- பதினாறாவது மக்களவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து காலாவதியான 46 மசோதாக்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது என்று பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது. இன்று தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பல மசோதாக்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
- மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி, நிறைவேற்றுவதன் மூலம்தான் அரசு செயல்படுகிறது. மசோதா நிறைவேறும்போது அது சட்டமாகிறது. மசோதாக்கள் நிறைவேறாமல் தேங்கிக் கிடந்தால் அதன் பாதிப்பை நிர்வாகமும் மக்களும் எதிர்கொள்ள நேரிடும். இதனால், ஏற்படும் இழப்பு குறித்த புரிதல்பரவலாக இல்லாமல் இருக்கிறது.
2016-17 நிதியாண்டில்
- 2016-17 நிதியாண்டில் மட்டும் மின் பகிர்வு மற்றும் மின் விநியோகத்தின் மூலம் ஏற்பட்ட மின்சக்தி இழப்பு 25 லட்சம் யூனிட்டுகள். அதாவது, அந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மொத்தமின்சாரத்தில் 42% மின் பகிர்விலும் விநியோகத்திலும் வீணாகியிருக்கிறது. அரசின் ஒப்புதல்படி மின் பகிர்விலும், மின் விநியோகத்திலும் ஏற்படும் இழப்பில் 1% குறைந்தால், அதன் மூலம் ரூ.4,146.60 கோடி இழப்பு குறையும்.
- 2007-2008 முதல் 2016-2017 வரை 21,29,129 ஜிகாவாட் மணிகள் அளவிலான மின்சாரத்தை மின் பகிர்வு மற்றும் மின்விநியோகத்தின் மூலம் இந்தியா இழந்திருக்கிறது.
- எப்போதோ சட்டம் இயற்றி, திட்டமிட்டு முறையான நடவடிக்கைகளின் மூலம் மின் பகிர்வு, மின் விநியோகத்தால் ஏற்படும் இழப்பைக் குறைத்திருக்க முடியும். 2014 டிசம்பர் 19-ஆம் தேதி, மின்சாரம் (திருத்த) மசோதா 2014 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மசோதா மின் கசிவு, முறையற்ற மின் கணக்கெடுப்பு, மின் கட்டண வசூல் முறை ஆகியவற்றை எதிர்கொள்ளவழிகோலியிருந்தது. மின்சாரம் (திருத்த) மசோதா 2014 நிலைக் குழுவால் விவாதிக்கப்பட்டு, மீண்டும் நாடாளுமன்றத்துக்கு மே 2015-ஆம் ஆண்டு தரப்பட்டுவிட்டது.
மசோதா
- மறுபடியும் அறிமுகப்படுத்துவதற்குக் காத்திருக்கும் இன்னொரு மிக முக்கியமான மசோதா மோட்டார் வாகனங்கள் (திருத்த) மசோதா. பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017 ஏப்ரல் மாதம் மக்களவையால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
- போக்குவரத்துத் துறையில் மிகப் பெரிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வருவதற்காகப் பல மாத விவாதங்களுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட மசோதா இது. 100% இணையநிர்வாகம், ஓட்டுநர் உரிம சான்றிதழ் முறைகேடுகளைத் தடுத்தல், வாகனத் திருட்டு, போக்குவரத்து விதி மீறல்கள் ஆகியவை இந்த மசோதாவின் மூலம் எதிர்கொள்ளப்படுகின்றன.
விபத்துகள்
- கிரீன்லேண்ட் என்கிற நாட்டின் மக்கள்தொகையைப் போல் மூன்று மடங்கு எண்ணிக்கையில் இந்திய சாலைகளில் ஆண்டுதோறும் விபத்தில் சிக்கி மடிகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரத்தைப் பார்த்தால் எந்த அளவுக்கு சாலை விபத்துகளால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்பது தெரியும். 48 லட்சம் சாலை விபத்துகளில் 10 ஆண்டுகளில் 13,82, 880 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விபத்துக்கான காரணம் பலவாக இருந்தாலும், மோட்டார் வாகனச் சட்டம் சரியாக அமல்படுத்தப்படவில்லைஎன்பதும், அதன் சட்டப் பிரிவுகள் தெளிவாக இல்லை என்பதும்தான் காரணம்.
- மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா 2016 சாலைபோக்குவரத்துத் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை விரிவாகவும், தெளிவாகவும் எதிர்கொள்கிறது. சாலை பாதுகாப்பு விதிகள், வாகன உரிமத்துக்கான நடைமுறைகள், மின்னணுக் கண்காணிப்பு, காப்பீடு, வாகனங்களின் தகுதி சோதனை, குறைபாடுகளுக்கான பிழைக் கட்டணம் ஆகியவை இந்த மசோதா சட்டமாக்கப்படும்போது, தெளிவும், கடுமையும் பெறும்.
- 2016 ஆகஸ்ட் 9-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, இரண்டு குழுக்களால் பரிசீலிக்கப்பட்டுபிப்ரவரி 2017-இல் அவைக்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் முக்கியமான மசோதாக்களில் இதுவும் ஒன்று. முத்தலாக் விவாகரத்து முறையைத் தடை செய்யும் முஸ்லிம் மகளிர் (திருமண உரிமைப் பாதுகாப்பு) மசோதா, இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா, பாலியல் குற்றங்களில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் போக்சோ திருத்த மசோதா, மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, மனித உரிமைப் பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.
ஜனநாயக நாடு
- உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று நாம் கூறிக்கொள்வது வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும்தான். உண்மையான ஜனநாயகம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டமக்கள் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டு முறையாகவும், விரைவாகவும் சட்டங்கள் இயற்றப்படுவதன் மூலம் நிர்வாகம் நடத்தப்படுவது என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.
- மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதை எதிர்க்கட்சிகள் தங்களது வெற்றியாகக் கருதுவதும், மசோதாக்கள் காலாவதியாகிப் போவதைப் பற்றிக் கவலைப்படாமல் ஆளும் கட்சி ஆட்சியில் தொடர்வதும் முறையான ஜனநாயகம் அல்ல.
- இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும்பிரதமர் நரேந்திர மோடி அரசால், காலாவதியான மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்படுவது வரவேற்புக்குரியது!
நன்றி: தினமணி (17-06-2019)