TNPSC Thervupettagam

தவிர்த்திருக்க முடியும் 2025

March 14 , 2025 9 hrs 0 min 23 0

தவிர்த்திருக்க முடியும்!

  • ஏறத்தாழ 20 நாள்களுக்கும் மேலாக தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளிகள் இன்னும்கூட மீட்கப்படாமல் இருப்பது மிகப்பெரிய சோகம். அவர்களில் பஞ்சாபைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவருடைய சடலத்தைத்தான் மீட்க முடிந்திருக்கிறது. ஏனைய ஏழு பேருடைய நிலைமை என்ன என்பது தெரியவில்லை.
  • சுரங்கப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களில் 300-க்கும் அதிகமானோர் ஜார்க்கண்ட், ஒடிஸô, பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களது சொந்த ஊரில் ரூ.300 தினக்கூலி கிடைக்கும்போது, சுரங்கப் பணியில் ரூ.600 கூலியாக வழங்கப்படுகிறது என்பதால் வேலை தேடி வந்திருப்பவர்கள். கடந்த 3 மாதங்களாக அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் தரப்படவில்லை என்பதும், அவர்கள் தங்குவதற்கு "டெண்ட்' அமைத்துக் கொடுத்திருப்பது அல்லாமல், சமையல் எரிவாயு இணைப்போ, பொதுச் சமையலறையோகூட வழங்கப்படவில்லை என்பதும் விபத்துக்குப் பிறகுதான் வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கிறது.
  • தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம், அலிமினெட்டி மாதவ ரெட்டி ஸ்ரீசைலம் இடதுபுறக் கால்வாய் திட்டம். இந்தத் திட்டம் நிறைவடைந்தால் உலகின் மிக நீளமான சுரங்கக் கால்வாயாக அது அமையும் என்று சொல்லப்படுகிறது. சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாயப் பரப்புக்குப் பாசன வசதியும், தெலங்கானாவில் உள்ள 516 கிராமங்களுக்குக் குடிநீர் வசதியும் வழங்கும் குறிக்கோளுடன் திட்டமிடப்பட்டிருக்கிறது ஸ்ரீசைலம் இடதுபுறக் கால்வாய் திட்டம்.
  • நிலத்தடி நீரில் ஃப்ளுரைட் கலந்துவிட்ட ஒன்றுபட்ட ஆந்திர மாநில பகுதிகளின் குடிநீர்த் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வழங்குவது என்பதுதான் 1983-இல் முன்மொழியப்பட்ட திட்டம். பிறகு 57.75 கி.மீ. நீளமுள்ள இரண்டு சுரங்கங்கள் மூலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அந்தத் தண்ணீரை ஸ்ரீசைலத்திலிருந்து நல்கொண்டாவுக்குக் கொண்டு செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
  • அடிலாபாத் வனவிலங்குகள் சரணாலயம், ராஜீவ் காந்தி புலிகள் சரணாலயம் இரண்டின் வழியாகவும், பூமிக்குக் கீழே 400 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்துத் தண்ணீரைக் கொண்டுசெல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்காக ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியால் 2008-இல் தொடங்கப்பட்டபோது அதன் திட்ட மதிப்பீடு ரூ.520 கோடிதான்.
  • நீண்ட காலதாமதத்துக்குப் பிறகு, தெலங்கானா மாநிலம் உருவான பிறகுதான் திட்டம் மீண்டும் வேகமெடுத்தது. ரூ.4,600 கோடி திட்ட மதிப்பீட்டில் தோண்டப்படும் 44 கி.மீ. சுரங்கப் பணியில் 35 கி.மீ. முடிவடைந்திருக்கிறது. சுரங்கப் பணி முடிவடைவதற்கான இலக்கு இதுவரையில் ஆறு முறை தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு சுரங்கப் பணியில் உள்ள சிரமங்களும், இடர்களும்தான் காரணம்.
  • பூமிக்கடியில் சுரங்கம் அமைப்பது எளிதாக இருக்கவில்லை. சுரங்கத்துக்குள் ஆங்காங்கே நீர்க்கசிவு ஏற்படுவதும், சுற்றிலும் உள்ள பாறைகள் வலுவிழந்து இடிந்து விழுவதும், சுரங்கத்துக்குள் சேர்ந்த மண்ணை அகற்றுவதும் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன.
  • உத்தரகண்ட் மாநிலம், சில்க்யாரா சுரங்கத்துக்கும், தெலங்கானா சுரங்கத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அது சாலைப் பணியில் மலையைக் குடைந்து உருவாக்கப்படும் சுரங்கம் என்பதால், வெளியேற இருபுறமும் வழியுண்டு. தெலங்கானா சுரங்கம் என்பது பூமிக்குக் கீழே 400 மீட்டர் ஆழத்தில் தோண்டப்படுவது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து 13.93 கி.மீ. தூரமும், எதிர்ப்புறத்தில் உள்ள திண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 20.43 கி.மீ. தூரமும் சுரங்கம் தோண்டப்பட்டுவிட்டது. இடையே உள்ள 9.55 கி.மீ. தூரமும் தோண்டப்பட்டால் பணி நிறைவடைந்துவிடும். அந்த நிலையில்தான் விபத்து நிகழ்ந்திருக்கிறது.
  • இந்திய ராணுவம்; கடற்படை; எல்லைப் பாதுகாப்புப் படை; தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள்; சிங்கரேணி சுரங்கத்தினர் என்று 11 குழுக்கள் இரவு பகலாக உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கப் போராடி வருகின்றன. தொடர்ந்து கசிந்து கொண்டிருக்கும் தண்ணீரால் உள்ளே சகதியாகி இருப்பதால் மீட்புப் பணி எளிதாக இல்லை.
  • உத்தரகண்ட் சுரங்க விபத்தைத் தொடர்ந்து, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவுறுத்தலின்பேரில், நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் சுரங்கப் பணிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே எச்சரிக்கை உணர்வு ஸ்ரீசைலம் கால்வாய் சுரங்கப் பணியில் இல்லாமல் போனது துரதிருஷ்டம்.
  • சுரங்கப் பணி என்றில்லை, திட்டமிடப்படும் எல்லா வளர்ச்சிப் பணியிலும் வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்குப் போதிய திறன்சார் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அதேபோல, பாதுகாப்பு குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் தகவல் தொடர்பு வசதி வழங்கப்படுவதில்லை. ஒப்பந்ததாரர்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுரங்கத்துக்குள் தொழிலாளர்களின் நடமாட்டம், சுரங்கத்தில் உள்ள காற்றின் தரம்,
  • நீர்க்கசிவு உள்ளிட்டவற்றைக் கண்காணித்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் முறையைக் கடைப்பிடிப்பதில்லை.
  • செயற்கை நுண்ணறிவு வந்துவிட்ட 21-ஆம் நூற்றாண்டில், சுரங்க விபத்துகள் தவிர்க்க முடியாதவை என்று நாம் கடந்து போக முடியாது!

நன்றி: தினமணி (14 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories