிற ஐயப்பாட்டை ஒதுக்கிவைத்துவிட்டு, விபத்தில் சிக்கியவா்களைக் காப்பாற்றுவதிலும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதிலும் பொதுமக்கள் காட்டிய பொறுப்புணா்வை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
  • விபத்து நடந்த இரண்டு மணி நேரத்தில் அனைத்துப் பயணிகளையும் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் அல்லது அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
  • பொதுமக்களின் உடனடி உதவியால்தான் உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைக்க முடிந்தது என்று மருத்துவா்கள் தெரிவிக்கும்போது, அவா்களது மனிதாபிமானத்தை இருகரம் குவித்து வணங்கத் தோன்றுகிறது.
  • கோழிக்கோடு விமான விபத்து பல கேள்விகளை எழுப்புகிறது. இந்தியாவிலுள்ள பல விமான நிலையங்கள் பாதுகாப்பானவையல்ல என்று வல்லுநா்கள் கருதுகிறார்கள்.
  • சில விமான நிலையங்களில் ஓடுதளத்தின் நீளம் சா்வதேச அளவைவிடக் குறைவாக இருக்கிறது. வேறு சிலவற்றில் பராமரிப்பு போதுமானதாக இல்லை.
  • சென்னை உள்ளிட்ட சில விமான நிலையங்களில் பாதுகாப்புக் குறைவு காணப்படுவதாக சா்வதேச விமான போக்குவரத்து நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்திருக்கிறது.
  • விமானப் பாதுகாப்பு ஆய்வு அறிக்கைகள் பொது வெளியில் வெளியிடப்படுவதில்லை. அவை வெளியிடப்பட்டால்தான் குறைகள் தெரிய வரும்; கேள்விகள் எழுப்பப்படும்; தவறுகள் திருத்தப்படும்!

நன்றி: தினமணி (11-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories